அண்ணாமலைய விடுங்க.. காங்கிரஸ் இறக்கிய “தமிழர்”! கர்நாடக தேர்தலில் “மாஸ்டர் மைண்டான” முன்னாள் ஐஏஎஸ்
பெங்களூரு: கர்நாடகா மாநில பாஜகவின் தேர்தல் பொறுப்பாளராக தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை செயல்பட்டு வரும் நிலையில், காங்கிரஸ் கட்சியும் தேர்தல் பணிக்காக தமிழர் ஒருவரை சத்தமே இல்லாமல் நியமித்து இருக்கிறது. யார் அவர்? விரிவாக பார்ப்போம்.
கர்நாடகாவில் ஆளும் பசவராஜ் பொம்மை தலைமையிலான அரசின் பதவிக்காலம் மே 24 ஆம் தேதியுடன் முடிவடைய உள்ளது. இந்த நிலையில் இந்திய தலைமை தேர்தல் ஆணையம் மே 10 ஆம் தேதி கர்நாடக சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவித்து உள்ளது. மே 13 ஆம் தேதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

இன்னும் 7 நாட்களில் சட்டசபைத் தேர்தல் நடைபெற இருக்கும் சூழலில் அங்கு அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதில் வெற்றிபெற வேண்டும் என்பதற்காக அரசியல் கட்சிகள் பல்வேறு வியூகங்களை வகுத்து உள்ளன. அந்த வகையில் ஆளும் பாஜக அங்கு மீண்டும் ஆட்சியை பிடிக்க தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாகவே அம்மாநிலத்தில் ஐபிஎஸ் அதிகாரியாக பணிபுரிந்து விருப்ப ஓய்வுபெற்ற தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையை, கர்நாடக மாநில தேர்தல் பொறுப்பாளராக நியமித்தது. வேட்பாளர் தேர்வு, தேர்தல் பிரச்சாரம் என இந்த தேர்தலுக்காக அவர் தீவிரமாக பணியாற்றி வருகிறார். அண்ணாமலைக்கு பாஜக இந்த பொறுப்பு வழங்கியது அனைவருக்கும் தெரியும்.
ஆனால், காங்கிரஸ் இதேபோன்ற வேலையை சத்தமே இல்லாமல் செய்து இருக்கிறது. அண்ணாமலைக்கு இந்த பொறுப்பு வழங்கியது தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்புதான். ஆனால், காங்கிரஸ் கட்சியோ கடந்த 2022 ஆண்டு ஜூலை மாதமே தேர்தல் பணிகளை சத்தமே இல்லாமல் தொடங்கி வார் ரூம் ஒன்றையும் உருவாக்கியது. அதன் தலைவராக கர்நாடக மாநிலத்தில் பணிபுரிந்து விருப்ப ஓய்வு பெற்ற தமிழ்நாட்டை சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரியை அக்கட்சி நியமித்து வலுவாக காய் நகர்த்தி இருக்கிறது.

அவர்தான் சசிகாந்த் செந்தில். யுபிஎஸ்இ தேர்வில் தேசிய அளவில் 9 வது இடம் பிடித்து சாதித்த இவர் கர்நாடகா மாநிலம் மங்களூருவில் துணை ஆணையராக பணிபுரிந்தவர். சிவமோகா, சித்திரதுர்கா, தக்ஷின கன்னடா, பெல்லாரி, ராய்ச்சூர் போன்ற பகுதிகளிலும் இவர் பல்வேறு பொறுப்புகளில் இருந்து உள்ளார். கர்நாடகா மாநில மக்களின் பிரச்சனைகளை நன்கு அறிந்தவர். நேர்மையான, சிறப்பான மக்கள் சேவையால் அப்பகுதி மக்களை வெகுவாக கவர்ந்தவர்.
கடந்த 2019 ஆம் ஆண்டு பாஜக அரசு கொண்டு வந்த குடியுரிமை திருத்தச் சட்டம், என்.ஆர்.சி, என்.பி.ஆர் போன்றவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஐஏஎஸ் பதவியை தூக்கி எறிந்த சசிகாந்த் செந்தில், மக்கள் போராட்டங்களில் கலந்துகொண்டார். அதன் தொடர்ச்சியாக காங்கிரஸ் கட்சியில் இணைந்த அவர், தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சிகளில் பேசி வந்தார். இந்த நிலையில் கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 7 ஆம் தேதி கர்நாடக தேர்தலை முன்னிட்டு அம்மாநில காங்கிரஸ் கமிட்டியின் வார் ரூம் தலைவராக சசிகாந்த் செந்திலை நியமித்தது கட்சித் தலைமை.
அன்று தொடங்கி சமூக வலைதளங்களில் ஆளும் மத்திய மாநில பாஜக அரசுகளின் குறைகளை மக்களுக்கு அம்பலப்படுத்துவது, காங்கிரஸின் திட்டங்கள் மற்றும் செயல்பாடுகளை மக்களுக்கு எடுத்து செல்வது என பக்காவாக ஸ்கெட்ச் போட்டு அதில் ஓரளவு வெற்றியும் கண்டு உள்ளார் ஓய்வுபெற்ற முன்னாள் ஐஏஎஸ் சசிகாந்த் செந்தில்.
அதற்கான விடைதான் தற்போது வெளியாகி இருக்கும் கருத்துக்கணிப்பு முடிவுகள். பெரும்பாலான கருத்துக்கணிப்புகள் காங்கிரஸ் வெற்றிபெறும் என்றே சொல்கின்றன. இந்த எழுச்சிக்கு முக்கிய பங்காற்றியவர் சசிகாந்த் செந்தில். கர்நாடகாவில் மிகப்பெரிய அளவில் டிரெண்டான #CryPMPayCM, #PayCM போன்ற ஹேஷ்டேக்குகளை உருவாக்கியது இவரது அணிதான்.
இதுபற்றி தனியார் தொலைக்காட்சி வெளியிட்ட செய்தி குறித்து கருத்து தெரிவித்து இருக்கும் சசிகாந்த் செந்தில், "6 மாத கால கடின உழைப்புக்கு 10 ஆம் தேதி நிச்சயம் முடிவு கிடைக்கும். கனெக்ட் செண்டர் எனப்படும் காங்கிரஸ் வார் ரூம், கட்சியின் துல்லியமான தேர்தல் மேலாண்மைக்கான தொடக்கமாக இருக்கும்." என்று குறிப்பிட்டு உள்ளார்.












Click it and Unblock the Notifications