பல கோடி ரூபாயை லாபமாக பெறப்போகும்.. இன்போசிஸ் நாராயண மூர்த்தியின் 17 மாத பேரன்! அது எப்படி தெரியுமா?
பெங்களூர்: இன்போசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தி தனது பேரன் ஏகாக்ரா ரோஹன் மூர்த்திக்குக் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இன்போசிஸ் நிறுவனத்தின் 0.04% பங்குகளை எழுதி வைத்திருந்தார். அந்தப் பங்குகள் மூலம் 17 மாதக் குழந்தையான ஏகாக்ரா ரோஹன் மூர்த்திக்கு டிவிடெண்ட்டாக மட்டும் சுமார் ரூ.3.3 கோடி கிடைக்கிறது.
இந்தியாவில் டாப் ஐடி நிறுவனங்களில் ஒன்று இன்போசிஸ். இந்தியா மட்டுமின்றி உலகெங்கும் இன்போசிஸ் நிறுவனத்தின் செயல்பாடுகள் உள்ளன. இந்த இன்போசிஸ் நிறுவனத்தை நிறுவியவர் நாராயண மூர்த்தி. பல ஆண்டுகளாக இன்போசிஸ் தலைவராக இருந்த இவர், இப்போது ஓய்வு பெற்றுவிட்டார்.

நாராயண மூர்த்தி
நாராயண மூர்த்தி- சுதா மூர்த்தி தம்பதிக்கு அக்ஷதா மூர்த்தி மற்றும் ரோஹன் மூர்த்தி ஆகிய இரு பிள்ளைகள். அக்ஷதா மூர்த்தி இப்போது பிரிட்டனில் வசித்து வருகிறார். அவரது கணவர் தான் முன்னாள் பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக். இந்தத் தம்பதிக்குக் கிருஷ்ணா மற்றும் அனுஷ்கா ஆகிய இரு குழந்தைகள் உள்ளனர். இதற்கிடையே ரோஹன் மூர்த்தி- அபர்ணா கிருஷ்ண தம்பதிக்குக் கடந்த நவம்பர் 2023இல் பெங்களூரில் குழந்தை பிறந்தது.
நாராயண மூர்த்தி பேரன்
தனது பேரன் ஏகாக்ரா ரோஹன் மூர்த்திக்கு நாராயண மூர்த்தி தனது இன்போசிஸ் நிறுவனத்தின் பங்குகளில் 15 லட்சம் பங்குகளை, அதாவது மொத்தப் பங்குகளில் 0.04%ஐ, கடந்த சில மாதங்களுக்கு முன்பு கிப்ட் ஆக வழங்கினார். அப்போது அந்தப் பங்குகளின் மதிப்பு சுமார் ரூ.240 கோடிக்கு மேல் இருந்தது. இதற்கிடையே இப்போது இன்போசிஸ் நிறுவனத்தின் நான்காம் காலாண்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இதன் மூலம் 17 மாதங்களே ஆன ஏகாக்ரா ரோஹன் மூர்த்திக்கு ரூ.3.3 கோடி டிவிடெண்ட்டாக கிடைக்கவுள்ளது.
நேற்று வியாழக்கிழமை, இன்போசிஸ் நிறுவனம் ஒரு பங்கிற்கு ரூ.22 பைனல் டிவிடெண்ட் வழங்குவதாக அறிவித்திருந்தது. ஏகாக்ராவிடம் மொத்தம் 15 லட்சம் பங்குகள் இருப்பதால் அவர் டிவிடெண்டாக ரூ.3.3 கோடியைப் பெறுவார். இதன் மூலம் அவர் டிவிடெண்டாக மட்டும் இதுவரை பெற்ற தொகை ரூ.10.65 கோடியாக உயர்ந்துள்ளது.
பல கோடி சம்பாதித்த 17 மாத பேரன்
வெறும் 17 மாதங்களே ஆன ஏகாக்ரா இந்தியாவின் குறைந்த வயது கோடீஸ்வரர் என்ற பெயரைப் பெற்றவர். இந்த நிதியாண்டில் இன்போசிஸ் ஒரு பங்கிற்கு ரூ.49 என்ற மூன்று முறை டிவிடெண்ட் அறிவித்துள்ளது. அதன்படி, இந்த ஆண்டின் தொடக்கம் முதல் அவர் டிவிடெண்ட்டாக ரூ.7.35 கோடி பெற்றுள்ளார். இதன் மூலமே ஒட்டுமொத்தமாக அவர் டிவிடெண்ட்டாக பெற்ற தொகை ரூ.10 கோடிக்கு மேல் செல்கிறது.
அக்ஷதா மூர்த்தி
அதேபோல நாராயண மூர்த்தியின் மகளான அக்ஷதா மூர்த்தியிடம் இன்போசிஸ் நிறுவனத்தின் 3.89 லட்சம் பங்குகள், அதாவது 1.04% பங்குகள் உள்ளன. இதன் மூலம் அவருக்கு ரூ.85.71 கோடி டிவிடெண்டாக கிடைக்கும். அதேபோல நாராயண மூர்த்திக்கு டிவிடெண்ட்டில் இருந்து ரூ.33.3 கோடியும், அவரது மனைவி சுதா மூர்த்திக்கு ரூ.76 கோடி கிடைக்கும்.
ரெக்கார்ட் டேட்டாக மே 30 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதாவது மே 30ம் தேதி யாரிடம் இன்போசிஸ் பங்குகள் உள்ளதோ.. அவர்களுக்கு டிவிடெண்ட் வழங்கப்படும். ஜூன் 30ம் தேதி டிவிடெண்ட் கிரெடிட் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்போசிஸ் வரலாறு
1981ஆம் ஆண்டு வெறும் ரூ.10,000 முதலீட்டில் தொடங்கப்பட்ட நிறுவனம் தான் இன்போசிஸ். இப்போது அது இந்தியாவின் மிகப் பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றாக வளர்ந்துள்ளது. இன்போசிஸ் நிறுவனத்தை ஆரம்பித்தவர் நாராயண மூர்த்தி.. அவருக்கு இன்போசிஸின் ஆரம்ப நாட்களில் பக்க பலமாக இருந்தவர் சுதா மூர்த்தி. இன்போசிஸ் அறக்கட்டளையின் தலைவராக 25 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்த சுதா மூர்த்தி, டிசம்பர் 2021இல் ஓய்வு பெற்றார். இப்போது அவர் ராஜ்யசபா உறுப்பினராக உள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications