பிரஜ்வல் தாயார் பவானி ரேவண்ணாவிடம் இன்று விசாரணை.. ஏற்கனவே முன் ஜாமீன் தள்ளுபடி.. கைதாக வாய்ப்பு?
பெங்களூர்: கடத்தல் வழக்கு தொடர்பாக பிரஜ்வல் ரேவண்ணாவின் தாயார் பவானி ரேவண்ணாவிடம் சிறப்பு புலனாய்வுக் குழு இன்று விசாரணை நடத்துகிறது.
முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும் ஹாசன் மக்களவை தொகுதி எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணா (33) மீண்டும் அதே தொகுதியில் போட்டியிட்டார். அங்கு கடந்த 26 ஆம் தேதி வாக்குப்பதிவு நடந்த நிலையில், அவர் பல்வேறு பெண்களுடன் நெருக்கமாக இருக்கும் சுமார் 3 ஆயிரம் வீடியோக்கள் வெளியானது.

மேலும் பிரஜ்வல் ரேவண்ணா வீட்டு பணிப்பெண், மஜத முன்னாள் பஞ்சாயத்து உறுப்பினர் உட்பட 4 பெண்கள் அளித்த புகாரின் பேரில் பிரஜ்வல் ரேவண்ணா மீது 4 பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதையடுத்து, கடந்த ஏப்ரல் 26 ஆம் தேதி இரவு பிரஜ்வல் ரேவண்ணா ஜெர்மனிக்கு தப்பியோடினார்.
சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் 2 முறை லுக் அவுட் நோட்டீஸும் ஒரு முறை புளூ கார்னர் நோட்டீஸும் பிறப்பித்தனர். அவரது தூதரக பாஸ்போர்ட்டை முடக்குமாறு வெளியுறவுத் துறைக்கு கடிதம் எழுதினர். மத்திய அரசின் உதவியுடன் பிரஜ்வல் ஜெர்மனிக்கு சென்றுள்ளார் என காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியது.
சர்வதேச போலீஸ் உதவியுடன் ஜெர்மனியில் இருந்து அவரை அழைத்துவர நடவடிக்கை எடுக்கவேண்டும் என கர்நாடக முதல்வர் சித்தராமையா உள்ளிட்டோர் வலியுறுத்தினர். இதனிடையே, தேவகவுடா உள்ளிட்டோர் உடனடியாக நாடு திரும்புமாறு பிரஜ்வலுக்கு கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து, பிரஜ்வல் ரேவண்ணா தான் பேசிய வீடியோ ஒன்றை சமீபத்தில் வெளியிட்டார். அதில், "மே 31 ஆம் தேதி காலை 10 மணிக்கு சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் முன்னிலையில் நேரில் ஆஜராகிறேன். இந்த வழக்கை சட்டப்படி எதிர்கொள்வேன்" எனத் தெரிவித்திருந்தார்.
அதன்படி, ஜெர்மனியின் முனீச் நகரிலிருந்து புறப்பட்டு நேற்று அதிகாலை 1.30 மணியளவில் பிரஜ்வல் ரேவண்ணா பெங்களூர் விமான நிலையம் வந்திறங்கினார். அங்கு காத்திருந்த சிறப்பு புலனாய்வு குழு போலீசார் அவரை கைது செய்து சி.ஐ.டி அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தினர்.
மருத்துவப் பரிசோதனை நடத்தப்பட்டு நேற்று மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்தப்படுத்தப்பட்டார் பிரஜ்வல். 15 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சிறப்பு புலனாய்வுக் குழு போலீசார் அனுமதி கோரிய நிலையில் 6 நாட்கள் விசாரிக்க அனுமதி வழங்கி உத்தரவிட்டது சிறப்பு நீதிமன்றம்.
இதனிடையே இந்த வழக்கில் பிரஜ்வலின் தந்தை முன்னாள் அமைச்சர் ரேவண்ணா கைது செய்யப்பட்டார். 10 நாள் சிறை வாசத்துக்குப் பிறகு தற்போது ரேவண்ணா ஜாமீனில் இருக்கிறார். மைசூர் மாவட்டம் கே.ஆர். நகரைச் சேர்ந்த பெண்ணை கடத்தியதாக பிரஜ்வல் ரேவண்ணாவின் தாயாரும், எச்.டி. ரேவண்ணாவின் மனைவியுமான பவானி ரேவண்ணா மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இதனையடுத்து பிரஜ்வல் தாயார் பவானி ரேவண்ணாவை விசாரணைக்கு அழைத்தது சிஐடி. ஏற்கனவே பவானி ரேவண்ணாவுக்கு பலமுறை சம்மன் அனுப்பியும் அவர் விசாரணைக்கு அஜராகவில்லை. இந்த நிலையில் இன்றைய விசாரணைக்கு பவானி ரேவண்ணா ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டு புது சம்மன் அனுப்பி இருக்கிறது சிறப்பு புலனாய்வுக் குழு.
இதற்கு முன்பு அனுப்பப்பட்ட சம்மன்களுக்கு பவானி ரேவண்ணா பதில் கூட தராமல் இழுத்தடித்து வந்தார். இதனால் இன்று விசாரணை பவானி ரேவண்ணாவுக்கு நெருக்கடி தரக் கூடியதாக இருக்கக் கூடும் எனக் கூறப்படுகிறது. மேலும், பவானி ரேவண்ணா முன் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
இன்று பிரஜ்வல் ரேவண்ணாவின் தாயார் பவானி ரேவண்ணா, விசாரணைக்கு ஒத்துழைப்பு தராமல் இருந்தால் அவரை சிறப்பு புலனாய்வுக் குழு கைது செய்ய வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications