சட்டத்தை விட ஆர்எஸ்எஸ் பெரிய அமைப்பு கிடையாது.. கணக்கு வழக்கை வெளியிடுங்க.. பகவத்திற்கு போன கடிதம்

Subscribe to Oneindia Tamil

ஆர்.எஸ்.எஸ். (RSS) அமைப்பின் சட்டப்பூர்வ அந்தஸ்து, அதன் பதிவு விவரங்கள், நிதி ஆதாரங்கள் மற்றும் செலவுக் கணக்குகள் போன்ற முக்கிய தகவல்களைப் பொதுமக்களுக்கு வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என்று கர்நாடக உள்துறை அமைச்சர் பிரியங்க் கார்கே, அந்த அமைப்பின் தலைவர் மோகன் பகவத்திற்கு கடிதம் எழுதியுள்ளார்.

இரண்டு பக்கங்கள் கொண்ட இந்தக் கடிதத்தில், கர்நாடகாவில் ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கு இருக்கும் பெரும் செல்வாக்கை பிரியங்க் கார்கே சுட்டிக்காட்டியுள்ளார். மாநிலம் முழுவதும் 60,000-க்கும் மேற்பட்ட சாகாக்களும், அதன் வழியே பல்வேறு நடவடிக்கைகளும் இருக்கும்போது, இவ்வளவு பெரிய அமைப்பு எப்படி சட்ட வரம்புக்குள் வராமல் இருக்க முடியும் என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

Priyank Kharge and Mohan Bhagwat in transparency row

“ஒரு ஜனநாயக நாட்டில், எந்தவொரு அமைப்பும் சட்டத்திற்கு மேல் இருக்க முடியாது; அது எவ்வளவு பெரியதாகவோ அல்லது செல்வாக்கு மிக்கதாகவோ இருந்தாலும் சரி. பொதுவெளியில் செயல்படும் ஒவ்வொரு குடிமகனும், அமைப்பும் நாட்டின் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு நடக்க வேண்டும்,” என்று கார்கே தனது கடிதத்தில் கடுமையாகக் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால், கர்நாடக அரசின் இந்தக் கேள்விகளுக்கு ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் தகுந்த பதிலடி கொடுத்துள்ளார். அரசு நிதி எதுவும் பெறாததால் ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்குப் பதிவு செய்ய வேண்டிய தேவை இல்லை என்று அவர் கூறியுள்ளார். இந்தியாவில் 100 ஆண்டுகளாக ஆர்.எஸ்.எஸ். செயல்பட்டு வருவதாகவும், இதுவரை எந்தவொரு அதிகாரியும் இதன் பதிவைக் கேட்கவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், இந்தக் கோரிக்கைக்குப் பின்னால் அரசியல் உள்நோக்கம் இருப்பதாகக் கூறிய அவர், மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தவே கர்நாடக அரசு இவ்வாறு செய்வதாகக் குற்றம்சாட்டினார்.

சட்ட அந்தஸ்து, நிதி விவரங்களை வெளியிட வலியுறுத்தல்

ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தரவுகளையே மேற்கோள் காட்டிப் பேசிய பிரியங்க் கார்கே, கர்நாடகாவில் இந்த அமைப்புக்கு ஆழமான வேர்கள் இருப்பதை விளக்கினார். மாநிலத்தில் மட்டும் 4,127 தினசரி சாகாக்கள், 1,389 வாராந்திர கூட்டங்கள் (மீலன்கள்), 60 மாதாந்திர மண்டலிகள் செயல்பட்டு வருவதாக அவர் கூறியுள்ளார். அதுமட்டுமின்றி, ஆர்.எஸ்.எஸ். சார்பில் 2,194 மாநாடுகளும், 500-க்கும் அதிகமான பேரணிகளும் நடத்தப்பட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

“இவ்வளவு பெரிய அளவில் மக்களைத் திரட்டுவது, சீருடை அணிந்து பேரணி நடத்துவது, சமூகத்தில் இவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவது போன்றவற்றை வெறும் தனிப்பட்ட விஷயமாகவோ அல்லது முறைசாரா நடவடிக்கையாகவோ கடந்துவிட முடியாது. இதனால், இந்த அமைப்பின் சட்ட ரீதியான அந்தஸ்து, நிதி வெளிப்படைத்தன்மை, நிதி ஆதாரங்கள், பேரணிகளுக்கான அனுமதி மற்றும் இந்தியச் சட்டங்களின்படி செயல்படுகிறதா என்பது குறித்து நியாயமான கேள்விகள் எழுகின்றன,” என்று அமைச்சர் பிரியங்க் கார்கே வலியுறுத்தியுள்ளார்.

எனவே, ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் சட்டப்பூர்வ அந்தஸ்து, அதன் கட்டமைப்பு, பொறுப்பாளர்கள் யார் என்ற விவரம், நன்கொடைகள் உள்ளிட்ட வருமான ஆதாரங்கள், செலவுகள் மற்றும் சொத்து விவரங்களை பொதுமக்களுக்கு வெளிப்படையாக்க வேண்டும் என்று கார்கே தனது கடிதத்தில் கோரியுள்ளார்.

அத்துடன், இந்த அமைப்பு முறையாக வரி செலுத்துகிறதா, முறையான பதிவு இல்லாமல் எப்படி இவ்வளவு பெரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள முடிகிறது என்பதற்கான சட்டப்பூர்வ விளக்கத்தையும் கார்கே கேட்டுள்ளார். நாட்டில் எந்தவொரு பொதுப் பொறுப்பும் இல்லாமல், இவ்வளவு பெரிய அளவில் செயல்படுவதற்கான உரிமையை எந்த அரசியலமைப்பு அல்லது சட்டத்தின் கீழ் ஆர்.எஸ்.எஸ். கோருகிறது என்றும், அதன் பொதுப் பேரணிகளுக்குப் பெறப்பட்ட அனுமதிகள் குறித்த விவரங்களையும் தெளிவுபடுத்த வேண்டும் என்றும் இந்தக் கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

“பிரியமுள்ள மோகன் பகவத் ஜி, எனது கடிதம் விரைவில் உங்களை வந்தடையும். இதற்கு முன்னதாக, இதன் முக்கியத்துவத்தை உங்களுக்கு முன்கூட்டியே தெரியப்படுத்த விரும்பினேன். நூறாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் ஆர்.எஸ்.எஸ்.க்கு வாழ்த்துகள். 60,000-க்கும் மேற்பட்ட சாகாக்களையும், கோடிக்கணக்கான உறுப்பினர்களையும் கொண்ட பெரிய அமைப்பு இது...” என்று பிரியங்க் கார்கே தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

அரசிடம் எந்தப் பதிவும், பொறுப்புக்கூறலும் இல்லாமல் செயல்பட ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கு எந்தச் சட்டம் விலக்கு அளித்துள்ளது என்று பிரியங்க் கார்கே சில நாட்களுக்கு முன்பு கேள்வி எழுப்பியிருந்தார். தேவைப்பட்டால், இதுகுறித்து நேரடியாகப் பேச ஆர்.எஸ்.எஸ். தலைமையகத்துக்கே செல்லத் தயாராக இருப்பதாகவும் அவர் கூறியிருந்தார், அதனைத் தொடர்ந்துதான் தற்போது இந்தக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

வெறும் அரசியல் தந்திரம்: மோகன் பகவத் பதில்

கேரளாவில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கர்நாடக அமைச்சரின் இந்தக் கோரிக்கை குறித்துப் பேசிய ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத், இந்தியாவில் எத்தனையோ அமைப்புகள் எந்தப் பதிவும் இல்லாமல் செயல்படுவதைச் சுட்டிக்காட்டினார். ஏன், 'இந்து தர்மம்' என்பதே எங்கும் பதிவு செய்யப்படவில்லை என்றும் அவர் கூறினார். ஆர்.எஸ்.எஸ். ஏதோ ரகசியமாகச் செயல்படுவதாகச் சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளை மறுத்த அவர், அமைப்பின் அனைத்து நடவடிக்கைகளும் முழுக்க முழுக்க வெளிப்படையாகவே நடப்பதாகக் குறிப்பிட்டார்.

“இதெல்லாம் வெறும் அரசியல் தந்திரங்கள். அவர்கள் என்ன வேண்டுமானாலும் முயற்சி செய்து பார்க்கட்டும். இதையெல்லாம் எதிர்கொண்டு எங்களுக்குப் பழகிவிட்டது. சங்கம் ஆரம்பிக்கப்பட்ட 15 ஆண்டுகளிலேயே இத்தகைய சவால்களை நாங்கள் கடந்து வந்துவிட்டோம். இதுபோன்ற கேள்விகள் எழாமல் போனால்தான் எங்களுக்கு ஏதோ குறைவது போல இருக்கும்,” என்று கார்கேவின் கடிதத்திற்குப் பிறகு பகவத் பதிலளித்துள்ளார்.

“ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்திலேயே இந்தச் சங்கம் தொடங்கப்பட்டது. இந்து தர்மமோ அல்லது வேறு பல அமைப்புகளோ இங்குப் பதிவு செய்யப்படவில்லை. அரசிடம் நிதி பெற விரும்பும் அமைப்புகள் மட்டுமே கட்டாயம் பதிவு செய்ய வேண்டும். கடந்த 100 ஆண்டுகளில் எங்களிடம் யாரும் வந்து ஏன் பதிவு செய்யவில்லை என்று கேட்டதில்லை,” என்றும் அவர் கூறினார்.

கடந்த 1960-களில் ஆர்.எஸ்.எஸ். தனது எழுதப்பட்ட அரசியலமைப்பை அரசிடம் சமர்ப்பித்ததாகவும், எந்தப் பதிவுக் கேள்வியும் எழுப்பாமல் அரசே அதனை ஏற்றுக்கொண்டதாகவும் பகவத் தெரிவித்தார். “மக்கள் மத்தியில் எப்படியாவது சந்தேகத்தை விதைக்க வேண்டும் என்று பார்க்கிறார்கள், அது இனி வேலைக்காகாது,” என்றும் அவர் கூறியுள்ளார்.

ஆர்.எஸ்.எஸ். அமைப்பு இந்திய சட்டங்களின் கீழ் எந்தவொரு சங்கம், அறக்கட்டளை, தொண்டு நிறுவனம் (NGO) அல்லது அரசியல் கட்சியாகப் பதிவு செய்யப்படவில்லை. முன்னதாக, வருமான வரித்துறையும் நீதிமன்றங்களும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பைத் தனிநபர்களின் கூட்டமைப்பாகவே (Association of Persons) கருதியதாகவும், அதன்படியே இந்த அமைப்புக்கு வருமான வரியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் விளக்கியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+