டார்க்கெட் ‛ஆர்எஸ்எஸ்'.. கர்நாடகா காங்கிரஸ் அரசின் உத்தரவுக்கு இடைக்கால தடை.. உயர்நீதிமன்றம் அதிரடி
பெங்களூர்: அரசு பள்ளி, கல்லூரி வளாகங்களில் தனியார் அமைப்புகள் அல்லது தனியார் நிறுவனங்கள் விழா, நிகழ்ச்சி நடத்த விரும்பினால் முன்கூட்டியே அனுமதி பெற வேண்டும் என்று கர்நாடகா அரசு அதிரடியாக உத்தரவிட்டது. இதன்மூலமாக ஆர்எஸ்எஸ் அமைப்பின் செயல்பாட்டை மாநிலம் முழுவதும் கட்டுப்படுத்தலாம் என காங்கிரஸ் அரசு நினைப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் இந்த உத்தரவுக்கு பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இந்நிலையில் தான் கர்நாடகா அரசின் உத்தரவுக்கு உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடக்கிறது. முதல்வராக சித்தராமையா உள்ளார். துணை முதல்வராக டிகே சிவக்குமார் இருக்கிறார். தென்இந்தியாவில் பாஜக செல்வாக்காக இருக்கும் ஒரே மாநிலம் கர்நாடகா தான். அங்கு பாஜக பிரதான எதிர்க்கட்சியாக செயல்பட்டு வருகிறது.
கர்நாடகாவில் பாஜக செல்வாக்குடன் இருக்க ஆர்எஸ்எஸ் அமைப்பின் செயல்பாடும் முக்கிய காரணமாகும்.

இந்நிலையில் தான் சமீபத்தில் கர்நாடகா அரசு அதிரடியாக உத்தரவு ஒன்றை பிறப்பித்தது. தனியார் அமைப்புகள் அல்லது தனியார் நிறுவனங்கள் அரசு பள்ளி, கல்லூரி மைதானங்களில் தங்களின் விழா, நிகழ்ச்சிகளை நடத்த விரும்பினால் அதுதொடர்பாக சம்பந்தப்பட்ட துறையிடம் முன்கூட்டியே அனுமதி பெற வேண்டும். அதோடு மாவட்ட நிர்வாகத்திடம் தகவல் தெரிவிக்க வேண்டும் என்று கர்நாடகா அரசு சார்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இந்த உத்தரவு என்பது மாநிலத்தில் ஆர்எஸ்எஸ் செயல்பாட்டை முடக்குவதை நோக்கமாக கொண்டு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதாவது கர்நாடகாவின் கலபுரகியில் உள்ள அரசு பள்ளி வளாகத்தில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் நூற்றாண்டு விழா நடைபெற்றது. இதற்கு காங்கிரஸ் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இந்த விழாவுக்கு தடை போட வேண்டும் என்று கர்நாடகா அமைச்சரும் பிரியங்க் கார்கே கூறினார். இவர் காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவின் மகன் ஆவார்.
இதையடுத்து தான் கர்நாடகா அரசு சார்பில் அதிரடியான உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதோடு கர்நாடகா அரசு சமீபத்தில் அரசு மற்றும் பொது இடத்தை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பது தொடர்பாக வழிக்காட்டு நெறிமுறைகளை வழங்கியது. மேலும் மாவட்ட நிர்வாகம் இந்த நிகழ்ச்சிகளை கவனித்து விதிமீறல் இருந்தால் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த நடவடிக்கை என்பது கர்நாடகா நில வருவாய் மற்றும் கல்வி சட்டத்தின் (Karnataka Land Revenue and Education Act) கீழ் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இதற்கு பாஜக, ஆர்எஸ்எஸ் மற்றும் இந்து அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆர்எஸ்எஸ் செயல்பாட்டை முடக்க நினைப்பதாக கூறினர். இருப்பினும் இந்த குற்றச்சாட்டை கர்நாடகா சட்டசபை விவகாரத்துறை அமைச்சர் எச்கே பட்டீல் முற்றிலுமாக மறுத்தது. இதுதொடர்பாக அவர், ‛‛எந்த அமைப்பு, நிறுவனங்களையும் குறிவைத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்படவில்லை. அரசு இடத்தை முறையான அனுமதியுடன் சரியான விஷயத்துக்கு பயன்படுத்த வேண்டும் என்ற அடிப்படையில் தான் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதில் விதிமீறல் நடக்கும் பட்சத்தில் சட்ட நடவடிக்கை பாயும்'' என்று கூறியிருந்தார்.
கர்நாடகா அரசின் உத்தரவை எதிர்த்து தார்வாரில் உள்ள கர்நாடகா உயர்நீதிமன்ற கிளையில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. புனஷ் சைதன்யா சேவா சமஸ்தே என்ற அமைப்பு தாக்கல் செய்த மனுவில், ‛‛கர்நாடகா அரசின் உத்தரவு என்பது தனியார் நிறுவனங்கள் சட்டப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான உரிமைகளை கட்டுப்படுத்தி மீறும் வகையில் உள்ளது. இதனால் கர்நாடகா அரசின் உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும்'' என்று கூறப்பட்டு இருந்தது.
இந்த மனுவை இன்று நீதிபதி நாகபிரசன்னா விசாரித்தார். அப்போது கர்நாடகா அரசு பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தார். மேலும் வழக்கு விசாரணையை நவம்பர் 17 ம்தேதிக்கு ஒத்திவைத்தார். இது கர்நாடகா அரசுக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications