கருப்பா இருந்தா கள்ளத்தொடர்பா? அவமானப்படுத்திய மனைவி.. டைவர்ஸ் கேட்ட கணவர்! கோர்ட் சொன்னதை பாருங்க
பெங்களூர்: கருப்பாக இருப்பதால் தன்னுடைய மனைவி தன்னை தொடர்ந்து அவமதிக்கிறார் எனக்கூறி விவாகரத்து கேட்டு வந்தவருக்கு கர்நாடக உயர்நீதிமன்றம் விவாகரத்து வழங்கியுள்ளது. மட்டுமல்லாது இப்படியான விஷயம் 'கொடுமையானது' என்றும் சுட்டிக்காட்டியுள்ளது.
தன்னை உயர்ந்தவனாகவும், பிறரை தாழ்ந்தவனாகவும் கருதுபவன் மனநோயாளி எனும் உண்மை சாதிய ரீதியில் பிறரை ஒடுக்குபவர்களுக்கு மட்டுமல்ல நிறத்தை வைத்து ஒடுக்குமுறையில் ஈடுபடுபவர்களுக்கும் பொருந்தும். இந்தியாவில் சாதி, மதம், ஏழை பணக்காரன் என்கிற பாகுபாடுகள் ஒருபுறம் இருந்தாலும் நிற பாகுபாடு சமீப காலமாக தீவிரமாக வளர்ந்து வருகிறது. இந்த பாகுபாடு காரணமாக நடக்கும் ஏராளமான சம்பவங்களின் தொடர்ச்சியாக தற்போது ஒரு குடும்பம் விவாகரத்து பெற்று பிரிந்திருக்கிறது.

கர்நாடக மாநிலம் பெங்களூரில் வசித்து வரும் 44 வயதான நபர் தன்னுடைய மனைவியிடமிருந்து விவாகரத்து வேண்டும் என்று குடும்ப நல நீதிமன்றத்தை நாடியிருக்கிறார். இவர்களுக்கு கடந்த 2007ம் ஆண்டு திருமணம் நடந்திருக்கிறது. தற்போது ஒரு பெண் குழந்தை இருக்கிறது. இந்நிலையில் கடந்த 2012ம் ஆண்டே இவர்கள் விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தை அணுகியுள்ளனர். வழக்கை விசாரித்த நீதிமன்றம் 2017ம் ஆண்டு தள்ளுபடி செய்துவிட்டது.
எனவே கணவர் கர்நாடக உயர்நீதிமன்றத்தை நாடியிருக்கிறார். இந்த வழக்கு நீண்ட காலமாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. ஆனால், தீர்ப்பின் போது நீதிபதி குறிப்பிட்ட விஷயங்கள் கவனிக்க வேண்டிய ஒன்றாகும். அதாவது, இந்த வழக்கில் 41 வயது மதிக்கத்தக்க மனைவி, "என்னுடைய கணவர் திருமணத்தை மீறிய உறவில் இருக்கிறார், அவருக்கு ஒரு குழந்தை இருக்கிறது. மட்டுமல்லாது அவரும் அவருடைய குடும்பத்தினரும் என்னை மோசமாக நடத்துகின்றனர்.
வரதட்சணை கேட்டு தொல்லை செய்கின்றனர். என்னுடைய குழந்தையுடன் எங்கும் வெளியில் செல்ல அனுமதிக்கவில்லை. வீட்டில் குடும்ப வன்முறை அதிகரித்துள்ளது" என்று கூறி விவாகரத்து கோரியுள்ளார். இவர் கொடுத்த புகாரின் பேரில் கணவரின் தாயார் மீது குடும்ப வன்முறை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. குழந்தையுடன் மனைவி அவரது தாய் வீட்டில் வசித்து வருகிறார்.
இந்நிலையில் இந்த குற்றச்சாட்டுகளை கணவர் மறுத்திருக்கிறார். மேலும், "நான் கருப்பாக இருக்கிறேன் என்பதால் மனைவி என்னை வெறுக்கிறார், அவமானப்படுத்தினார் . எங்களுக்கு பிறக்கும் குழந்தை குறித்த அச்சமும் அவருக்கு இருந்தது. எனவேதான் அவர் அவரது தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார்" என்று கூறினார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் அலோக் ஆராதே, அனந்த் ராமநாத் ஹெக்டே ஆகியோர் அடங்கிய அமர்வு கணவருக்கு விவாகரத்து வழங்கி உத்தரவிட்டனர்.
முன்னதாக, "விசாரணையில் கணவர் கருப்பாக இருப்பதால்தான் மனைவி அவரை அவமானப்படுத்தியுள்ளார் என்பது தெளிவாகியுள்ளது. வேறு எந்த காரணமும் இல்லாமல் மனைவி அவரை விட்டு பிரிந்து சென்றிருப்பதும் இதில் கவனிக்கத்தக்கதாகும். கருப்பாக இருக்கும் கணவர் மனைவியால் அவமானப்படுத்தப்படுவது கொடுமையானதாகும். இதுவே அவர் குடும்ப நல நீதிமன்றத்தின் உத்தரவை ஏற்காமல் மேல் முறையீடு செய்ய வலுவான காரணமாகும். எனவே நாங்கள் அவருக்கு விவாகரத்து வழங்குகிறோம்" என்று கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications