நிரூபிக்க முடியும்.. திருட்டு ஓட்டில் வென்றவர் தான் மோடி.. பெங்களூர் போராட்டத்தில் ராகுல் பேச்சு
பெங்களூர்: பெங்களூர் மத்திய லோக்சபா தொகுதியில் 1 லட்சத்து 250 ஓட்டுகள் திருடப்பட்டுள்ளதாக ராகுல் காந்தி நேற்று குற்றம்சாட்டினார். இதையடுத்து இன்று பெங்களூரில் நடந்த போராட்டத்தில் ராகல் காந்தி, ‛‛ பிரதமர் மோடி 25 தொகுதிகளில் 32 ஆயிரம் ஓட்டுகளில் வெற்றி பெற்று பிரதமராக இருக்கிறார். தேர்தல் ஆணையத்திடம் இருந்து டிஜிட்டல் வாக்காளர் பட்டியல் தரவுகளை பெற முடிந்தால் வாக்கு திருட்டு மூலமாக தான் மோடி பிரதமரானார் என்பதை நாங்கள் நிரூபிப்போம்'' என்று ஆக்ரோஷமாக கூறினார்.
டெல்லியில் நேற்று ராகுல் காந்தி பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது பாஜகவின் வெற்றிக்காக இந்திய தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கம், பெயர் சேர்ப்பு உள்ளிட்டவற்றை மேற்கொண்டு முறைகேடு செய்கிறது என்று பரபரப்பான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

குறிப்பாக கடந்த லோக்சபா தேர்தலில் பெங்களூர் மத்திய லோக்சபா தொகுதிக்குட்பட்ட மகாதேவபுரா சட்டசபை தொகுதியில் 1 லட்சத்து 250 ஓட்டுகள் திருடப்பட்டுள்ளது. இதனால் தான் பாஜக வேட்பாளர் பிசி மோகன் வெற்றி பெற்றதாக குற்றம்சாட்டினார். மேலும் அதற்கான ஆதாரங்களை வெளியிட்டார்.
ராகுல் காந்தி போராட்டம்
இதனை கண்டித்து பெங்களூர் சுதந்திர பூங்காவில் இன்று ராகுல் காந்தி போராட்டம் நடத்தினர். ராகுல் காந்தி தனது கையில் அரசியலமைப்பு புத்தகத்தை கையில் வைத்து பேசியதாவது:
கடந்த நாடாளுமன்ற தேர்தலில் நாம் அரசியலமைப்பை பாதுகாக்கும் பணி மேற்கொண்டோம். அரசியலமைப்பை உயிர்ப்புடன் வைத்திருக்கும் பணியை மேற்கொண்டோம். நம் நாட்டின் அரசியலமைப்பு புத்தகம் மகாத்மா காந்தி, அம்பேத்கர், ஜவஹர்லால் நேரு, வல்லபாய் படேல் உள்ளிட்டவர்களின் சிந்தனைகளை கொண்டுள்ளது. அதேபோல் பசவண்ணர், பூலே மற்றும் நாராயண குருவின் சிந்தனைகளையும் கொண்டுள்ளது.
ஒருவருக்கு ஒரு ஓட்டு தான்
இந்த அரசியலமைப்பு புத்தகத்தின் அடிப்படை என்னவென்றால் ஒரு மனிதனுக்கு ஒரு வாக்கு தான். நம் நாட்டில் பிறந்த அனைவருக்கும் ஒரு வாக்குரிமையை இந்த அரசியலமைப்பு வழங்குகிறது. ஆனால் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக தலைவர்களும், பிரதமர் மோடியும் அரசியலமைப்பு மீது தாக்குதல் நடத்த முயன்றனர். அரசியலமைப்புக்கு முடிவுரை எழுத முயன்றனர்.
லோக்சபா தேர்தலுக்குப் பிறகு, மகாராஷ்டிரா தேர்தல் நடந்தது. மகாராஷ்டிராவில் எங்கள் ‛மகா' கூட்டணி மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்றாலும், நான்கு மாதங்களுக்குப் பிறகு அங்குள்ள சட்டசபை தேர்தலில் பாஜக வெற்றி பெற்றது. சட்டசபை தேர்தலில் ஒரு கோடி புதிய வாக்காளர்கள் வாக்களித்து இருப்பதை கண்டுபிடித்தோம். இவர்கள் மகாராஷ்டிரா நாடாளுமன்ற தேர்தலில் ஓட்டுப்போடவில்லை. இதனால் தான் பாஜக மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் வென்றது.
மகாராஷ்டிராவில் என்ன நடந்தது?
மகாராஷ்டிரா நாடாளுமன்ற தேர்தல் மற்றும் மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் ‛இந்தியா' கூட்டணி பெற்ற வாக்குச்சதவீதம் குறையவில்லை. லோக்சபா தேர்தலில் எவ்வளவு ஓட்டு கிடைத்ததோ, அதே ஓட்டு சட்டசபை தேர்தலிலும் நமக்கு கிடைத்தது.
ஆனால் வாக்காளர் பட்டியலில் புதிதாக சேர்க்கப்பட்டவர்களின் வாக்காளர்கள் அனைவரும் பாஜகவுக்கு வாக்களித்துள்ளனர். இதனால் தான் ஏதோ தவறு நடந்து இருப்பதை உணர்ந்தோம். அரசியலமைப்பை நீங்கள் குறிவைத்தால் நாங்கள் உங்களை குறிவைப்போம்.
பெங்களூர் சென்ட்ரலில் என்ன நடந்தது?
கர்நாடகாவில் லோக்சபா தேர்தல் தொடர்பாக நாம் மேற்கொண்ட சர்வேயில் 15 முதல் 16 தொகுதிகள் கிடைக்கும் என்ற விவரம் கிடைத்தது. 16 சீட்டுகளில் வெற்றி கிடைக்கும் என்பது உறுதியாக கிடைத்தது. ஆனால் தேர்தல் முடிவில் 9 சீட் மட்டுமே கிடைத்தது. இதனால் சந்தேகம் ஏற்பட்டது. நாம் உண்மையிலேயே தோல்வியடைந்தோமா? நாங்கள் தேர்தல் ஆணையத்திடம் வாக்காளர் பட்டியலுக்கான soft copy கேட்டோம். ஆனால் அவர்கள் தர மறுத்தனர். வீடியோ உள்ளிட்ட பிற ஆதாரங்களை கேட்டே நிலையில் அதற்கான விதிகளையே மாற்றிவிட்டனர்.
பெங்களூர் மத்திய லோக்சபா தொகுதியின் தேர்தல் முடிவு பற்றி ஆராய்ந்தோம். குறிப்பாக அந்த லோக்சபா தொகுதியில் உள்ள மகாதேவபுரா சட்டசபை தொகுதி நிலவரத்தை ஆராய்ந்தோம். அப்போது தான் பாஜகவும், தேர்தல் ஆணையமும் தேர்ந்து கர்நாடகா லோக்சபா தேர்தலில் மோசடி செய்திருப்பது தெரியவந்தது. மொத்தம் மகாதேவபுரா சட்டசபை தொகுதியில் 6.5 லட்சம் ஓட்டுகள் இருந்தன. இதில் 1 லட்சத்து 250 ஓட்டுகள் திருட்டு ஓட்டுகளாகும். அதாவது 6ல் ஒரு ஓட்டு போலி வாக்காளர்கள் ஆவார்கள். 5 முறைகளில் ஓட்டு திருடப்பட்டுள்ளது.
திருட்டு வாக்கால் பிரதமரான மோடி
கர்நாடகாவில் நாங்கள் கண்டுபிடித்த புள்ளிவிவரம் முறைகேடுவுக்கான சான்றாக உள்ளது. இந்த உண்மையை கண்டுபிடிக்க எங்களுக்கு 6 மாதங்கள் வரை ஆனது. நரேந்திர மோடி 25 தொகுதிகளில் 34,000 வாக்குகள் வித்தியாசத்தில் வென்று பிரதமராக உள்ளார். தேர்தல் ஆணையத்திடம் இருந்து டிஜிட்டல் வாக்காளர் பட்டியல் தரவுகளைப் பெற முடிந்தால், திருட்டு வாக்குகளால் வென்று மோடி பிரதமரானார் என்பதை நாங்கள் நிரூபிப்போம்’’ என சாடினார்.












Click it and Unblock the Notifications