"மராத்தியில் பேசு.." கர்நாடக மகாராஷ்டிர எல்லையில் உச்சக்கட்ட பதற்றம்! உண்மையில் என்ன நடந்தது! பகீர்
பெங்களூர்: கடந்த இரு நாட்களாகவே கர்நாடகா, மகாராஷ்டிரா எல்லையில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. மராத்தியில் பேசவில்லை என்று சொல்லி கர்நாடகாவை சேர்ந்த நடத்துனர் மீது நடந்த தாக்குதலே இதை ஆரம்பித்து வைத்துள்ளது. அதைத் தொடர்ந்து இரு மாநிலங்களை சேர்ந்த நடத்துநர்கள் மீதும் தாக்குதல் நடந்துள்ள நிலையில், அங்கு பதற்றம் அதிகரித்துள்ளது.
கர்நாடகா மகாராஷ்டிரா எல்லையில் உள்ள மாவட்மட் பெலகாவி. என்ன தான் கர்நாடகாவின் ஒரு மாவட்டமாக இருந்தாலும், இங்கு கணிசமான அளவுக்கு கன்னடம் பேசுவார் வசித்து வருகிறார்கள்.

மராத்தியில் பேசவில்லை என தாக்குதல்
இதற்கிடையே பெலகாவி மாவட்டத்தில் உள்ள மரிஹால் என்ற பகுதியில் மிக மோசமான சம்பவம் நடந்துள்ளது. அதாவது அங்கு கர்நாடகாவின் அரசு பேருந்தில் ஏறிய பெண் ஒருவர் மராத்தியில் பேசி டிக்கெட் கேட்டுள்ளார். இருப்பினும், அந்த நடத்துநர் தனக்கு மராத்தி மொழி புரியவில்லை என்றும், கன்னடத்தில் பேசுமாறும் கூறியிருக்கிறார். இதனால் இரு தரப்பிற்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் அந்த பெண்ணும் அவருடன் வந்த தோழரும் அந்த நடத்துநரை தாக்கியதாக கூறப்படுகிறது. ஆனால், அத்துடன் பிரச்சினை முடியவில்லை.
அதன் பிறகு கொஞ்ச நேரம் கழித்து வேறு ஒரு பெரிய கேங், பேருந்தை மறித்து நடத்துனரை மேலும் சரமாரியாக தாக்கியுள்ளனர். இதுவே பிரச்சினைக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது. இதில் நடத்துநர் அளித்த புகாரின் அடிப்படையில் தாக்குதலில் ஈடுபட்ட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அதேநேரம் நடத்துனர் தன்னிடம் அநாகரீகமாக நடந்து கொண்டதாக சிறுமி ஒருவர் புகார் அளித்ததன் பெயரில் அவர் மீது போக்சோ பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
பதில் தாக்குதல்
கர்நாடக நடத்துநர் மீதான தாக்குதலுக்கு பதிலடி தரும் வகையில் கர்நாடகாவின் சித்ரதுர்கா மாவட்டத்தில் உள்ள ஹிரியூர் தாலுகாவில் மகாராஷ்டிர அரசு பேருந்து ஓட்டுநர் மீது தாக்குதல் நடந்துள்ளது. அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் மகாராஷ்டிர அரசு பேருந்து ஓட்டுநரை தாக்கி, அவர் மீது கருப்பு பெயிண்டும் ஊற்றியுள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பாக பலரை போலீசார் கைது செய்துள்ளனர். இதுபோல மாறி மாறி நடந்த தாக்குதல் சம்பவங்களால் அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது.
போக்குவரத்து நிறுத்தம்
இதைத் தொடர்ந்து, கர்நாடகாவுக்கு இயக்கப்படும் அரசு பேருந்துகளின் சேவையை நிறுத்துவதாக மகாராஷ்டிர போக்குவரத்துத் துறை அமைச்சர் பிரதாப் சர்நாயக் அறிவித்துள்ளார். அதேபோல கர்நாடகாவும் மகாராஷ்டிர மாநிலத்திற்கான பேருந்து சேவைகளைக் குறைத்துள்ளது. இது தொடர்பாக மகாராஷ்டிர போக்குவரத்து கழகத்தில் பணிபுரியும் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், "இப்போது நிலைமை மோசமாக இருக்கிறது. இதனால் மகாராஷ்டிராவுக்கு செல்லும் பேருந்துகளின் எண்ணிக்கையை குறைத்துள்ளோம். மேலும் நிலைமையை சீராக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறோம்" என்றார்.
மேலும், போக்குவரத்தை மீண்டும் தொடங்குவது குறித்து மகாராஷ்டிர அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் யார் மீது தவறு என்பதை கண்டறியவும் விசாரணை நடைபெறுவதாகவும் அவர் தெரிவித்தார். இதற்கிடையே இன்று காலை கர்நாடகாவின் சொகுசு பேருந்து ஒன்றை மகாராஷ்டிராவில் வைத்து அடையாளம் தெரியாத சிலர் அடித்து நொறுக்கினர். இது பதற்றத்தை மேலும் அதிகரிப்பதாகவே இருக்கிறது.
கர்நாடகா மகாராஷ்டிரா மோதல்
பெலகாவி கணிசமான மராத்தி மொழி பேசும் மக்கள்தொகையை கொண்ட மாவட்டமாகும். பெலகாவி மாவட்டம் தொடர்பாக இரு மாநிலங்களுக்கும் இடையே நீண்ட காலமாக பகை இருக்கிறது. பெலகாவி உள்ளிட்ட பல எல்லை கிராமங்கள் மகாராஷ்டிராவுக்கு சொந்தமானது என்றும் அது தவறுதலாக 1956ல் கர்நாடகாவுடன் இணைக்கப்பட்டதாக மகாராஷ்டிரா குற்றஞ்சாட்டுகிறது. இருப்பினும், இதை திட்டவட்டமாக மறுக்கும் கர்நாடகா, அவை கன்னடர்களின் தாய்நிலம் என்றே கூறி வருகிறது.












Click it and Unblock the Notifications