பெங்களூரில் மகளுக்கு துரோகம்! திருமணமான 2 மாதத்தில் மாமியாருடன் மருமகன் ஓட்டம்! விசாரணையில் பகீர்
பெங்களூர்: கர்நாடகாவில் தனது மாமியாருடன் மருமகன், பணம், நகைகளுடன் ஓட்டம் பிடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருமணமான 2 மாதங்களிலேயே இது போன்றதொரு கேவலத்தை இருவரும் அரங்கேற்றிவிட்டனர்.
கர்நாடகா மாநிலம் தாவணகெரே மாவட்டம் முத்தேனஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் நாகராஜ். இவரது மனைவி சாந்தா (55). இவர் நாகராஜின் 2ஆவது மனைவி ஆவார். நாகராஜின் முதல் மனைவி இறந்துவிட்டதால், அவர் சாந்தாவை 2ஆவதாக திருமணம் செய்து கொண்டார்.

முதல் மனைவிக்கு இரு மகள்கள், ஒரு மகன் உள்ளனர். இந்த நிலையில் நாகராஜின் மூத்த மகள் ஹேமாவுக்கும் அவருடைய தங்கை மகன் கணேஷுக்கும் (25) (அதாவது ஹேமாவுக்கு அத்தை மகன்) கடந்த இரு மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.
சென்னகிரி
கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியே சென்றுவிட்டு வரலாம் என்று ஹேமாவை கணேஷ் அழைத்து சென்றார். அப்போது சென்னகிரி பஸ் நிலையத்தில் ஹேமாவை இறக்கிவிட்ட கணேஷ், "இங்கேயே இரு, நான் பக்கத்தில் இருக்கும் கடைக்கு சென்றுவிட்டு வருகிறேன். நீ அந்த கடைக்கெல்லாம் வர கூடாது" என சொல்லிவிட்டு வண்டியில் சென்றார்.
நீண்ட நேரம் காணவில்லை
ஹேமா, நீண்ட நேரமாக காத்திருந்தும் கணவர் வரவில்லை. அவருக்கு போன் செய்தாலும் போனை எடுக்கவில்லை. "சரி போன இடத்தில் வேலை முடியவில்லையோ என்னவோ, சிக்னல் இல்லாத இடமாகக் கூட இருக்கும்" என ஹேமா, தனக்குத்தானே சமாதானம் செய்து கொண்டு காத்திருந்தார்.
வீட்டுக்குச் சென்றால் அதிர்ச்சி
ஆனால் அதிக நேரம் ஆனதை அடுத்து "ஒரு வேளை தன்னை இறக்கிவிட்டதை மறந்து, கணேஷ் வீட்டிற்கு சென்றிருக்கலாம்" என நினைத்து வீட்டிற்கு சென்று பார்த்தார். அங்கு அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
நகைகளும் காணவில்லை
அங்கு வளர்ப்பு தாய் சாந்தாவையும் காணோம். மேலும் வீட்டில் இருந்த நகை, பணத்தையும் காணவில்லை. இந்த நிலையில்தான் சாந்தாவும், கணேஷும் நகை, பணத்துடன் வீட்டை விட்டு ஓடிச் சென்றது ஹேமாவுக்கு தெரியவந்தது. அதாவது மாமியாரும் மருமகனும் ஓட்டம் பிடித்துவிட்டனர்.
கண்ணீர் வடித்த மனைவி
இதனால் அதிர்ச்சி அடைந்த ஹேமா, தனது தந்தையிடம் நடந்ததை தெரிவித்துள்ளார். மாமியார் என்பதை காட்டிலும் உடன் பிறவா அக்கா என்று கூட நினைக்காமல் கணேஷும், தனது கூட பிறக்காத தம்பி என சாந்தாவும் நினைக்கவில்லையே என கண்ணீருடன் அவர்களை தேடினார்.
காவல் நிலையத்தில் புகார்
ஆனால் அவர்கள் இருவரும் கிடைக்கவில்லை. இந்த நிலையில் மருமகனுடன் மாமியார் வீட்டை விட்டு ஓட்டம் பிடித்த தகவல் ஊரெல்லாம் பரவியது. இதையடுத்து நாகராஜும் சென்னகிரி காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருந்தார்.
விசாரணையில் பகீர்
இந்த புகாரின் பேரில் விசாரணை நடத்திய நிலையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. கணேஷுக்கும் சாந்தாவுக்கும் கடந்த இரு ஆண்டுகளாகவே கள்ளக்காதல் இருந்ததாம். வளர்ப்பு மகள் ஹேமாவை கணேஷுக்கு திருமணம் செய்து வைத்தால் தங்களது கள்ளக்காதலுக்கு இடையூறாக இருக்க மாட்டார் என சாந்தா கருதினாராம்.
கள்ளக்காதல்
அதன்படி நாகராஜிடம் பேசி இருவருக்கும் திருமணம் நடந்தது. அதன் பின்னர் இருவருக்கும் இடையே கள்ளக்காதல் தொடர்ந்ததாம். ஒரு கட்டத்தில் தன்னை விட தனது வளர்ப்பு தாயிடமே கணேஷ் அதிகமாக நெருக்கம் காட்டுவதால் ஹேமாவுக்கு சந்தேகம் எழுந்தது. இதனால் கணேஷின் செல்போனை பார்த்துள்ளார்.
நடந்தது என்ன
அப்போது கணேஷும் சாந்தாவும் உல்லாசமாக இருக்கும் புகைப்படங்கள், வீடியோக்கள் இருந்தன. இதுகுறித்து கணேஷிடம் ஹேமா கேட்டதாக தெரிகிறது. கணேஷும் எதை எதையோ சொல்லி சமாளித்த நிலையில் இனியும் ஒரே வீட்டில் இருந்தால் கள்ளக்காதலை தொடர முடியாது என நினைத்த கணேஷும் சாந்தாவும் வீட்டை விட்டு ஓடி விட்டனராம். இந்த நிலையில் சென்னகிரி போலீஸார் அவர்களை தேடி வருகிறார்கள். வளர்ப்பு தாயே தனக்கு இத்தனை துரோகம் இழைத்துவிட்டாரே என ஹேமா கண்ணீர் விட்டு கதறி வரும் காட்சி பார்ப்போரை கலங்கச் செய்கிறது.












Click it and Unblock the Notifications