ராகுல் காந்தியை சந்திக்க டெல்லி போன.. சித்தராமையாவுக்கு டிவிஸ்ட்! தள்ளி போன மீட்டிங்!
பெங்களூர்: கர்நாடக முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாக ஆளுநர் மாளிகையில் கடிதம் கொடுத்திருக்கிறார் சித்தராமையா. இந்நிலையில் இன்று இரவு ராகுல் காந்தியை சந்திக்க டெல்லி புறப்பட்ட நிலையில், இந்த சந்திப்பு நாளைக்கு ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறது.
கர்நாடக மாநில முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ள சித்தராமையா, காங்கிரஸ் மேலிடத்தைச் சந்திக்க டெல்லிக்குச் சென்ற போது, அங்கு நிலவிய மோசமான வானிலை காரணமாக அவரது சிறப்பு விமானம் ஜெய்ப்பூருக்குத் திருப்பி விடப்பட்டது. எனவே சந்திப்பு நாளைக்கு தள்ளி போயிருக்கிறது.

டெல்லியில் கொட்டித் தீர்த்த கனமழையால் இந்தத் திடீர் மாற்றம் ஏற்பட்டுள்ளதால், ராகுல் காந்தியுடன் வியாழக்கிழமை இரவு நடக்கவிருந்த அவரது முக்கிய ஆலோசனைக் கூட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சியின் அதிகாரப் பகிர்வு ஒப்பந்தப்படி, தனது முதலமைச்சர் பதவியை முறைப்படி ராஜினாமா செய்த சில மணி நேரங்களிலேயே சித்தராமையா பெங்களூரு எச்.ஏ.எல் விமான நிலையத்திலிருந்து தனி விமானம் மூலம் டெல்லிக்குக் கிளம்பினார்.
ஆனால், டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலைய பிராந்தியத்தில் திடீரென இடி, மின்னலுடன் கூடிய மிகக் கடுமையான கனமழை பெய்தது. மோசமான வானிலை காரணமாக விமானம் தரை இறங்குவதில் சிக்கல் ஏற்பட்டதால், அது உடனடியாக ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் சர்வதேச விமான நிலையத்திற்குத் திருப்பி விடப்பட்டு அங்குப் பத்திரமாகத் தரையிறக்கப்பட்டது.
டெல்லியில் நிலவிய மோசமான வானிலை காரணமாக, வியாழக்கிழமை இரவு காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியுடன் சித்தராமையா நடத்தவிருந்த மிக முக்கியமான ஆலோசனைக் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்தச் சந்திப்பு தற்போது மாற்றியமைக்கப்பட்டு, வெள்ளிக்கிழமை (மே 29) காலை 9 மணிக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
முதலமைச்சர் அலுவலகம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ தகவலின்படி, சித்தராமையாவுடன் அந்தப் பயணத்தில் ரந்தீப் சிங் சுர்ஜேவாலா, மாநில அமைச்சர் கே.ஜே.ஜார்ஜ், பைரதி சுரேஷ், ஏ.எஸ்.பொன்னண்ணா, டாக்டர் யதீந்திரா சித்தராமையா, அபிஷேக் தத் என கர்நாடகாவின் முன்னணி காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் அமைச்சர்கள் உடன் சென்றுள்ளனர்.












Click it and Unblock the Notifications