கொரோனா உஷார்- கர்நாடகா ஜரூர்! எங்கெல்லாம் 'மாஸ்க்' கட்டாயம்? இன்று முதல் 'டெஸ்ட்' அதிகரிப்பு!
பெங்களூர்: கொரோனா பரவலைத் தடுக்க கர்நாடகா அரசு முழுவீச்சில் களமிறங்கி உள்ளது. கர்நாடகாவில் கொரோனா பரவலைத் தடுக்க முக கவசம் அணிவது உள்ளிட்ட அரசு புதிய வழிகாட்டுதல்களையும் அம்மாநில அரசு வெளியிட்டுள்ளது. கர்நாடகாவில் இன்று முதல் கொரோனா பரிசோதனை எண்ணிக்கை அதிகரிக்கப்படுகிறது.
உலக நாடுகளில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் தற்போது கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகிற ஆக்டிவ் கேஸ்கள் எண்ணிக்கை 2997. நாட்டிலேயே கேரளாவில்தான் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. கேரளாவை தொடர்ந்து தமிழ்நாடு, கர்நாடகாவிலும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரிக்கிறது. பெங்களூரில் மட்டும் 3 பேர் கொரோனாவால் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் பெங்களூரில் முதல்வர் சித்தராமையா நேற்று கொரோனா தடுப்பு தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினார். இதனைத் தொடர்ந்து கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பான புதிய வழிகாட்டுதல்களை கர்நாடகா அரசு வெளியிட்டது.
இதனடிப்படையில்,
- 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும்
- கர்ப்பிணிகள், சிறுநீரக பாதிப்பு உள்ளவர்கள் வெளியே செல்லும் போது முக கவசம் கட்டாயம் அணிய வேண்டும்
- கர்ப்பிணிகள், சிறுநீரக பாதிப்பு உள்ளவர்கள் வெளியே பொதுமக்கள் கூடும் இடங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும்
- பேருந்துகளில் பயணம் செய்வோர் அனைவரும் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும்
என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதேநேரத்தில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தற்போது வரை எந்த கட்டுப்பாடும் விதிக்கப்படவில்லை.
மேலும்,
- அரசு, தனியார் மருத்துவமனைகள் அனைத்தும் தயார் நிலையில் இருக்க வேண்டும்
- ஆக்சிஜன் சிலிண்டர், படுக்கைகள், மருந்துகள் பற்றாக்குறை இல்லாமல் இருக்க வேண்டும்
- தேவைப்படும் நிலையில் கொரோனா தடுப்பூசிகள் மீண்டும் போடப்படும்
- இதுவரை கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்கள் தற்போதாவது போட வேண்டும்
- இன்று முதல் கொரோனா பரிசோதனை எண்ணிக்கை 5 ஆயிரமாக அதிகரிக்கப்படும். ஆர்டிபிசிஆர் பரிசோதனை 3,500; ஆன்டிஜென் பரிசோதனை 1,500 ஆக இருக்கும்,
- பெங்களூரில் கொரோனா பரிசோதனை எண்ணிக்கை 1,000 ஆக உயர்த்தப்படும்.
- மாநிலங்களின் எல்லை மாவட்டங்களில் கொரோனா பரிசோதனை எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்கப்படும்.
- தேவைப்படும் நிலையில் கொரோனா தடுப்பூசிகள் கொள்முதல் செய்யப்படும்.
- கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு தேவையான நிதி ஒதுக்கப்படும்.
எனவும் கர்நாடகா மாநில அரசு தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications