பெங்களூரில் தங்கத்தை பார்த்ததுமே சலனப்பட்ட தேவி.. சும்மா விடுவாரா தொழில் அதிபர்.. ட்விஸ்ட்
பெங்களூர்: கர்நாடக மாநிலம் பெங்களூர் ராமநகர் மாவட்டம் மாகடியில் வசிக்கும் தொழில் அதிபர் ஒருவரின் வீட்டில் இருந்து ரூ.7 லட்சம் மதிப்பிலான 101 கிராம் தங்க கட்டிகள் திருடு போய் இருந்தது. இது குறித்து தொழில் அதிபர் அளித்த புகாரின் பேரில் கண்காணிப்பு கேமராவை போலீசார் ஆய்வு செய்தனர். இதில் வீட்டில் வேலை பார்த்து வந்த தமிழக பெண் தேவி மீது சந்தேகம் எழுந்தது.. அவர் தலைமறைவானது சந்தேகத்தை உறுதிப்படுத்தியது. அவரை கைது செய்து ரூ.7 லட்சம் மதிப்பிலான நகைகளை போலீசார் மீட்டனர்.
பெரிய தொழில் அதிபர்கள், நடிகர், நடிகைகள், பணக்கார வீடுகளில் பணியாற்றும் சில வேலைக்காரர்கள், பணம்,நகையை பார்த்ததும் சலனப்பட்டு திருடுவது அடிக்கடி நடக்கிறது. பீரோவை வேலைக்கார பெண்கள் முன்பு திறந்து மூடுவது, பீரோ சாவி அவர்களுக்கு தெரிந்த இடத்தில் இருப்பது, நகைகள் எவ்வளவு இருக்கிறது என்கிற அளவு தெரியாத அளவிற்கு தங்கத்தை மதிப்பிடாமல் வைத்திருப்பது, கணக்கு பார்க்காமல் பணத்தை செலவு செய்வது போன்றவை சில வேலைக்கார பெண்களுக்கு சாதகமாகி விடுகிறது.

அவர்கள் தங்க நகைகளை திருடுவது சர்வ சாதாரணமாக நடக்கிறது. கடைசியில் ஒரு நாள் வீட்டின் உரிமையாளர்கள் கண்டுபிடிக்கும் போது, அதை அடகு வைத்து செலவு செய்துவிடுகிறார்கள்.. இல்லாவிட்டால் அதை விற்று வீடு, கார் என வேண்டியை வாங்கி கொள்கிறார்கள். வழக்கம் போல் ஒன்றும் தெரியாதது போல் வேலையும் செய்கிறார்கள்.. இப்படி இருந்த தமிழக பெண் தேவி பெங்களூரில் சிக்கியுள்ளார்.
கர்நாடக மாநிலம் ராமநகர் மாவட்டம் மாகடியில் தொழில் அதிபர் வீட்டில் இருந்த 101 கிராம் தங்க கட்டிகள் திடீரென திருடு போய் இருந்தது. இதுகுறித்து பிரபல தொழில் அதிபர் நேற்று முன்தினம் ராம்நகர் மாவட்டம் மாகடி போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் விசாரணை நடத்திய போலீசார் தொழில் அதிபர் வீட்டில் இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை தீவிரமாக ஆய்வு செய்தனர். அப்போது வீட்டில் வேலை பார்த்து வந்த பெண் மீது அவர்களுக்கு சந்தேகம் எழுந்தது. அவரை விசாரணைக்கு தேடியபோது பெண் மாயமாகி இருந்தார். இதுகுறித்து மாகடி போலீசார் வழக்குப்பதிவு செய்து வேலைக்கார பெண்ணை தேடி வந்தார்கள்.
இந்தநிலையில் அந்த பெண் தமிழ்நாட்டில் தலைமறைவாக இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. விரைந்து சென்ற போலீசார் அந்த பெண்ணை கைது செய்தனர். விசாரணையில் அவர் தமிழ்நாடு திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த தேவி (வயது 55) என்பது தெரியவந்தது. தொழில் அதிபர் வீட்டில் இல்லாதபோது பீரோவை திறந்து தங்க கட்டிகளை திருடி இருக்கிறார். பின்னர் அந்த தங்கக்கட்டிகளை திருவண்ணாமலைக்கு எடுத்து சென்று உருக்கி நகைகள் செய்திருப்பது விசாரணையில் தெரியவந்தது. அவரிடம் இருந்து ரூ.7 லட்சம் மதிப்பிலான 101 கிராம் தங்க நகைகளை போலீசார் மீட்டனர். இறுதியில் தேவியை பிடித்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.












Click it and Unblock the Notifications