அந்த பக்கம் சிவன்.. இந்த பக்கம் அனுமன்.. பாரத் ஜோடோ யாத்திரையில் ராகுல் சம்பவம்.. பெருகும் ஆதரவு!
பெங்களூர்: ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரை இன்று கர்நாடகாவில் நடந்தபோது சிவன், அனுமன் வேடமிட்டவர்கள் பங்கேற்றனர். அவர்களுடன் ராகுல் காந்தி கைக்கோர்த்து சென்ற படங்கள் இணையதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
இந்தியாவில் ஒரு காலத்தில் அசைக்க முடியாத சக்தியாக காங்கிரஸ் கட்சி இருந்தது. தற்போது அந்த கட்சி பல மாநிலங்களில் ஆட்சியை இழந்துள்ளது.
அதோடு நாடாளுமன்ற தேர்தலிலும் பாஜகவிடம் வெற்றியை இழந்துள்ளது. இதனால் 2024 நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் தனது செல்வாக்கை நிரூபிக்க போராடி வருகிறது. ராகுல் காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை நடைப்பயணத்தை துவக்கி உள்ளார்.

கர்நாடகாவில் நடைப்பயணம்
இந்தியா முழுவதும் கட்சி தொண்டர்களை உற்சாகப்படுத்தும் வகையில் ராகுல் காந்தி பாரத் ஜோடோ யாத்திரை எனும் இந்திய ஒற்றுமை நடைப்பயணம் கைக்கொடுக்கும் என ராகுல் காந்தி நம்புகிறார். கடந்த மாதம் 7 ம் தேதி கன்னியாகுமரியில் உள்ள காந்தி மண்டபத்தில் துவங்கிய நடைப்பயணம்தமிழ்நாடு, கேரளாவை கடந்து தற்போது கர்நாடகத்தில் நடைபெற்று வருகிறது.

1000 கிலோமீட்டரை கடந்த யாத்திரை
தற்போது வரை ராகுல் காந்தி 1000 கிலோமீட்டரை கடந்துள்ளார். இன்று 39 வது நாளாக பாரத் ஜோடோ யாத்திரை துவங்கியது. கர்நாடகாவின் பல்லாரி மாவட்டத்தில் உள்ள சங்கனக்கல்லு கிராமத்தில் ராகுல் காந்தி பாதயாத்திரையை துவங்கினர். இதில் வழக்கம்போல் ஏராளமானவர்கள் பங்கேற்றனர். கைகளில் காங்கிரஸ் கட்சியின் தேசியக்கொடியை ஏந்தி ஏராளமானவர்கள் பங்கேற்றனர்.

சிவன்-அனுமனுடன் ராகுல்
வழக்கம்போல் சிறுவர், சிறுமிகள் முதல் வயதானவர்கள் வரை அனைத்து தரப்பினரும் ராகுல் காந்தியுடன் சேர்ந்து யாத்திரை மேற்கொண்டனர். இந்த வேளையில் திடீரென்று இந்து கடவுளான சிவன் போன்றும், அனுமன் போன்றும் 2 பேர் வேடமிட்டு வந்தனர். அவர்களை ராகுல் காந்தியை சந்தித்து கைக்குலுக்கினர். மேலும் ராகுல் காந்தியின் கையை பிடித்தபடி அவர்கள் பாதயாத்திரையில் பங்கேற்றனர்.

எம்மதமும் சம்மதம்
பாரத் ஜோடோ யாத்திரையின்போது ராகுல் காந்தி அனைத்து மத வழிபாட்டு தலங்களுக்கும் சென்று வருகின்றார். எம்மதமும் சம்மதம் என்ற வகையில் அவர் செயல்பட்டு வருகிறார். இதனால் ராகுல் காந்தியின் பாரத் ஜேடோ யாத்திரைக்கு கர்நாடகாவில் வரவேற்பு அதிகரித்துள்ளது. மேலும், இந்து, கிறிஸ்தவ, முஸ்லிம் அமைப்புகளின் தலைவர்களை சந்தித்து பேசி வருகிறார். பல்வேறு விஷயங்கள் குறித்து ராகுல் காந்தி அவர்களிடம் விவாதிப்பதை வாடிக்கையாக வைத்துள்ளார். அந்த வகையில் தான் தற்போது இந்த சம்பவம் நடந்துள்ளது. இந்த படத்தை தற்போது காங்கிரஸ் கட்சியினர் சமூக வலைதளங்களில் வேகமாக பகிர்ந்து வருகின்றனர்.

வெறுப்புணர்வை அகற்ற..
இந்தியாவில் மதங்களுக்கு இடையே வெறுப்புணர்வை சிலர் தூண்டுவதாகவும், வெறுப்புணர்வை கைவிட்டு அனைவரும் ஒன்றிணைய வேண்டும் எனக்கூறி ராகுல் காந்தி கன்னியாகுமரில் இருந்து காஷ்மீர் வரை 12 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்கள் வழியாக 150 நாட்கள் நடைப்பயணம் மேற்கொண்டு வருகிறார். மொத்தம் 3,500 கிலோமீட்டரை ராகுல் காந்தி கடந்து ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகரில் நடைப்பயணத்தை முடிக்க உள்ளார். இன்று அவர் 39வது நாள் நடைப்பயணத்தை மேற்கொண்டார் என்பதும், அவரது நடைப்பயணம் நேற்று 1000 கிலோமீட்டரை கடந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications