"10 கிமீ கடக்க 1.40 மணி நேரம்.." முடங்கிய பெங்களூர்.. பெங்களூர் அவுட்டர் ரிங் சாலையில் டிராபிக் ஜாம்
பெங்களூர்: இன்று பெங்களூர் அவுட்டர் ரிங் சாலையில் மிக மோசமான டிராபிக் பாதிப்பு ஏற்பட்டது. பிற்பகலில் ஆரம்பித்த டிராபிக் பாதிப்பு மாலையில் மிகவும் உச்சத்திற்குப் போனது. கொஞ்ச தூரத்தைக் கடக்கவே பல மணி நேரம் ஆனது. இரவு வரையிலும் கூட பல்வேறு இடங்களிலும் டிராபிக் பாதிப்பு மோசமாகவே இருப்பதாக நெட்டிசன்கள் புலம்பி வருகிறார்கள்.
கர்நாடகத் தலைநகர் பெங்களூர் எப்போதும் டிராபிக்கிற்கு பெயர் போனது. நாட்டிலேயே டிராபிக் நெரிசல் மிக்க நகரங்களில் ஒன்றாக பெங்களூர் இருக்கிறது. அங்கு நிலவும் டிராபிக்கை சரி செய்ய மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தாலும் கூட அதற்கு எந்தவொரு தீர்வும் கிடைப்பதாகத் தெரியவில்லை.

பெங்களூர் அவுட்டர் ரிங் சாலை
இதற்கிடையே இன்றைய தினம் பெங்களூர் அவுட்டர் ரிங் சாலையில் மீண்டும் மிகப் பெரிய டிராபிக் ஜாம் ஏற்பட்டுள்ளது. இந்த அவுட்டர் ரிங் சாலையில் தான் ஏகப்பட்ட தொழில்நுட்ப நிறுவனங்கள் அமைந்துள்ளன. இங்கு மாலை எதிர்பாராத விதமாக ஏற்பட்ட டிராபிக் நெரிசல் காரணமாக வாகனங்கள் பல கிமீ தூரத்திற்கு அணி வகுத்து நின்றன.
என்ன காரணம்
ஈகோஸ்பேஸ் சந்திப்பு அருகே பெங்களூர் மாநகரப் பேருந்து ஒன்று பழுதடைந்ததே இதற்கு முக்கிய காரணமாகும்.. பிற்பகலில் இந்த விபத்து ஏற்பட்டதாகத் தெரிகிறது. நேரம் செல்லச் செல்ல அங்குப் போக்குவரத்து அதிகரித்துள்ளது. இதனால் அப்பகுதியில் பல்வேறு சாலைகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மாலையில் அலுவலகத்தில் இருந்து வீடு திரும்பும் ஐடி ஊழியர்களின் வாகனங்களும் அதிகரிக்க நிலைமை மோசமானது.
இதற்கிடையே மாலை 4:43 மணியளவில், பெங்களூர் போக்குவரத்து போலீசார் ட்விட்டரில் ஒரு எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டது. கடபேசனஹள்ளி முதல் மரத்தஹள்ளி வரை போக்குவரத்து மெதுவாக நகர்வதாகவும், தேவராபிசானஹள்ளி மற்றும் பெல்லந்தூர் வரை கடும் நெரிசல் ஏற்பட்டிருப்பதாகவும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டது. இரவு வரையிலும் கூட அங்கு டிராபிக் பாதிப்பு தொடர்ந்தது.
உச்சத்தில் டிராபிக்
நேரம் ஆக ஆக டிராபிக் நெரிசல் அதிகமான நிலையில், போக்குவரத்து நெரிசல் குறித்த போட்டோக்களையும் வீடியோக்களையும் பெங்களூருவாசிகள் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்தனர். நெட்டிசன்கள் பலரும் ஒரு பேருந்து பழுதானால் எப்படி இவ்வளவு பெரிய டிராபிக் பாதிப்பு ஏற்படும் என கேள்வி எழுப்பினர்.
நெட்டிசன் ஒருவர் இன்று அவுட்டர் ரிங் சாலையில் 10 கி.மீ தூரத்தைக் கடக்க 1 மணி நேரம் 40 நிமிடங்கள் ஆனதாகக் குறிப்பிட்டார். இன்னொரு நபர் ப்ரூக்ஃபீல்டிலிருந்து சர்பூர் சாலை வரை 12 கி.மீ தூரத்தைக் கடக்க 2 மணி நேரம் 10 நிமிடங்கள் ஆனது எனப் பதிவிட்டுள்ளார். இன்னொரு நபர், ஒரே ஒரு பேருந்து சாலையின் நடுவில் நின்றதால், ஒட்டுமொத்த பெங்களூரும் பல மணி நேரம் கண்ணீர் வடிக்கிறது எனப் பதிவிட்டுள்ளார்.
மெட்ரோ பணிகள்
கடந்த வாரம் தான் மெட்ரோ பணிகள் காரணமாக வெளிவட்டச் சாலையில் குறிப்பிட்ட பகுதிகள் மூடப்படும் என அறிவிப்பு வெளியாகி இருந்தது. 9வது மெயின் சாலை சந்திப்பில் இருந்து 5வது மெயின் சாலை சந்திப்பு வரையிலான பகுதி 45 நாட்களுக்கு மூடப்பட்டிருக்கும் எனக் கூறப்பட்டு இருந்தது. இந்தச் சூழலில் ஒரே வாரத்தில் ஒரு பேருந்தில் பிரேக் டவுன் ஏற்பட்டதால் ஒட்டுமொத்த நகரமும் முடங்கியது.
வேகமான நகர்மயமாக்கல் மற்றும் வளர்ந்து வரும் ஐடி துறை காரணமாக, பெங்களூரின் மக்கள் தொகை இப்போது 1.3 கோடிக்கு மேல் அதிகரித்துவிட்டது. இதனால் பல லட்சம் வாகனங்கள் சாலைகளை ஆக்கிரமித்து பெரும் போக்குவரத்து சிக்கலை ஏற்படுத்துகின்றன. குறுகிய சாலைகள், போதியளவில் பொதுப் போக்குவரத்து இல்லாதது, கட்டுமானப் பணிகள் ஆகியவை நிலைமையை மேலும் மோசமாக்கியுள்ளது.












Click it and Unblock the Notifications