தொழில் நுட்பத்திற்கான உலகின் மிகப் பெரிய இடமாக கர்நாடகா விஸ்வரூபம்.. பிரதமர் மோடி செம்ம பாராட்டு!
பெங்களூர்: தொழில் நுட்பத்திற்கான உலகின் மிகப் பெரிய இடமாக கர்நாடகா திகழ்கிறது என பிரதமர் மோடி பாராட்டி உள்ளார்.
இன்வெஸ்ட் கர்நாடகா 2022 என்ற கர்நாடகா மாநிலத்திற்கான சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாட்டை இன்று காணொலி காட்சி வாயிலாக தொடங்கி வைத்து பிரதமர் மோடி உரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், நேற்று கடைபிடிக்கப்பட்ட ராஜ்யோத்சவாவையொட்டி கர்நாடக மக்களுக்கு வாழ்த்துத் தெரிவித்தார். பாரம்பரியம் மற்றும் தொழில்நுட்பம், இயற்கை மற்றும் கலாச்சாரம், அழகான கட்டடக்கலை மற்றும் துடிப்பான ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு கர்நாடகா ஒருங்கிணைப்பாக திகழ்கிறது என்று பிரதமர் குறிப்பிட்டார்.
திறமை அல்லது தொழில்நுட்பம் என்றதும் 'பிராண்ட் பெங்களூரு' முன்னோடியாக திகழ்வது நினைவுக்கு வருகிறது என்பது இந்தியாவில் மட்டுமல்லாமல் உலகத்திற்கே தெரிந்தது என்று கூறினார். கர்நாடகாவில் முதலீட்டாளர்கள் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது குறித்து பிரதமர் மகிழ்ச்சி தெரிவித்தார். இது போட்டி மற்றும் கூட்டுறவு கூட்டாட்சிக்கு சரியான உதாரணம் என்று குறிப்பிட்டார்.

வேலைவாய்ப்பு அதிகரிக்கும்
உற்பத்தி மற்றும் தயாரிப்பு பெரும்பாலும் மாநில அரசின் கொள்கைகள் மற்றும் கட்டுபாட்டைச் சார்ந்தது என்று அவர் தெரிவித்தார். இந்த சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாட்டின் மூலம் மாநிலங்கள், குறிப்பிட்ட துறைகளை இலக்காக வைத்து மற்ற நாடுகளுடன் கூட்டாண்மையை ஏற்படுத்த முடியும் என்று கூறினார். இந்த மாநாட்டின் மூலம் ஆயிரக்கணக்கான கோடிகளில், கூட்டாண்மை திட்டமிடப்படுவது குறித்து அவர் மகிழ்ச்சி தெரிவித்ததுடன் இந்த மாநாடு மூலம் நாட்டின் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை அதிகரிக்கும் என்று தெரிவித்தார்.

வெளிநாட்டு முதலீடு
21-ம் நூற்றாண்டில் தற்போதைய சூழ்நிலையில் இந்தியா மட்டுமே முன்னோக்கிச் செல்வதாக பிரதமர் கூறினார். கடந்த ஆண்டு சாதனை அளவாக 84 பில்லியன் டாலர் அளவுக்கு வெளிநாட்டு முதலீடு இந்தியாவிற்கு கிடைத்ததாக குறிப்பிட்டார். இந்தியா பற்றி சர்வதேச அளவிலான பார்வை குறித்து குறிப்பிட்ட பிரதமர், இந்த நிச்சயமற்ற தருணத்தில் இந்திய பொருளாதாரத்தின் அடிப்படைகள் பற்றி உலகம் ஏற்றுக்கொண்டதாக கூறினார். இக்கட்டான சூழ்நிலையில் உலக நாடுகளுடன் இணைந்து இந்தியா செல்வதாகவும், உலக நாடுகளுடன் இணைந்து செயல்படுமாறு மற்ற நாடுகளை வலியுறுத்துவதாகவும் தெரிவித்தார். மருந்து விநியோக கட்டமைப்பில் தடைகள் ஏற்பட்ட போது, மருந்துகள் மற்றும் தடுப்பூசிகளை விநியோகம் செய்வது குறித்து உலக நாடுகளுக்கு இந்தியா உறுதி அளிக்க முடிந்ததாக குறிப்பிட்டார். சந்தைப்படுத்துதலில் இருந்து சிரமத்திற்கிடையே நம் நாட்டு மக்களின் ஆர்வத்தினால் உள்நாட்டு சந்தைகள் வலுவாக இருந்ததாக கூறினார்.

இந்தியா முன்னேற்றம்
சர்வதேச அளவில் நெருக்கடி நிலவிய போதிலும் இந்தியா சிறப்பாக திகழ்கிறது என்று நிபுணர்கள், பகுப்பாய்வாளர்கள், பொருளாதார நிபுணர்களும் பாராட்டியதாக பிரதமர் சுட்டிக்காட்டினார். நாள்தோறும் இந்தியப் பொருளாதாரத்தை மேலும் வலுப்படுத்துவதற்கு நம் அடிப்படையை வலுப்படுத்த நாம் தொடர்ந்து செயல்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார். இந்தியப் பொருளாதாரத்தின் தன்மையை புரிந்து கொள்ள வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார். கொள்கை மற்றும் அமலாக்கம் தொடர்பான விவகாரத்தில் நாட்டிற்கு சிரமம் ஏற்பட்டபோது கடந்த 9-10 வருடங்களில் மேற்கொள்ளப்பட்ட அணுகுமுறை மாற்றங்கள் குறித்து அவர் விவரித்தார். முதலீட்டாளர்களின் இக்கட்டான சூழ்நிலைக்கு பதில் முதலீட்டுக்கான சிவப்பு கம்பள சூழலை நாம் உருவாக்கியிருப்பதாக அவர் சுட்டிக்காட்டினார். சிக்கலான புதிய சட்டங்களுக்கு பதில் அதை நாம் சீர்படுத்தியுள்ளதாக கூறினார்.

கர்நாடகா இரட்டை எந்திர அரசு
கர்நாடகாவின் இரட்டை எந்திர அரசின் சக்தியின் பிரதிபலிப்பு குறித்து குறிப்பிட்ட பிரதமர், இம்மாநிலம் பல்வேறு துறைகளில், விரைவாக வளர்ச்சி அடைவதற்கு இதுவும் ஒரு காரணம் என்று கூறினார். எளிதாக வர்த்தகம் புரிய உகந்த மாநிலங்கள் மற்றும் அந்நிய நேரடி முதலீட்டுக்கான மாநிலங்களின் பட்டியலில் கர்நாடகா தொடர்ந்து முன்னணி வகித்து வருவதை அவர் உதாரணமாகத் தெரிவித்தார். இந்தியாவில் உள்ள 500 செல்வ வளம் மிக்க நிறுவனங்களில் 400 நிறுவனங்களும், 100-க்கும் மேற்பட்ட யூனிகார்ன்களில் 40-க்கும் மேற்பட்டவையும் கர்நாடகாவில் உள்ளதாக அவர் கூறினார். உலகில் மிகப் பெரிய தொழில்நுட்பத்திற்கான கேந்திரமாக கர்நாடகா குறிப்பிடப்படுகிறது என்று தெரிவித்த பிரதமர், தொழில்துறை, தகவல் தொழில்நுட்பம், ஃபின்டெக், உயிரித்தொழில்நுட்பம், ஸ்டார்ட் அப் மற்றும் நீடித்த எரிசக்தி ஆகியவற்றுக்கான தாயகமாக அது திகழ்கிறது என்று கூறினார். ஒவ்வொரு துறையிலும் வளர்ச்சிக்கான புதிய அத்தியாயம் எழுதப்படுவதாக அவர் தொடர்ந்து பேசினார். கர்நாடகாவின் பல்வேறு வளர்ச்சி குறித்த அளவுகள் இந்தியாவின் மற்ற மாநிலங்களின் சவாலாக விளங்குவதோடு சில நாடுகளுக்கும் அது சவாலாக திகழ்கிறது என்று கூறினார். உற்பத்தித் துறையில் இந்தியா புதிய கட்டத்தை அடைவதாக பிரதமர் தெரிவித்தார். தேசிய செமிகண்டக்டர் இயக்கம் மற்றும் தொழில்நுட்ப சுற்றுச்சூழல் அமைப்பு, சிப் வடிவமைப்பு மற்றும் உற்பத்தியை புதிய உச்சத்திற்கு கொண்டு செல்லும் என்று அவர் குறிப்பிட்டார்.












Click it and Unblock the Notifications