'தென்னிந்தியா தனி நாடு’- பெங்களூரில் காங். எம்பி வீடு முற்றுகை- தடுத்த போலீஸ்- பாஜகவினரால் பதற்றம்!
பெங்களூர்: தென்னிந்தியா மாநிலங்கள் தனிநாடு கோரும் நிலைமை உருவாகி இருப்பதாக கருத்து தெரிவித்த கர்நாடகா காங்கிரஸ் எம்பி டிகே சுரேஷ் வீட்டை பாஜகவினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதால் பெங்களூரில் பதற்றம் ஏற்பட்டது.
லோக்சபாவில் மத்திய இடைக்கால பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். மத்திய பட்ஜெட்டில் தென்னிந்திய மாநிலங்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. தமிழ்நாடு திட்டமிட்டே பட்ஜெட்டில் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார். தென்னிந்தியாவுக்கு பெரிய திட்டங்கள் எதுவும் இல்லை; இந்தி பெல்ட் அல்லது இந்தி மொழி பேசும் மாநிலங்கள்தான் இந்தியாவா? என கர்நாடகா துணை முதல்வர் டிகே சிவகுமார் கேள்வி எழுப்பி இருந்தார்.

கர்நாடகா காங்கிரஸ் எம்பியும் துணை முதல்வர் டிகே சிவகுமாரின் சகோதரருமான டிகே சுரேஷ், மத்திய பட்ஜெட்டில் தென்னிந்திய மாநிலங்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளன. இதனால் இந்தி பேசும் மாநிலங்களில் இருந்து தென்னிந்தியா மாநிலங்கள் தனிநாடு கோரும் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளதாக குமுறி இருந்தார். டிகே சுரேஷ் எம்பியின் இந்த கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு பாஜக தலைவர்கள் கடும் எதிர்ப்பும் தெரிவித்தனர்.
#WATCH | Karnataka: BJP Yuva Morcha workers stage protest outside Congress MP DK Suresh's residence in Bengaluru over his "separate country" remark. The protestors were later detained by Police. pic.twitter.com/WmR3FS0MmO
— ANI (@ANI) February 4, 2024
இந்நிலையில் தென்னிந்தியா தனிநாடு கோரும் கோரிக்கை குறித்து பேசியதற்காக பெங்களூர் சதாசிவநகரில் உள்ள டிகே சுரேஷ் எம்பி வீட்டை பாஜகவினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். டிகே சுரேஷ் எம்பி வீடு நோக்கி முற்றுகையிட சென்ற பாஜகவினரை போலீசார் தடுக்க முயன்ற போது தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது பாஜகவினரை போலீசார் தரதரவென இழுத்து சென்று வேனில் ஏற்றினர். இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டது.
இப்போராட்டம் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய பாஜக செய்தித் தொடர்பாளர் ராஜீவ், பாஜகவினர் மீது போலீசார் தடியடி நடத்தினர். அமைதியான முறையில் போராட்டம் நடத்திய பாஜகவினர் மீது போலீசார் தாக்குதல் நடத்தியது கண்டனத்துக்குரியது என்றார். பாஜகவினர் மீதான தாக்குதலுக்கு கர்நாடகா மாநில பாஜக தலைவர் விஜயேந்திரா உள்ளிட்ட பாஜக தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications