“இந்து மத மாணிவியுடன் உன்கென்ன பேச்சு?” முஸ்லீம் மாணவர் மீது சரமாரி தாக்குதல்! கர்நாடகாவில் கொடுமை
பெங்களூர்: கர்நாடகாவில் இந்து பெண்ணுடன் நட்பாக பேசியதற்காக முஸ்லீம் மாணவர் ஒருவர் சக மாணவர்களால் கொடூரமாக தாக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் வலதுசாரி அமைப்பை சேர்ந்த பிரமுகர் ஒருவர் கொலை செய்யப்பட்ட நிலையில் இந்த பகுதியில் பெரும் பதற்றம் நீடித்து வந்தது.
தற்போது இந்த சம்பவம் புதிய பதற்றத்தை உருவாக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கர்நாடக மாநிலம் தட்சிண கன்னட மாவட்டத்தில் உள்ள ஒரு கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வரும் ஒரு முஸ்லீம் மாணவன், சக இந்து மத மாணவியுடன் பேசியதற்காக கடுமையாக தாக்கப்பட்டுள்ளார். இது அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கெனவே இந்த மாவட்டத்தில் சில நாட்களுக்கு முன்னர் வலதுசாரி அமைப்பின் பிரமுகர் ஒருவர் கொலை செய்யப்பட்டு உயிரிழந்த சம்பவமும் அதனையொட்டி நடைபெற்ற கடையடைப்பு உள்ளிட்ட போராட்டங்களும் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி இருந்தன. இந்நிலையில் மேற்குறிப்பிட்டுள்ள சம்பவம் புதிய அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
தட்சிண கன்னட மாவட்டத்தில் உள்ள சுள்ளியா தாலுகாவிற்கு உட்பட்ட ஒரு கல்லூரியில் 19 வயது மதிக்கத்தக்க மாணவர் ஒருவர் முதலாம் ஆண்டு படித்து வந்திருக்கிறார். இந்நிலையில் இதே கல்லூரியில் பயின்று வந்த இந்து மதத்தை சேர்ந்த மாணவி ஒருவருக்கும் இவருக்கும் இடையே நட்பு ஏற்பட்டுள்ளது. ஆனால் மாணவியின் இதர நண்பர்கள் மாற்று மதத்தை சேர்ந்த ஒருவருடன் மாணவி பழகுவதற்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர்.
இந்நிலையில் நேற்று (ஆக.30) காலை 10.30 மணியளவில் இந்த சம்பவம் நடந்துள்ளது. அதே கல்லூரியின் இறுதியாண்டு பிபிஏ மாணவர்களான தீக்ஷித் மற்றும் தனுஷ் ஆகியோர் முஸ்லீம் மாணவனிடம் தனியாக பேச வேண்டும் என்று கூறி கல்லூரியின் மைதானத்திற்கு அவனை அழைத்து சென்றுள்ளனர். கல்லூரியின் விளையாட்டு மைதானத்தை அடைந்தவுடன், மற்ற மாணவர்களான பிரஜ்வல், தனுஜ், அக்ஷய், மோக்ஷித், என்எம்சி கல்லூரியின் கவுதம் மற்றும் பலர் ஒன்று சேர்ந்து முஸ்லீம் மாணவன் மீது திடீர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
தாக்கும்போது "இந்து மாணவியிடம் உனக்கென்ன பேச்சு வேண்டியுள்ளது?" என்று கேள்வியெழுப்பியுள்ளனர். மேலும், "இதேபோல தொடர்ந்து பேசினால் கொன்றுவிடுவேன்" என்று மிரட்டியுள்ளனர். இந்த சம்பவத்தையடுத்து படுகாயமடைந்த முஸ்லீம் மாணவர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் தீக்ஷித், தனுஷ், பிரஜ்வல், தனுஜ், அக்ஷய், மோக்ஷித், கௌதம் என மேலும் சில மாணவர்கள் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. விசாரணையையும் செய்து வருகிறது. காயமடைந்த முஸ்லீம் மாணவன் சுள்ளியா அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்து மத மாணவியுடன் சக முஸ்லீம் மாணவர் ஒருவர் நட்பாக பேசியதற்காக கொடூரமாக தாக்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications