மகாராஷ்டிராவும் 'டிட்டோ' கர்நாடகா மாதிரிதான்.. அவசரத்தில் பதவியேற்பது.. அப்புறம் ராஜினாமா
Recommended Video
பெங்களூர்: மகாராஷ்டிராவில் சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாது என்று தெரிந்ததும், துணை முதல்வர் அஜித் பவாரும், முதல்வர் தேவேந்திர பட்னாவிசும், தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர். அப்படியே, கர்நாடகாவில் கடந்த வருடம் எடியூரப்பா என்ன செய்தாரோ, அதேபோலத்தான் இப்போது பட்னாவிசும் செய்துள்ளார்.
கர்நாடகாவில் 2018ம் ஆண்டு சட்டசபை பொதுத் தேர்தலின்போது பாஜக 105 இடங்களில் வெற்றி பெற்று, தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. ஆனால், 224 பேர் கொண்ட சட்டசபையில் பெரும்பான்மைக்கு தேவை 113 எம்எல்ஏக்கள் என்பதால், பெரும் அரசியல் குழப்பம் ஏற்பட்டது.
பெரும்பான்மையை உறுதி செய்யாமல், ஏதோ ஒரு தைரியத்தில், மே 17ம் தேதி, முதல்வராக பதவியேற்றார் எடியூரப்பா. ஆனால், வேறு எந்த எம்எல்ஏவும் அவருக்கு ஆதரவு அளிக்கவில்லை. எனவே பிற கட்சி எம்எல்ஏக்களை இழுக்க எடியூரப்பா முயன்றதாகவும், அவர் பேசிய ஆடியோ என்றும் கூறி அப்போது நிறைய ஆடியோக்கள் வைரலாகின.

உச்சநீதிமன்றம் அதிரடி
சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க 15 நாட்கள் கால அவகாசம் தந்தார் ஆளுநர். ஆனால் காங்கிரஸ் வழக்கு தொடரவே, அதை விசாரித்த சுப்ரீம் கோர்ட், 24 மணி நேரத்திற்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட்டது. இதையடுத்து மே 19ம் தேதி கர்நாடக சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு, நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

ராஜினாமா செய்த எடியூரப்பா
ஆனால், ஏற்கனவே தயாரித்த 13 பக்க உரையை உருக்கமாக வாசித்தார் எடியூரப்பா. அதில் மக்களுக்காக தான் செய்த நல்ல திட்டங்கள் பற்றி எடுத்துக்கூறி உருக்கமாக பேசினார். இதையடுத்து நம்பிக்கை கோரும் தீர்மானத்தை வாபஸ் பெறுவதாக அறிவித்த எடியூரப்பா, முதல்வர் பதவியை ராஜினாமா செய்வதாகவும் அறிவித்தார்.

2 நாள் முதல்வர்
இப்படித்தான் 2 நாட்களில் முதல்வர் பதவியை இழந்தார் எடியூரப்பா. இப்போது ஓராண்டு கழித்து, பிற கட்சிகளை சேர்ந்த 17 எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ததால் மீண்டும் முதல்வராகியுள்ளார். இடைத் தேர்தலில் சுமார் 7 தொகுதிகளையாவது வென்றால்தான் அவர் அங்கே ஆட்சியை தொடர முடியும்.

உச்சநீதிமன்றம் உத்தரவு
அப்படியே மகாராஷ்டிரா வருவோம். இங்கும் பட்னாவிஸ் கடந்த சனிக்கிழமை திடீரென முதல்வராக பதவியேற்றார். அஜித் பவார் துணை முதல்வரானார். இங்கும் சுப்ரீம் கோர்ட்டை நாடின எதிர்க்கட்சிகள். இன்று தீர்ப்பு வெளியானது. நாளைக்குள் சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

அஜித் பவார் ராஜினாமா
கர்நாடகா போலவே, மகாராஷ்டிராவிலும், எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் ஹோட்டல்களில் ஒரே இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். எனவே, குதிரை பேரத்துக்கு வழியில்லை. இந்த நிலையில்தான் அஜித் பவார் தனது துணை முதல்வர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். நம்பிக்கை வாக்கெடுப்பு தினத்தில் எடியூரப்பா ராஜினாமா செய்தார். ஒருநாள் முன்பாக அஜித் பவார் தனது பதவியை துறந்துள்ளார். மற்றபடி மேட்டர் எல்லாம் ஒன்றுதான்.

முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் ராஜினாமா
துணை முதல்வர் அஜித் பவார் மட்டுமில்லாமல், முதல்வர் தேவேந்திர பட்னாவிசும் அடுத்த அரை மணி நேரத்தில் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். இன்று மதியம் 3.30 மணிக்கு செய்தியாளர் சந்திப்பில் பட்னாவிஸ் இதை அறிவித்தார். ஆக மொத்தம், கர்நாடகாவிலும், மகாராஷ்டிராவிலும் ஆழம் தெரியாமல், அவசரப்பட்டு ஆட்சியமைத்துவிட்டு, ஆட்சியை இழந்துள்ளது பாஜக.












Click it and Unblock the Notifications