Ranya Rao: ரன்யா ராவின் செல்போனை பார்த்து போலீஸ் ஷாக்! தங்கம் வாங்கிய நட்சத்திர ஓட்டல் ஓனர் கைது
பெங்களூர்: பல்வேறு நாடுகளில் இருந்து கடத்தி வந்த தங்கத்தை நடிகை ரன்யா ராவிடம் வாங்கியதாக நட்சத்திர ஹோட்டல் உரிமையாளர் தருண் ராஜ் கைது செய்யப்பட்டுள்ளார். நீதிமன்றத்தில் ரன்யாவோ தான் அப்பாவி என அழுத சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
நடிகை ரன்யா ராவின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு இன்று வெளியாகிறது. கடந்த மார்ச் 3ஆம் தேதி துபாய் சென்றுவிட்டு பெங்களூர் திரும்பிய நடிகை ரன்யா ராவை வருவாய் புலனாய்வு துறை போலீஸார் அதிரடி சோதனை நடத்தினர்.

அப்போது அவர் 14.8 கிலோ தங்கம் கடத்தியதாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவர் தனது வாக்குமூலத்தில் துபாய்க்கு செல்லும் தகவல்களை எல்லாம் ஒரு கும்பல் தனக்கு தெரிவிப்பார்கள் என்றும் அதன் பேரில் தான் சென்று தங்கத்தை கடத்தி வருவதாகவும் தெரிவித்திருந்தார்.
தங்கக் கடத்தலுக்காக பிரத்யேக உடையை அணிந்து கொண்டு சென்றதாகவும் அவர் தெரிவித்திருந்தார். விமான நிலைய சோதனையிலிருந்து தப்ப தான் ஏடிஜிபியின் மகள் என கூறியதால் அவரை அதிகாரிகள் சோதனை செய்யாமலேயே விட்டுவிட்டனர்.
அவரும் ஏர்போர்ட் வாயிலில் காத்திருக்கும் வாகனத்தில் தனது அபார்ட்மென்ட்டிற்கு சென்று உள்ளே போய் தொடையில் ஒட்டியிருந்த தங்கக் கட்டிகளை எடுத்து ஒரு பையில் போட்டு தன்னை அழைத்து வந்த நபரிடம் கொடுத்துவிடுவாராம்.
இந்த விவகாரத்தில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ரன்யாவை 3 நாட்கள் காவலில் எடுத்து வருவாய் புலனாய்வு துறையினர் விசாரணை நடத்தினர். நேற்றுடன் 3 நாட்கள் காவல் முடிவடைந்த நிலையில் அவரை பொருளாதார குற்ற வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி விஸ்வநாத் கவுடா முன்பு ஆஜர்படுத்தப்படுத்தினர்.
அப்போது நீதிபதி, ரன்யாவிடம் "விசாரணையின் போது போலீஸார் உங்களுக்கு தொல்லை கொடுத்தார்களா" என கேட்டனர். அதற்கு ரன்யா ராவோ "எனக்கு தொல்லை கொடுக்கவில்லை. என்னை மிரட்டும் தொனியில் பேசினர். கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளிக்காவிட்டால் என்ன ஆகும் தெரியுமா என மிரட்டினர்.
சிலர் எனக்கு அழுத்தம் கொடுத்ததால்தான் நான் தங்கக் கட்டிகளை கடத்தினேன்" என கூறி நீதிபதியிடம் கதறி அழுதார். பின்னர் வருவாய் புலனாய்வு பிரிவு சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் கூறுகையில், விசாரணையின் போது நாங்கள் ரன்யா ராவை மிரட்டவில்லை.
கண்காணிப்பு கேமரா முன் வைத்து தான் அவரிடம் விசாரித்துள்ளோம். தேவைப்பட்டால் அந்த காட்சிகளை நீதிமன்றத்தில் தாக்கல் செய்கிறோம் என தெரிவித்தனர்.
இதையடுத்து ரன்யாவை 15 நாட்களில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். ரன்யா ராவின் செல்போனை ஆய்வு செய்த போது அதில் ஏராளமான அரசியல்வாதிகளின் எண்களை அவர்களது பெயரை கொண்ட சேவ் செய்து வைத்திருந்தார். அது போல் சில அரசியல்வாதிகள், போலீஸ் அதிகாரிகளுடனும் அவர் அடிக்கடி பேசியிருந்தது தெரியவந்தது.
இந்த நிலையில் தொழிலதிபரும், நட்சத்திர ஹோட்டல் உரிமையாளருமான தருண்ராஜுடன் அவர் அடிக்கடி பேசியதும், அவருக்கு தங்கம் கொடுத்ததும் தெரியவந்தது. இதையடுத்து தருண் ராஜை நேற்று தங்கள் அலுவலகத்திற்கு வரவழைத்து வருவாய் புலனாய்வு துறையினர் விசாரணை நடத்தினர். அவர்கள் கேட்ட கேள்விக்கு தருண் ராஜ் முறையான பதில் அளிக்காததால் தருண் ராஜ் கைது செய்யப்பட்டார்.












Click it and Unblock the Notifications