மேகதாது திட்டத்தால் பாதிப்பு இல்லை.. திமுக, அதிமுக அரசியல் செய்கின்றன.. சித்தராமையா சொல்றதை பாருங்க
பெங்களூர்: மேகதாது திட்டத்தால் தமிழ்நாட்டிற்கு எந்த பாதிப்பும் கிடையாது. மாறாக அந்த மாநிலத்திற்கு நன்மை தான் ஏற்படும் என்றும், இதை வைத்து அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகள் அரசியல் செய்வதாக கர்நாடக முதல்வர் சித்தராமையா பேசினார்.
காவிரி நதி நீர் பங்கீடு விவகாரத்தில் தமிழ்நாட்டிற்கும் கர்நாடாவிற்கும் இடையே பிரச்சினை நிலவுகிறது. காவிரியில் தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய பங்கை கொடுக்க மறுத்து கர்நாடக அரசு அடம் பிடித்து வருகிறது. ஆண்டு தோறும் இது தொடர்கதையாகி கொண்டே வருகிறது. காவிரி விவாகரத்தில் மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுகளைக் கூட கர்நாடகா முறையாக நிறைவேற்றுவதில்லை என்ற குற்றச்சாட்டுக்கள் எழுப்பப்படுகின்றன.

இதற்கிடையே மேகதாதுவில் அணை கட்டவும் கர்நாடகா துடித்து வருகிறது. எனினும், தமிழக அரசு கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வருவதோடு, மேகதாதுவில் அணை கட்ட எந்த காலத்திலும் அனுமதி அளிக்க மாட்டோம் என உறுதிபட தெரிவித்து வருகிறது. இந்த நிலையில் தான், கர்நாடக சட்ட மேலவையில் பேசிய அம்மாநில முதல்வர் சித்தராமையா மேகதாது விவாகரத்தில் திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் அரசியல் செய்வதாக கூறியுள்ளார்.
தமிழகத்திற்கு நன்மை தான்: இன்று கர்நாடக சட்ட மேலவையில் முதல்வர் சித்தராமையா, மேகதாது விவகாரம் குறித்தும் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- காவிரி பிரச்சினையில் உச்ச நீதிமன்றம் கடந்த 2018-ம் ஆண்டு தீர்ப்பு வழங்கியது. அதில் தமிழகத்திற்கு 177.25 டிஎம்சி நீரை ஒதுக்கியது. இடர்பாட்டு காலத்தில் இரு மாநிலங்களும் தண்ணீரை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று தீர்ப்பில் சொல்லப்பட்டுள்ளது.
குடிநீர், மின்சார உற்பத்திக்காக மேகதாது திட்டத்தை அரசு வகுத்துள்ளது. இதற்கான அணை கர்நாடக எல்லைக்குள் தான் கட்டப்படுகிறது. இதனால் தமிழ்நாட்டிற்கு எந்த பாதிப்பும் கிடையாது. மாறாக அந்த மாநிலத்திற்கு நன்மை தான் ஏற்படும். ஆனால், மேகதாது விவகாரத்தில் திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் அரசியல் செய்கின்றன" என்றார். தொடர்ந்து வட கர்நாடக விவகாரம் குறித்து சித்தராமையா கூறியதாவது:-
அரசிய சாசன அந்தஸ்து: வட கர்நாடகத்தை பிரித்து தனி மாநிலம் அமைக்க கோருவது சரியல்ல. இது ஒருங்கிணைந்த கர்நாடகத்திற்காக போராடியவர்களை அவமதிப்பது ஆகும். மொழி வாரியாக மாநிலங்களை பிரிக்க வேண்டும் என்று நமது முன்னோர்கள் போராடினர். அதன் விளைவாக கர்நாடகம் உதயமானது.
கல்யாண கர்நாடக பகுதிக்கு அரசியல் சாசன அந்தஸ்து கிடைக்க மல்லிகார்ஜுன கார்கே போராடினார். வளர்ச்சிக்காக ஒதுக்கப்பட்ட நிதியை செலவு செய்து வளர்ச்சியை ஏற்படுத்த வேண்டும். மும்பை கர்நாடகத்தில் உள்ள பின்தங்கிய தாலுகாக்களுக்கும் நிதி ஒதுக்கப்படும். இவ்வாறு சித்தராமையா பேசினார்.












Click it and Unblock the Notifications