பெங்களூரில் திகில் கிளப்பும் சைக்கோ கில்லர்.. குறிவைத்து இரவு நேரத்தில் கழுத்தை அறுக்கும் கொடூரம்
பெங்களூர்: பெங்களூரில் உள்ள இந்திரா நகரில் ஒரே பகுதியில் அடையாளம் தெரியாத நபர் ஒருவரால் இருவர் கத்தியால் குத்தப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் பரவும் தகவல்கள் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூர் ஐடி துறையில் கோலோச்சும் நகரம். இரவு, பகல் என்று பாராமல் ஏராளமான ஊர்களில் இருந்தும் இங்கு வந்து பலரும் பணியாற்றி வருகின்றனர். பெங்களூரின் இதயப் பகுதியில் அமைந்துள்ளது இந்திரா நகரின் 100 அடி சாலை. உயர் ரக குடியிருப்புகள், வணிக நிறுவனங்கள் என்று எப்போதுமே பரபரப்பாக காணப்படும் பகுதி. ஆனால், இப்பகுதியில் சுற்றித் திரியும் சைக்கோ கில்லரால் தற்போது பாதுகாப்பற்ற பகுதியாக மாறியுள்ளது.

இதுகுறித்து ரெடிட் சமூக வலைதளத்தில் பதிவிட்ட நபர் ஒருவர், இந்திரா நகர் பகுதியில் ஒரு கொலையாளி சுற்றித் திரிவது குறித்து வாட்ஸ்அப்பில் தகவல் பரவுகிறது இது உண்மையா என்று கேட்டுள்ளார். இதையடுத்து, பலரும் இந்த சம்பவம் குறித்து விவாதிக்கத் தொடங்கினர். இந்த சம்பவம் உண்மையாக நடந்ததுதான் என்று அந்தப் பதிவில் இருவர் உறுதி செய்துள்ளனர்.
எந்தவொரு ஊடகத்திலும் இதுகுறித்த செய்திகள் வெளிவராத நிலையில், பாதிக்கப்பட்ட ஒருவரின் குடும்பத்தினர் சட்ட உதவிக்காக அவரைத் தொடர்பு கொண்டதாக அதில் ஒருவர் தெரிவித்தார். பெங்களூரில் வசிக்கும் பலரும் இந்த வைரல் பதிவில் கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர். தொலைபேசி பறிப்பு, சீண்டல்கள் போன்ற பல்வேறு குற்றச் செயல்கள் அதிகரித்து வருவதாகவும் பலரும் தெரிவித்துள்ளனர். யார் இந்த சைக்கோ கில்லர். என்ன நடந்தது என்று தெரிந்து கொள்ளலாம்.
பெங்களூர் இந்திரா நகர் 100 அடி சாலை மக்கள் நடமாட்டத்துக்கும், பரபரப்புக்கும் பஞ்சமில்லாத பகுதி. இந்த சாலையில் உள்ள கேஎஃப்சி சிக்னல் அருகே ஒரே இரவில் இரவு 9 மணிக்குமேல் மர்ம நபர் ஒருவர் இருவரை கத்தியால் தாக்கியதாக கூறப்படுகிறது. சிவப்பு டீசர்ட், வெள்ளை நிற பேன்ட், கருப்பு தொப்பி அணிந்த 20 வயதுடைய இளைஞர்தான் இந்த சம்பவத்தில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. ஒரே இரவில் இரண்டு நபர்களின் கழுத்தை அறுத்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.
இது தொடர்பாக வெளியான முதல் தகவல் அறிக்கையில், பானி பூரி கடையில் உணவு தீர்ந்து போனதாலும், பணம் செலுத்தாதலும் ஏற்பட்ட தகராறில் பானி பூரி விற்பனையாளர்கள் தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதேபோல, இருசக்கர வாகன ஓட்டி ஒருவரிடம் ரைடு செல்ல வேண்டும் என்று கேட்டு தாக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்த தாக்குதலில் பாதிக்கப்பட்ட நபர் சிகிச்சை ஒருவர் ஆபத்தில் இருந்து மீண்டு வருகிறார். மற்றொருவர் குணமடைந்து வருகிறார் என்றும் கூறப்படுகிறது. இதேபோல, பல நபர்கள் பாதிக்கப்பட்டிருக்கலாம், பலியாகியிருக்கலாம் என்ற தகவல்களும் பரவி வருகின்றன.
இதுகுறித்து மூத்த காவல் துறை அதிகாரிகள் கூறுகையில், இச்சம்பவத்தால் இந்திரா நகர் பகுதி மக்கள் அச்சம் அடைய வேண்டாம். சந்தேகப்படும் அந்த இளைஞர் அடையாளம் காணப்பட்டுள்ளார். விரைவில் அவர் கைது செய்யப்படுவார் என்று தெரிவித்துள்ளனர். இச்சம்பவங்கள் குறித்து இந்திரா நகர் காவல் நிலையத்தில் எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
தாக்குதல் நடத்திய மர்ம நபர் அந்த பகுதியை நன்கு அறிந்தவராக உள்ளார். குறிப்பாக 100 அடி சாலையை சுற்றியுள்ள புறவழிச் சாலைகளில் உள்ள மக்கள் மிகவும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்றும், தேவையற்ற இரவு நேரப் பயணங்களைத் தவிர்க்க வேண்டும் என்றும், சந்தேகத்திற்கு இடமான நடவடிக்கைகள் ஏதேனும் இருப்பின் 112 என்ற காவல் துறை எண்ணுக்கு அழைக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications