"இனி அன்னம் - தண்ணீர் புழங்க கூடாது".. 7 குடும்பத்தை ஊரை விட்டு ஒதுக்கி வைத்த கிராமம்.. ஷாக் காரணம்
பெங்களூர்: கர்நாடகாவில் ஹனுமன் ஒகுலி திருவிழாவிற்கு ரூ.600 நன்கொடை கொடுக்க மறுத்த 7 குடும்பத்தினரை கிராம மக்கள் ஊரை விட்டு ஒதுக்கி வைத்துள்ளனர். அவர்களுடன் அன்னம் -தண்ணீர் புழங்க கூடாது. மளிகை கடைகளில் பொருட்கள் வழங்க கூடாது. வீடுகளில் நடக்கும் சுபநிகழ்ச்சி, துக்க நிகழ்ச்சிகளுக்கு செல்லக்கூடாது என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
80ஸ், 90ஸ்களில் வெளியான தமிழ் சினிமாக்களில் ஊர் கட்டுப்பாட்டை மீறுவோரை ஊரை விட்டு விலக்கி வைக்கும் சம்பவங்கள் தொடர்பான காட்சிகள் அதிகம் இடம்பெற்றிருக்கும். ஏனென்றால் அப்போது பல கிராமங்களில் அத்தகைய நடைமுறைகள் பின்பற்றப்பட்டு வந்தது.

தற்போது அந்த நடைமுறைகள் குறைந்து இருந்தாலும் கூட முற்றிலுமாக ஒழிக்கப்படவில்லை என்பதற்கு சாட்சியாக தான் கர்நாடகாவில் ஒரு சம்பவம் நடந்துள்ளது.
நன்கொடை கொடுக்க மறுப்பு
அதாவது ஹனுமன் விழாவிற்கு நன்கொடை வழங்கவில்லை என்று கூறி ஒரு கிராமத்தில் 7 குடும்பங்கள் ஊரை விட்டு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. அவர்களுடன் 'அன்னம் - தண்ணீர் புழங்ககூடாது. அவர்களின் வீட்டு சுபநிகழ்ச்சி, துக்க நிகழ்ச்சிகளில் யாரும் பங்கேற்க கூடாது'' என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் கர்நாடகா மாநிலம் பாகல்கோட்டை மாவட்டம் ஜமகண்டி தாலுகா ஹூனசிகட்டி கிராமத்தில் தான் நடந்துள்ளது. இந்த கிராமத்தில் ஹனுமன் ஒகுலி திருவிழா கடந்த ஏப்ரல் 2ம் தேதி நடந்தது. இந்த திருவிழாவிற்கு அனைத்து குடும்பமும் ரூ.600 நன்கொடை வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.
7 குடும்பங்கள் ஒதுக்கி வைப்பு
இருப்பினும் அந்த கிராமத்தை சேர்ந்த ரயில்வே ஊழியர் எல்லப்பா சக்கனவர், அன்னப்பா கடபாட்டில், சித்தப்பா எண்ணி, கரிப்பா எண்ணி, எல்லப்பா, மல்லப்பா படகுர்கி, ராமப்பா ஆகியோர் ரூ.600 நன்கொடை வழங்கவில்லை. இதனால் அந்த கிராமத்தை சேர்ந்த பெரியவர்கள் இந்த 7 பேரின் குடும்பத்தையும் ஊரை விட்டு ஒதுக்கிவைத்துள்ளனர்.
என்னென்ன கட்டுப்பாடுகள்
இவர்கள் 7 பேரின் குடும்பத்தினருடன் யாரும் பேச கூடாது. அன்னம், தண்ணீர் புழங்க கூடாது. அவர்களின் வீடுகளில் நடக்கும் சுபநிகழ்ச்சிகள் மற்றும் துக்க நிகழ்ச்சிகளில் பங்கேற்க கூடாது. இந்த உத்தரவை மீறினால் அவர்களின் குடும்பமும் ஊரை விட்டு ஒதுக்கிவைக்கப்படும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளனர். அதுமட்டுமின்றி இந்த உத்தரவை ஹூனசிகட்டி கிராமத்தில் உள்ள அனைத்து மக்களும் அறிந்து கொள்ளும் வகையில் தெருத்தெருவாக மணியடித்தபடி ஒருவர் அறிவிப்பு செய்துள்ளார்.
மளிகை கடையில் பொருட்களுக்கு 'நோ'
அப்போது அந்த நபர், ஊரை விட்டு ஒதுக்கி வைத்த 7 குடும்ப தலைவர்களின் பெயர்களை சொல்லி, ''இவர்களின் குடும்ப நிகழ்ச்சிகளில் பூசாரிகள், பொதுமக்கள் யாரும் பங்கேற்க கூடாது. அவர்களுக்கு மளிகை கடைகளில் பொருட்கள் வழங்க கூடாது'' என்று தெரிவித்துள்ளனர். இதுபற்றி பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் பாகல்கோட்டை கலெக்டர் மற்றும் ஜமகண்டி உதவி ஆணையரிடம் புகார் அளித்துள்ளனர்.
விரைந்த அதிகாரிகள்
இதுபற்றி ஜமகண்டி உதவி ஆணையர் ஸ்வேதா பிடிகார் கூறுகையில், ''சம்பந்தப்பட்டவர்களிடம் இருந்து கார் வந்துள்ளது. இப்படியொரு நடைமுறை அங்கு இருப்பது எங்களுக்கு இதற்கு முன்பு தெரியாது. இந்த சம்பவம் பற்றி விசாரிக்க கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
தாசில்தார், சமூக நலத்துறை உள்பட பிற துறை அதிகாரிகளை ஹூனசிகட்டி கிராமத்துக்கு செல்லும்படி அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. இன்றைய தினம் விசாரணை நடத்த உள்ளனர். அதன்பிறகு அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது'' என்று தெரிவித்துள்ளார். அதன்படி இன்று அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications