பாஜக + ஜேடிஎஸ் VS காங்கிரஸ்.. கர்நாடகா லோக்சபா தேர்தலில் வெல்வது யார்? இந்தியா டுடே சர்வே ரிசல்ட்
பெங்களூர்: வரும் நாடாளுமன்ற தேர்தலில் கர்நாடகாவில் பாஜக மற்றும் ஜேடிஎஸ் கூட்டணி அதிக இடங்களை கைப்பற்றும் எனவும், காங்கிரஸ் கட்சிக்கு ஒற்றை இலக்கத்தில் தான் வெற்றி கிடைக்கும் எனவும் இந்தியா டுடே கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் கடந்த தேர்தலை ஒப்பிடும்போது பாஜகவுக்கு இந்த தேர்தலில் கடினமானதாகவும், காங்கிரஸ் கட்சிக்கு சாதகமாகவும் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வரும் நாடாளுமன்ற தேர்தலில் கர்நாடகாவை பொறுத்தமட்டில் இருமுனை போட்டி தான் நிலவ உள்ளது. கடந்த முறை காங்கிரஸ், பாஜக, முன்னாள் பிரதமர் தேவேகவுடாவின் ஜேடிஎஸ் எனும் மதசார்பற்ற ஜனதாதளம் கட்சிகள் தனித்தனியாக போட்டியிட்டன.

ஆனால் வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணியில் ஜேடிஎஸ் கட்சி இணைந்துள்ளது. இதனால் இந்த தேர்தலில் கர்நாடகாவை பொறுத்தமட்டில் பாஜக + ஜேடிஎஸ் VS காங்கிரஸ் என இருமுனை போட்டியாக தான் நடைபெற உள்ளது.
இந்நிலையில் தான் கடந்த ஆண்டு நடந்த கர்நாடகா சட்டசபை தேர்தலில் பாஜகவை வீழ்த்தி காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடித்தது. இந்த உற்சாகத்தில் காங்கிரஸ் கட்சி உள்ளது. மேலும் காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்த பெண்களுக்கு மாதம் ரூ.2000, டிகிரி மற்றும் டிப்ளமோ முடித்து வேலையின்றி இருப்போருக்கான உதவித்தொகை, பஸ்களில் பெண்களுக்கான இலவச பயண திட்டம், 10 கிலோ இலவச அரிசி திட்டத்தை செயல்படுத்தி உள்ளது.
இதன்மூலம் காங்கிரஸ் கட்சி வரும் நாடாளுமன்ற தேர்தலில் அதிக இடங்களை கைப்பற்றும் வகையில் செயல்பட்டு வருகிறது. அதேவேளையில் பாஜக கடந்த சட்டசபை தேர்தலில் அடைந்த தோல்வியை மறந்து நாடாளுமன்ற தேர்தலில் அங்குள்ள 28 தொகுதிகளையும் கைப்பற்றும் வகையில் திட்டம் வகுத்து வருகிறது. இந்நிலையில் தான் இந்தியா டுடே செய்தி நிறுவனம் சார்பில் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தல் தொடர்பான கருத்து கணிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
அதாவது நாடாளுமன்ற தேர்தலையொட்டி நாட்டு மக்களின் மனநிலை என்ன? என்பது பற்றி Mood Of the Nation 2024 என்ற பெயரில் இந்தியா டுடே சார்பில் நாடு முழுவதும் சர்வே மேற்கொள்ளப்பட்டது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 15ம் தேதி முதல் 2024 ஜனவரி மாதம் 28 ம் தேதி வரை மொத்தம் 35,801 பேரிடம் கருத்துகள் கேட்கப்பட்டன. இந்த சர்வே முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளது.
இதில் கர்நாடகாவில் அதிக இடங்களை பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணி வெல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி மொத்தமுள்ள 28 நாடாளுமன்ற தொகுதிகளில் பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணி 24 தொகுதிகளை கைப்பற்றும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளையில் கர்நாடகாவில் கடந்த ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சி 4 தொகுதிகளில் மட்டுமே வெல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கருத்து கணிப்பின் மூலம் கர்நாடகாவில் பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணியின் கை தான் ஓங்கி இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் கூட கடந்த தேர்தல் என்பது பாஜகவுக்கு சறுக்கலாக தான் பார்க்கப்படுகிறது. ஏனென்றால் கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலில் பாஜக 25 தொகுதிகளில் வென்றது.
மீதமுள்ள 3 தொகுதிகளில் காங்கிரஸ் , ஜேடிஎஸ், மற்றும் சுயேச்சைகள் வெற்றி பெற்றனர். காங்கிரஸ் கட்சி சார்பில் பெங்களூர் புறநகர் தொகுதியில் டிகே சிவக்குமார் தம்பி டிகே சுரேஷ், ஹாசன் தொகுதியில் முன்னாள் பிரதமர் தேவேகவுடாவின் பேரனான பிரஜ்வெல் ரேவண்ணாவும், மண்டியா தொகுதியில் மறைந்த நடிகர் அம்பரீஷின் மனைவி சுமலதா சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தனர்.
கடந்த முறை காங்கிரஸ், பாஜக, ஜேடிஎஸ் கட்சிகள் தனித்தனியே போட்டியிட்டன. ஆனால் வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணியில் ஜேடிஎஸ் கட்சி உள்ளது. சுமலதா அம்பரீஷும் பஜகவுக்கு ஆதரவாக தான் இருக்கிறார். அப்படி இருந்தாலும் கூட பாஜக முந்தைய தேர்தலை ஒப்பிடும்போது ஒரு சீட் குறைவாக 24 தொகுதிகளில் மட்டுமே வெல்வார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications