பெங்களூர் மெட்ரோவின் மஞ்சள் ரூட்.. ஆகஸ்ட் 10ல் தொடங்கி வைக்கும் பிரதமர் மோடி! 25 நிமிடத்திற்கு ஒரு மெட்ரோ இயக்கம்
பெங்களூர்: பெங்களூரில் டிராபிக் பிரச்சினையைக் கட்டுப்படுத்தவும் பொது போக்குவரத்தை மேம்படுத்தவும் மெட்ரோ பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இதற்கிடையே பெங்களூரின் நம்ம மெட்ரோவின் மஞ்சள் வழித்தடத்தை வரும் ஆகஸ்ட் 10ம் தேதி பிரதமர் மோடி திறந்து வைப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆர்.வி. சாலையில் இருந்து பொம்மசந்திரா வரை இயக்கப்படும் இந்த மெட்ரோவால் டிராபிக் பாதிப்பு ஓரளவுக்குக் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கர்நாடக தலைநகர் பெங்களூரில் டிராபிக் எந்தளவுக்கு மோசமாக இருக்கும் என்பதைத் தனியாகச் சொல்லத் தேவையில்லை. சமூக வலைத்தளத்தை எடுத்துப் பார்த்தாலேயே பெங்களூர் டிராபிக் குறித்து அந்த ஊர் மக்கள் புலம்பித் தள்ளி இருப்பார்கள். பீக் ஹவரிஸில் வெறும் சில கிமீ தூரம் செல்லவே பல மணி நேரம் ஆவதாகப் பலர் சொல்வதை நாம் கேட்டிருப்போம்.

மஞ்சள் வழித்தடம்
அங்கு டிராபிக் நெரிசலைக் குறைக்கவே மெட்ரோ திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதற்கிடையே பெங்களூரின் நம்ம மெட்ரோவின் மஞ்சள் வழித்தடத்தைப் பிரதமர் நரேந்திர மோடி ஆகஸ்ட் 10ம் தேதி திறந்து வைக்கிறார். அதே நாளில் அல்லது அடுத்த நாளிலேயே அந்த வழித்தடத்தில் மெட்ரோ சேவை தொடங்கப்படும் என தெரிகிறது..
தெற்கு பெங்களூரில் ஆர்.வி. சாலையில் இருந்து எலெக்ட்ரானிக் சிட்டி வழியாக பொம்மசந்திரா வரை இந்த மெட்ரோ இயக்கப்படும். 19.15 கி.மீ. நீளமுள்ள இந்த வழித்தடத்தில் முற்றிலும் தானியங்கி மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும். ஒவ்வொரு 25 நிமிடங்களுக்கும் ஒருமுறை இயக்கப்படும் என்று பெங்களூர் மெட்ரோ அதிகாரி ஒருவர் தெரிவித்தார்..
16 ஸ்டேஷன்கள்
இந்த வழித்தடத்தில் உள்ள 16 ஸ்டேஷன்களும் செயல்பாட்டிற்கு வரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஜெயநகர் ஐந்தாம் பிளாக்கிலுள்ள ஷாலினி மைதானத்தில் திறப்பு விழா நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரத் துறை அமைச்சர் மனோகர் லால் கட்டார் மெட்ரோ தொடக்க விழா குறித்த அறிவிப்பை வெளியிட்டிருந்தார்.
பெங்களூரு தெற்கு எம்பி தேஜஸ்வி சூர்யா சமீபத்தில் தான் பிரதமர் மோடியைச் சந்தித்துப் பேசியிருந்தார். அப்போது தேஜஸ்வி சூர்யா மெட்ரோ சேவையைத் தொடங்கி வைக்க வருமாறு பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்ததாகத் தெரிகிறது. அதற்குப் பிரதமர் மோடி சம்மதித்த நிலையில், இப்போது அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. டிராபிக்கால் மிக மோசமாக அவதிப்படும் தெற்கு பெங்களூருக்கு இது நிம்மதி தருவதாக இருக்கும்.
கர்நாடக அரசு அதிருப்தி?
அதேநேரம் இந்த திறப்பு விழா தேதியைக் கர்நாடக அரசுடன் கலந்தாலோசிக்காமல் பிரதமரின் அலுவலகம் முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. நம்ம மெட்ரோ என்பது கர்நாடகா மற்றும் மத்திய அரசின் கூட்டு முயற்சியாகும். இதனால் கர்நாடக அரசுடன் கலந்தாலோசிக்காமல் எடுக்கப்பட்ட திறப்பு விழா முடிவால் மாநில அரசு வட்டாரங்கள் அதிருப்தியில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
3ம் கட்ட மெட்ரோ
மேலும் பிரதமர் மோடி இந்த பயணத்தின் போது 44.65 கி.மீ. நீளமுள்ள பெங்களூர் மெட்ரோவின் மூன்றாம் கட்டப் பணிக்கும் அடிக்கல் நாட்டுகிறார். மூன்றாம் கட்டத்தில் இரண்டு வழித்தடங்கள் இருக்கும். முதல் வழித்தடம் 32.5 கி.மீ. நீளம் கொண்டது. இது ஜே.பி. நகரில் இருந்து பெங்களூர் அவுட்டர் ரிங் ரோட்டின் மேற்குப் பகுதி வழியாக கெம்பாபுரம் வரை இருக்கும். 12.15 கி.மீ. நீளம் கொண்ட இரண்டாவது வழித்தடம் ஹோசஹள்ளியில் இருந்து தென்மேற்கு பெங்களூருவில் உள்ள மகடி சாலை வழியாக கடபகெரே வரை செல்லும்.












Click it and Unblock the Notifications