கர்நாடகாவின் புதிய அமைச்சர்கள் யார்? இன்று முடிவு! டெல்லி பறக்கும் சித்தராமையா, சிவக்குமார்
பெங்களூர்: கடந்த 3 நாட்களாக டெல்லியில் முகாமிட்டு கர்நாடகா முதல்வர் பதவியை சித்தராமையாவும், துணை முதல்வர் பதவியை டிகே சிவக்குமாரும் பெற்றனர். இவர்கள் நாளை பதவியேற்கும் நிலையில் இருவரும் மீண்டும் இன்று டெல்லி புறப்பட்டு செல்கின்றனர். இதன் பின்னணி பற்றிய விபரம் வெளியாகி உள்ளது.
கர்நாடகா சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனித்து ஆட்சியை பிடித்தது. காங்கிரஸ் கட்சி 135 தொகுதிகளில் வென்றது. பாஜக 66 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று ஆட்சியை காங்கிரஸிடம் பறிகொடுத்தது. இதன்மூலம் தென்மாநிலங்களில் கைவசம் இருந்த கர்நாடகாவை பாஜக இழந்தது.

இந்த தேர்தலில் ஜேடிஎஸ் கட்சி 19 இடங்களிலும், மற்றவர்கள் 4 இடங்களிலும் மட்டுமே ஜெயித்தனர். இதையடுத்து முதல்வர் பதவிக்கான ரேஸ் காங்கிரஸில் துவங்கியது. முதல்வர் பதவிக்கு மாஜி முதல்வர் சித்தராமையா, மாநில காங்கிரஸ் தலைவர் டிகே சிவக்குமார் ஆகியோர் இடையே கடும் போட்டி நிலவியது.
இருவரும் கடந்த 3 நாட்களாக டெல்லியில் முகாமிட்டு மேலிட தலைவர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். டிகே சிவக்குமார் முதல்வர் பதவியை விட்டு கொடுக்க மறுத்ததால் பெரிய குழப்பம் ஏற்பட்டது. இறுதியாக நேற்று அதிகாரப்பூர்வமாக சித்தராமையா முதல்வர் என்றும், டிகே சிவக்குமார் துணை முதல்வர் என்றும் அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து இருவரும் டெல்லியில் இருந்து பெங்களூர் திரும்பினார். பெங்களூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் எம்எல்ஏக்கள் கூட்டம் நடந்தது. இதில் காங்கிரஸ் கட்சியின் சட்டசபை தலைவராக(முதல்வர்) சித்தராமையா தேர்வு செய்யப்பட்டார். மேலும் அவர் ஆளுநர் தாவர்சந்த் கெலாட்டை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார். நாளை மதியம் 12.30 மணிக்கு நடக்கும் விழாவில் சித்தராமையா முதல்வராகவும், துணை முதல்வராக டிகே சிவக்குமாரும் பதவியேற்க உள்ளனர்.
இந்நிலையில் தான் இன்று சித்தராமையா, டிகே சிவக்குமார் ஆகியோர் மீண்டும் டெல்லிக்கு செல்கின்றனர். நாளை பதவியேற்பு விழா நடக்கும் நிலையில் இருவரும் டெல்லி செல்வது பலருக்கும் கேள்வியை எழுப்பி உள்ளது. இதற்கான விடை இப்போது கிடைத்துள்ளது. அதாவது இன்றைய டெல்லி பயணம் என்பது அமைச்சரவை அமைப்பது பற்றி விவாதிக்கவே.
சித்தராமையா மற்றும் டிகே சிவக்குமார் ஆகிய இருவரும் தங்களின் ஆதரவாளர்களுக்கு அமைச்சர் பதவிகளை வழங்க வேண்டும் என கூறி வருகின்றனர். அதோடு இருவரும் முக்கிய துறைகளை தங்களின் ஆதரவாளர்களுக்கு பெற்று கொடுக்க ஆவலாக உள்ளனர். இதில் பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. இந்நிலையில் தான் காங்கிரஸ் மேலிட தலைவர்கள் முன்னிலையில் அமைச்சர்களும், அவர்களுக்கான துறையும் இன்று முடிவாக உள்ளது. இதையடுத்து நாளை சித்தராமையா மற்றும் டிகே சிவக்குமாருடன் சில முக்கிய தலைவர்களும் அமைச்சர்களாக பதவியேற்க வாய்ப்புள்ளது.












Click it and Unblock the Notifications