வருமானத்திற்கு அதிகமாக சொத்து! கர்நாடகாவில் ஐஏஎஸ் உள்பட 8 அதிகாரிகளின் வீடுகளில் ரெய்டு
பெங்களூர்: வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் பெண் ஐஏஎஸ் உள்பட 8 அரசு அதிகாரிகளின் வீடு, அலுவலகங்களில் லோக் ஆயுக்தா போலீஸார் நேற்றைய தினம் அதிரடியாக சோதனை நடத்தினர். அப்போது அவர்கள் அனைவரும் மொத்தமாக ரூ 37.41 கோடிக்கு சொத்துக்களை குவித்து வைத்தது தெரியவந்துள்ளது. ரெய்டில் என்னென்ன சிக்கியது என்பதை பார்க்கலாம்.
கர்நாடகாவில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்க்கும் (disproportionate assets) அரசு அதிகாரிகளின் வீடுகள், அலுவலகங்களில் லோக் ஆயுக்தா போலீஸார் சோதனை நடத்தி நகை, பணம் சொத்து ஆவணங்களை பறிமுதல் செய்வதும் அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்வதும் வாடிக்கையாகிவிட்டது.

அந்த வகையில் பெங்களூர் ரயில் உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிறுவன சிறப்பு துணை ஆணையரான ஐஏஎஸ் அதிகாரி வசந்தி அமர், பெங்களூர் மாநகராட்சியின் சி.வி.ராமன் நகர் மண்டல நிர்வாக என்ஜினியர் யரப்பா ரெட்டி, பெங்களூர் எம்.எஸ். பில்டிங்கில் உள்ள நகர திட்டமிடல் துறை அலுவலக உதவி இயக்குநர் பாகலி மாருதி, மைசூர் மாநகராட்சி நிர்வாக அலுவலக ஊழியர் வெங்கட்ராமா, தும்தூரில் உள்ள கர்நாடக தொழில்பகுதி மேம்பாட்டுக் கழக உதவி நிர்வாக என்ஜினியர் ராஜேஷ், கலபுரகியில் சுகாதாரத் துறை அதிகாரி சுனில் குமார், கொப்பால் தொழில்துறை மைய துணை இயக்குநர் மஞ்சுநாதசாமி ஆகிய 8 பேரும் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தகவல்கள் கிடைத்தன.
அதன்பேரில் 8 அதிகாரிகளின் வீடு, அலுவலகங்களில் நேற்று காலை 6 மணி முதல் ஒரே நேரத்தில் ரெய்டு தொடங்கியது. பெங்களூர், மைசூர், தும்கூர், கலபுரகி, கொப்பால், குடகு ஆகிய 6 மாவட்டங்களில் 41 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.
இந்த சோதனையின்போது கணக்கில் வராத கட்டு கட்டாக பணம், நகைகள், வெள்ளி பொருட்கள், விலை உயர்ந்த வாட்ச்கள் உள்ளிட்டவை சிக்கின. அது போல் சொத்து, நிலம் வாங்கி போட்டதற்கான ஆவணங்களும் கிடைத்தன. சுமார் 12 மணி நேரம் நீடித்த இந்த சோதனை மாலை 6 மணிக்கு முடிந்தது.
இதையடுத்து 8 அதிகாரிகள் வீடுகளில் இருந்து ரூ 37.41 கோடி பணம், நகை, வாகனம், சொத்து ஆவணங்கள் உள்ளிட்டவை சிக்கியதாக லோக் ஆயுக்தா தெரிவித்துள்ளது. ஐஏஎஸ் அதிகாரி பதவியில் இருந்த போது கடந்த ஆண்டு ஜூன் மற்றும் செப்டம்பர் காலகட்டத்தில், தாசனபுராவில் 10.2 ஏக்கர் நிலத்தை சட்டவிரோதமாக விடுவித்ததாக சமூக ஆர்வலர் பிரசாந்த் அளித்த புகாரின் பேரில் கடந்த 16 ஆம் தேதி வசந்தி அமர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
யார் யார் எவ்வளவு மதிப்பிலான சொத்துகளை குவித்தனர் என்பதை பார்க்கலாம்.
- யாரப்பா ரெட்டி- ரூ 2.62 கோடி
- பாக்லி மாருதி- ரூ 6.34 கோடி
- வெங்கட்ராமா- ரூ 3.71 கோடி
- ராஜேஷ் - ரூ 3.67 கோடி
- சுனில் குமார் - ரூ 4.34 கோடி
- சேக்கு சவுஹான்- ரூ 3.11 கோடி
- மஞ்சுநாத சாமி - ரூ 5.20 கோடி
- வசந்தி அமர்- ரூ 9.02 கோடி












Click it and Unblock the Notifications