டபுளாக எகிறிய PG ஹாஸ்டல் கட்டணம்.. பெங்களூரில் சூடுபிடிக்கும் வாடகை தொழில்.. கலங்கும் கர்நாடகம்
பெங்களூரு: கர்நாடகா மாநில தலைநகரான பெங்களூரில் வாடகை வீடுகள் மற்றும் தங்கும் விடுதிகளின் வாடகையானது மிக கடுமையாக அதிகரித்துள்ளது. இதனால் மாணவர்கள் பெரும் சவாலை எதிர்கொண்டுள்ளனர்.
பெங்களூரு ஒரு துடிப்பான நகரம். இதன் பிரதான முகம் ஐடி துறையும், ஆயத்த ஆடை உற்பத்தி துறையும்தான். என்னதான் துடிப்பாக இருந்தாலும் கடந்த 2020ம் ஆண்டு கொரோனா தொற்று காரணமாக மற்ற நகரங்களை போல பெங்களூரும் முடங்கியது. ஐடி துறையில் வேலை பார்த்த இளைஞர்கள் மூட்டை முடிச்சுகளுடன் சொந்த ஊர் சென்று சேர்ந்தனர். எனவே பெங்களூரில் வீட்டு வாடகைகளும் பாதியாக குறைந்தது. 2020ம் ஆண்டு தொடங்கிய இந்த நிலை 2022ம் ஆண்டு தொடக்கம் வரை நீடித்தது.

பின்னர் தொற்று பாதிப்பு குறைந்து அனைத்தும் இயல்பு நிலைக்கு திரும்பிய நிலையில், வொர்க் ப்ரம் ஹோமில் பணியாற்றிக்கொண்டிருந்த ஐடி துறை ஊழியர்களை நிறுவனங்கள் மீண்டும் அலுலவகத்திற்கு அழைக்க தொடங்கின. கட்டுப்பாடுகள் முழுமையாக நீக்கப்பட்ட பின்னர் மீண்டும் பெங்களூரு புதியதாக துடிப்புடன் இயங்க தொடங்கியது. தற்போது தேர்தலும் நடக்க இருப்பதால் ஒட்டுமொத்த கர்நாடக மாநிலமுமே பரபரப்பாக இருக்கிறது. இந்நிலையில்தான் பெங்களூருவாசிகள் பெரும் சிக்கலை சந்தித்து வருகின்றனர்.
அதாவது கொரோனா தொற்று காலத்தில் 10-20 சதவிகிதம் வரை குறைக்கப்பட்ட வீட்டு வாடகைகள் தற்போது 25-40 சதவிகிதம் வரை உயர்த்தப்பட்டிருக்கிறது. மறுபுறம் மாணவர்கள் தங்கும் பிஜி(PG) ஹாஸ்டல்களின் வாடகையும் அதிகரித்திருக்கிறது. குறிப்பாக நகரின் மையப்பகுதியில் கடந்த ஓராண்டில் மட்டும் ஏராளமான ஹாஸ்டல்கள் புதியதாக முளைத்திருக்கிறது. இது குறித்து மாணவி ஒருவர் கூறுகையில், "இந்திராநகர் மெட்ரோ ஸ்டேஷனிலிருந்து கொஞ்சம் தொலைவில் எங்கள் ஹாஸ்டல் இருக்கிறது. இந்த ஹாஸ்டலில் தற்போது தங்குவதற்கு ரூ.13,000 வரை வாடகை வசூலிக்கப்படுகிறது. நான்கு மாதங்களுக்கு முன்னர் இந்த வாடகை ரூ.11,000லிலிருந்து 12,000 வரைதான் இருந்தது" என்று கூறியுள்ளார்.
அதேபோல மாணவர்கள் கூறுகையில், "சிட்டிக்கு நடுவுல, மெயின்ல இருக்குற ஹாஸ்டல்ல வாடகை ரொம்ப அதிகமா இருக்கு. ஒரு ஆளுக்கு மட்டும் வேணும்னா ரூ.21,000 கேட்குறாங்க. இதுவே ரெண்டு பேர் ஷேர் செஞ்சுகிட்டா ரூ.17,000 கொடுக்கணும். இதே 3 பேர் ஷேர் செஞ்சா ரூ.13,000னு பீஸ் கேட்குராங்க" என்று கூறியுள்ளார். இந்த அளவுக்கு வாடகை உயர்ந்ததற்கு ஐடி துறைதான் காரணம் என்று குற்றம்சாட்டப்படுகிறது.

அதாவது ஐடி துறையில் பணியாற்றும் நபர்கள் வாடகை எவ்வளவு கேட்டாலும் கொடுக்கிறார்கள். எனவே மற்ற அனைவரிடத்திலும் இதே அளவுக்கு வாடகை எதிர்பார்க்கப்படுகிறது என வேறு துறைகளில் பணியாற்றுபவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இது குறித்து கல்லூரி மாணவிகள் கூறுகையில், "கடந்த ஆண்டு நாங்கள் 7,800 ரூபாய் வாடகையாக கொடுத்திருந்தோம். ஆனால் தற்போது இது 38% உயர்த்தப்பட்டு ரூ.10,800 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது" என்று கூறியுள்ளார். பெங்களூருவின் MG ரோடு பகுதியில் ஹாஸ்டல் வாடகை முன்பை விட தற்போது 1.5 முதல் 1.75 மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.
கடுபீசனஹள்ளியில் வசிக்கும் இளைஞர்கள் கூறுகையில், "நாங்கள் தற்போது ரூ.10,000 வடகையில் வசித்து வருகிறோம். இந்த இடம் எங்களுக்கு போதுமானதாக இல்லை. ஆனால் நாங்கள் வேறு இடம் போக வேண்டும் எனில் இதை விட ரூ.2,000 கூடுதலாக கொடுக்க வேண்டி இருக்கும். ஆனால் நாங்கள் இப்போது இருக்கும் ரூமை விட அது பெரியதாகவும் இருக்காது. எனவே இதுபோன்ற கட்டணங்களை அரசு வரமுறைபடுத்த வேண்டும்." என்று கூறியுள்ளனர். இதேபோல வீட்டு வாடகையின் தொகையும் 10-20% வரை அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications