மும்பை டூ பெங்களூர்.. விமானக் கழிவறையில் சிக்கிய பயணி.. விமான பணிப்பெண் செய்த சூப்பர் செயல்
பெங்களூர்: மும்பையில் இருந்து பெங்களூருக்கு வந்தபோது விமான கழிவறையில் பூட்டிய கதவை திறக்க முடியாததால் பயணி ஒருவர் சுமார் 2 மணி நேரம் கழிவறையில் சிக்கி தவிக்கும் நிலை ஏற்பட்டது. அப்போது விமான பணிப்பெண் செய்த செயலை பலரும் பாராட்டி வருகிறார்கள்.
மும்பை விமான நிலையத்தில் இருந்து கடந்த ஜனவரி 15-ந்தேதி பொங்கல் அன்று இரவு 10.55 மணிக்கு பெங்களூருக்கு ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்தின் எஸ்.ஜி.-268 என்ற விமானம் புறப்பட வேண்டியது. ஆனால் சில காரணங்களால் ஸ்பைஸ் ஜெட் விமானம் தாமதமாக 16ம் தேதி அதிகாலை 2 மணிக்கு மும்பையில் இருந்து பெங்களூருக்கு புறப்பட்டது.

விமானம் புறப்பட்டு நடுவானில் சென்று கொண்டிருந்தது. விமானத்தின் உள்ளே 14டி என்ற சீட்டில் அமர்ந்திருந்த பயணி ஒருவர் விமானத்தின் கழிவறைக்கு சென்றுள்ளார். விமானத்தின் கழிவறையில் அவர் அமர்ந்திருந்த நிலையில், சற்றும் எதிர்பாராதவிதமாக கதவு தானாக பூட்டிக்கொண்டது. அந்த பயணி எவ்வளவு முயற்சித்தும் கழிவறை கதவை திறக்க முடியவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் எச்சரிக்கை பொத்தானை (பேனிக் பட்டன்) அழுத்தி இருக்கிறார்.
அலாரம் சத்தம் கேட்டு விமான பணிப்பெண்கள் மற்றும் ஊழியர்கள் விரைந்து வந்து கழிவறை கதவை திறக்க முயற்சித்துள்ளார்கள். ஆனால் அவர்கள் எவ்வளவு முயற்சித்தும் அவர்களாலும் கழிவறை கதவை திறக்கவே முடியவில்லை. இதனால் கழிவறையில் சிக்கிய பயணி பதற்றத்திற்கு ஆளானார். அப்போது விமான பணிப்பெண்கள் கழிவறையில் சிக்கி பரிதவித்த பயணிக்கு நம்பிக்கை கொடுத்து பேசினார்கள். தைரியம் அத்துடன் இதுபற்றி பெங்களூரு விமான நிலையத்துக்கும் உடனே தகவல் தெரிவித்தனர்.

அந்த சமயத்தில் பணிப்பெண் ஒருவர், ஒரு வெள்ளை காகிதத்தில், 'கழிவறை கதவை திறக்க அனைவரும் கடுமையாக முயற்சி செய்துவிட்டோம். ஆனால் கதவை திறக்க முடியவில்லை. நீங்கள் கவலைப்படாதீர்கள். இன்னும் சில நிமிடங்களில் விமானம் தரையிறங்க போகிறது. அதுவரை கழிவறையில் பொறுமையாக அமர்ந்திருங்கள். பதற்றப்படாமல் பாதுகாப்பாக இருங்கள். விமானம் தரையிறங்கியதும் என்ஜினீயர்கள் வந்து உடனே கழிவறையின் கதவை திறந்துவிடுவார்கள்' என எழுதி கதவில் இருந்த சிறிய துளை வழியாக கழிவறைக்குள் போட்டார். அதன்பிறகு அந்த பயணி பொறுமையாக அமர்ந்திருந்தார்.
இதையடுத்து விமானம் 16ம் தேதி அதிகாலை 3.45 மணிக்கு பெங்களூரு கெம்பேகவுடா விமான நிலையத்தில் தரையிறங்கியது. அப்போது அங்கு தயாராக இருந்த என்ஜினீயர்கள், விமானத்துக்குள் சென்று துரிதமாக செயல்பட்டு கழிவறை கதவை திறந்தார்கள். பின்னர் கழிவறைக்குள் சிக்கி பரிதவித்த பயணியை அவர்கள் பத்திரமாக மீட்டார்கள்.
மும்பை டூ பெங்களூர் இடையே கழிவறையில் சிக்கி சுமார் 2 மணி நேரம் பரிதவித்த பயணி , பத்திரமாக மீட்கப்பட்டதால் மகிழ்ச்சியுடன் புறப்பட்டு சென்றார். கழிவறையில் சிக்கிய பயணிக்கு தைரியம் கொடுத்த கடிதம் எழுதி போட்ட விமான பணிப்பெண்ணுக்கு பலரும் பாராட்டு தெரிவித்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Click it and Unblock the Notifications
