அமுல் இங்கே வரக்கூடாது.. ஆனா நாங்க கேரளா போவோம்.. நந்தினிக்கு கிளம்பிய எதிர்ப்பு! அடுத்து என்ன
பெங்களூர்: கர்நாடகா அரசின் நந்தினி நிறுவனம் சில விற்பனை மையங்களை கேரளாவில் திறக்க உள்ளதாக அறிவித்த நிலையில், இதற்கு கடுமையான எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
கடந்த சில காலமாகவே இந்தியாவில் பால் பிராண்ட்களுக்கு இடையே தான் பிரச்சினை இருந்து வருகிறது. சில காலத்திற்கு முன்பு அமுல் நிறுவனம் பெங்களூரில் டெலிவரி சேவையை ஆரம்பிக்க இருந்த நிலையில், அதற்கு மிக பெரிய எதிர்ப்பு கிளப்பியது.
இதற்கிடையே கர்நாடகா பால் பிராண்டான நந்தினி கேரளாவில் ஒரு சில கடைகளை திறக்க உள்ளதாக தகவல் வெளியானது. கேரள அரசிடம் தனியாக ஒரு பிராண்ட் இருக்கும் நிலையில், இது அங்கே மிக கடுமையான எதிர்ப்பை கிளப்பியது.

கேரளா: இதற்கிடையே கேரளாவில் சில கடைகளை ஆரம்பிக்கும் முடிவை நந்தினி நிறுவனம் நிறுத்த முடிவு செய்துள்ளதாக கேரளாவில் பால் வளர்ச்சி துறை அமைச்சர் ஜே சிஞ்சுராணி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், "கேரளாவில் நந்தினி விற்பனை நிலையங்களை திறப்பதை நிறுத்த முடிவு செய்துள்ளதாக நந்தினி நிறுவன சிஇஓ என்னை தொடர்பு கொண்டு தெரிவித்தார். தேசிய டைரி டெவலப்மெண்ட் போர்டும் இந்த விவகாரத்தில் தலையிட்டுள்ளது" என்றார்.
இந்த விவகாரம் குறித்து ஆலோசிக்க கேரள பால் நிறுவனமான மில்மா தலைவர், மேலாளர் உள்ளிட்டோரை கர்நாடகாவுக்கு அனுப்பும் கேரளா திட்டமிட்டுள்ளது. முன்னதாக இந்த விவகாரத்தில் தலையிட வலியுறுத்தி கேரள அரசு மத்திய அரசுக்கு கடிதமும் எழுதியிருந்தது.
கடும் எதிர்ப்பு: கேரளாவின் மில்மா, கர்நாடகாவின் நந்தினி ஆகிய இரு நிறுவனங்களும் கூட்டுறவு விதிகளுக்கு உட்பட்டு செயல்படுவதாக அமைச்சர் ஜே சிஞ்சுராணி தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், "இப்பிரச்னை இப்போது தற்காலிகமாக ஓய்ந்துள்ளது. அவர்கள் எங்கள் மாநிலத்திற்குள் நுழைய முயன்றார்கள், இதன் காரணமாகவே நாங்கள் எதிர்ப்பு தெரிவித்தோம். அமுல் கர்நாடகாவுக்கு வந்தபோது, அவர்கள் எப்படி எதிர்ப்பு தெரிவித்தனரோ.. அதுபோல தான் நந்தினி கேரளாவுக்குள் வருவதை நாங்கள் எதிர்த்தோம்" என்றார்.
நந்தினி நிறுவனம் கேரளாவில் விற்பனை நிலையங்களை திறக்க எதிர்ப்பு தெரிவித்து, கேரள அரசு NDDB அமைப்பிடம் புகார் அளித்திருந்தது. கேரளாவில் விற்பனை நிலையங்களைத் திறக்க நந்தினி அனுமதி கோரவில்லை என்றும் இது குறித்து ஆராயுமாறு கேட்டுக் கொள்வதாக பால் கூட்டுறவு அமைச்சர் சிஞ்சுராணி கடிதம் எழுதியிருந்தார். நந்தினி நிறுவனத்திற்கு எதிராக மில்மா சார்பில் வழங்கப்பதிவு செய்யப்பட்டது.

மில்மா: இகு குறித்து மில்மா தலைவர் கே.எஸ்.மணி கூறுகையில், "குஜராத் பால் கூட்டுறவு கூட்டமைப்பின் அமுல் நிறுவனம் கர்நாடகாவில் அதன் சேவையை ஆரம்பிப்பதாக விளம்பரப்படுத்திய போது, அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால், இப்போது கர்நாடகாவில் நந்தினி நிறுவனமே கேரளாவின் சில பகுதிகளில் விற்பனை நிலையங்களை தொடங்கும் நடவடிக்கையில் இறங்கினர். இதை எப்படி நியாயப்படுத்த முடியும்? இது தற்போது இருக்கும் கட்டமைப்பையே தகர்த்துவிடும்" என்று கடுமையாக விமர்சித்திருந்தார்.
அதாவது குஜராத்தின் அமுல் நிறுவனம் கர்நாடகாவில் நுழைய கூடாது என்று அம்மாநில மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதேபோல இப்போது நந்தினி நிறுவனமும் தங்கள் மாநிலத்தில் நுழையக் கூடாது என்று கேரளாவில் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது. இந்தச் சூழலில் தான் இந்தத் திட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications