ரேஷனில் அரிசிக்கு பதில் இனி மளிகை பொருட்கள்.. வெளியான முக்கிய தகவல்.. அசத்தப்போகும் கர்நாடகா
பெங்களூர்: கர்நாடகாவில் 2023ம் ஆண்டில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தது. அதன்பிறகு ரேஷனில் ‛அன்னபாக்யா' திட்டத்தின் கீழ் கூடுதலாக 5 கிலோ அரிசி வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தான், அந்த கூடுதல் அரிசிக்கு பதில் ரேஷனில் மளிகை பொருட்கள் வழங்கும் திட்டத்தை கொண்டு வரப்பட உள்ளதாக கர்நாடகா துணை முதல்வர் டிகே சிவக்குமார் கூறியுள்ளார்.
கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடக்கிறது. முதல்வராக சித்தராமையாவும், துணை முதல்வராக டிகே சிவக்குமாரும் உள்ளனர். கடந்த 2023 சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது.

முன்னதாக தேர்தல் பிரசாரத்தின்போது காங்கிரஸ் ஆட்சியை பிடித்தால் ரேஷன் கடைகளில் ‛அன்னபாக்யா' திட்டத்தின் கீழ் கூடுதலாக 5 கிலோ அரிசி வழங்கப்படும் என்று காங்கிரஸ் தெரிவித்து இருந்தது. இதையடுத்து தற்போது அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு கூடுதலாக 5 கிலோ அரிசி வழங்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையே தான் கூடுதலாக வழங்கப்படும் ரேஷன் அரிசியை பொதுமக்கள் விற்பனை செய்வதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக மாநிலம் முழுவதும் நிறைய புகார்கள் எழுந்துள்ளன. இதனால் ரேஷன் அரிசி கள்ளச்சந்தையில் அதிக விற்பனைக்கு செல்கிறது. இதனை தடுக்க கர்நாடகா அரசு புதிய முடிவை எடுத்துள்ளது. அதன்படி கூடுதலாக வழங்கும் 5 கிலோ அரிசிக்கு பதில் ரேஷனில் மளிகை பொருட்கள் ‛கிட்' வழங்குவது பற்றி பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது.
‛இந்திரா கிட்' என்ற பெயரில் இந்த மளிகை பொருட்கள் வழங்கப்பட உள்ளது. அதில் சமையல் எண்ணெய், பருப்பு,சர்க்கரை, உப்பு உள்பட பிற மளிகை பொருட்கள் வைத்து வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் நினைவாக மளிகை பொருட்கள் அடங்கிய பாக்ஸிற்கு‛இந்திரா கிட்' என்ற பெயர் வைக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இதுபற்றி துணை முதல்வர் டிகே சிவக்குமார் கூறுகையில், ‛‛அன்னபாக்யா திட்டத்தின் கீழ் கூடுதலாக 5 கிலோ அரிசி வழங்குவதாக அறிவித்தோம். அதனை செயல்படுத்தி வருகிறோம். ஆனால் ரேஷன் அரிசி திறந்தவெளி சந்தையில் அதிகமாக விற்பனை செய்யப்படுகிறது. இதனை தடுக்கும் வகையில் 5 கிலோ கூடுதல் ரேஷன் அரிசிக்கு பதில் மளிகை பொருட்கள் வழங்கப்பட உள்ளது.
இதற்கு யாரும் அழுத்தம் கொடுக்கவில்லை. இந்த முடிவை எங்களின் எம்எல்ஏக்கள், மாநில நிலவரத்தை அறிந்து விவாதித்து எடுத்துள்ளோம். இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவு முதல்வர் சித்தராமையா மற்றும் அமைச்சர் கே.எச். முனியப்பா தலைமையில் எடுக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சி நேருவின் காலத்திலிருந்தே மக்களுக்கு உணவு பாதுகாப்பை வழங்கி வருகிறது.
இந்திரா காந்தி மற்றும் தேவராஜ் அர்ஸ் (கர்நாடகா முன்னாள் முதல்வர்) உழவர்களுக்கு நிலம் வழங்கினார். எஸ்.எம். கிருஷ்ணா மதிய உணவுத் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். சித்தராமையா பதவியேற்ற நாளன்று அன்ன பாக்யா திட்டத்தைத் தொடங்கினார். இந்த நலத்திட்டங்களை யாராலும் தடுக்க முடியாது.
கியாஸ் சிலிண்டர் உள்பட பிற அத்தியாவசிய பொருட்களின் விலைகள் உயர்ந்தாலும் கூட எங்கள் அரசாங்கம் உத்தரவாதத் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதற்காக எங்கள் அரசாங்கம் ஒவ்வொரு ஆண்டும் ரூ.53,000 கோடியை செலவிடுகிறது. பிரதமர் உட்பட பாஜக தலைவர்கள் எங்கள் உத்தரவாத திட்டங்களை விமர்சித்தனர். ஆனால் அவர்கள் பல மாநிலங்களில் இந்தத் திட்டங்களை காப்பியடித்து அறிவிப்பு செய்து வருகின்றனர்'' என்றார்.












Click it and Unblock the Notifications