என்னாது.. "அந்த மாதிரி" சினிமாவில் மனைவியா.. கத்தியால் சரமாரியாக குத்தி கொன்ற கணவர்
பெங்களூர்: கர்நாடக தலைநகர் பெங்களூர் அருகே உள்ள ராமநகர் மாவட்டத்தில் ஆபாச படத்தில் நடித்ததாக கூறி மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த கொடூர சம்பவம் நடந்துள்ளது.
பெங்களூர் அருகே ராமநகர் மாவட்டம் அமைந்துள்ளது. இங்குள்ள ராமநகர் டவுன் ரகுமான் நகரை சேர்ந்தவர் ஜாகீர் பாஷா(வயது 40). இவரது மனைவி மூபினா (33).
டிரைவரான ஜாகீர் பாஷா பெங்களூரில் ஆட்டோ ஓட்டி வருகிறார். இந்த தம்பதிக்கு 15 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 5 குழந்தைகள் உள்ளனர்.

ஆபாச படத்தில் நடித்ததாக...
ஜாகீர் பாஷா அதிகளவில் ஆபாச படம் பார்ப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் 2 மாதங்களுக்கு முன்பு அவர் ஆபாசபடம் பார்த்துள்ளார். அப்போது அவருடைய மனைவியை போன்று ஒருவர் தோன்றியுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் ஜாகீர் பாஷாவுக்கு தனது மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டது. மேலும் மனைவி ஆபாசபடம் நடித்திருப்பதாக அவர் நினைத்தார். இதனால் தொடர்ச்சியாக அவர் தனது மனைவியை தொடர்ந்து தாக்கி வந்தார். பொது நிகழ்ச்சிகளின்போதும் கூட அக்கம்பக்கத்தினரை கண்டுகொள்ளாமல் ஜாகீர் பாஷா மனைவியை கொடூரமாக தாக்கி வந்துள்ளார்.

புகாரை தடுத்த மனைவி
சமீபத்தில் ஜாகீர் பாஷா தாக்கியதில் மூபினா மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளானார். மேலும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனால் சம்பவம் குறித்து போலீசில் புகாரளிக்க மூபினாவின் தந்தை கவுஷ் பாஷா சென்றார். அவரை மூபினா தடுத்து நிறுத்தினார். இதனால் ஜாகீர் பாஷா தப்பித்தார். இருப்பினும் அவர் தொடர்ச்சியாக சந்தேகப்பட்டு மனைவியை துன்புறுத்தி வந்தார்.

கத்தியால் குத்திக்கொலை
நேற்று முன்தினம் இரவு தம்பதி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. அப்போது ஆத்திரம் அடைந்த ஜாகீர் பாஷா வீட்டில் இருந்த கத்தியை எடுத்து மூபினாவை குத்தி கொலை செய்தார். இந்த பயங்கர சம்பவம் அவரது குழந்தைகளின் கண்முன்னே நடந்துள்ளது. இதையடுத்து ஜாகீர் பாஷா வீட்டில் இருந்து வெளியேறி ஓடினார்.

போலீஸ் விசாரணை
இதை பார்த்த அவரது மூத்த மகன் அருகே உள்ள தாத்தா கவுஷ் பாஷா வீட்டுக்கு சென்று சம்பவம் குறித்து தெரிவித்தார்.அங்கிருந்து வந்த கவுஷ் பாஷா, தனது மகள் மூபினா கொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்து கதறி அழுதார். ராமநகர் டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மூபினாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மூபினாவின் பெற்றோர் கொடுத்த புகாரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி ஜாகீர் பாஷாவை தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications