Thug life: கமல்ஹாசன் நீதிமன்றத்திற்கு போனாலும் கர்நாடகாவில் 'தக் லைஃப்' திரையிடப்படாது : அதிரடியாக அறிவிப்பு
பெங்களூர்: நடிகர் கமல்ஹாசன் நீதிமன்றத்திற்கு போவதாக இருந்தால் போகட்டும்.. ஆனால் கர்நாடகாவில் உள்ள எந்த திரையரங்குகளிலும் 'தக் லைஃப்' திரையிடப்படாது என்று கர்நாடக திரைப்பட வர்த்தக சபைத் தலைவர் எம். நரசிம்மலு திட்டவட்டமாக கூறினார். கமல்ஹாசன் கன்னட மொழி தமிழில் இருந்து பிறந்த மொழி என்று கூறியதற்கு மன்னிப்பு கேட்காமல் படத்தை திரையிட அனுமதிக்க முடியாது என்று கர்நாடகாவில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.
நடிகர் கமல்ஹாசன் புதிதாக 'தக் லைப்' என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். அந்த திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடந்தது. இதில் கலந்து கொண்ட நடிகர் கமல்ஹாசன் கன்னட மொழி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக கூறப்படுகிறது. அதாவது தமிழில் இருந்தே கன்னட மொழி பிறந்ததாக கூறியிருந்தார். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கமல்ஹாசன் பேச்சுக்கு கர்நாடகத்தில் பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். நடிகர் கமல்ஹாசன் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. ஆனால் கமல்ஹாசன் மன்னிப்பு கேட்க மறுத்துவிட்டார். கமல்ஹாசன் அன்பின் காரணமாக கூறப்பட்டவை என்றும், "அன்பு ஒருபோதும் மன்னிப்பு கேட்காது" என்றும் நடிகர் கமல்ஹாசன் கூறியிருந்தார்.
இதனால் கோபம் அடைந்த கன்னட மொழி ஆர்வலர்கள், தக் லைப் திரைப்படத்தை கர்நாடகாவில் திரையிட அனுமதிக்கக்கூடாது என்றும், கமல்ஹாசன் மன்னிப்பு கேட்காமல் தக் லைப் திரைப்படத்தை வெளியிட அனுமதிக்ககூடாது என்றும் போர்க்கொடி உயர்த்தினார்கள். இந்நிலையில் 'தக் லைஃப்' திரைப்படம் கர்நாடகத்தில் எந்த திரையரங்கிலும் திரையிடப்படாது என்று கர்நாடக திரைப்பட வர்த்தக சபை அதிரடியாக அறிவித்தது.
இதையடுத்து 'தக் லைஃப்' திரைப்படத்தை கர்நாடகாவில் சுமூகமாக வெளியிடப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்றும், அதற்கு உரிய பாதுகாப்பு தர வேண்டும் என்றும் கோரி நடிகர் கமல்ஹாசன் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். 'தக் லைஃப்' திரைப்படத்தின் இணை தயாரிப்பாளரான கமல்ஹாசனின் ராஜ் கமல் இன்டர்நேஷனல் சார்பில், பாதுகாப்பு கோரி கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.
இதுபற்றி பிடிஐ செய்தி நிறுவனத்திடம் கர்நாடக திரைப்பட வர்த்தக சபைத் தலைவர் எம். நரசிம்மலு பேசுகையில், ஊடகங்களில் செய்தி வெளியான பிறகுதான் கமல்ஹாசனின் ராஜ்கமல் தயாரிப்பு நிறுவனம் கர்நாடக உயர் நீதிமன்றத்தை அணுகுவது குறித்து தங்களுக்குத் தெரியும். நாங்கள் எங்கள் சட்டக் குழுவுடனும் பேசவிருக்கிறோம். இது வெறும் திரைப்படத் துறை பிரச்சினை அல்ல; இது ஒரு மாநில மற்றும் மொழிப் பிரச்சினையாக மாறி இருக்கிறது.
இது தொடர்பாக அரசிடம் இருந்து எங்களுக்கு ஒரு கடிதம் வந்துள்ளது. எனவே கன்னட ஆதரவு அமைப்புகள், அரசியல்வாதிகள் மற்றும் மாநில மக்கள் உட்பட அனைவரும் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கோரியிருக்கிறார்கள். அவர்கள் கர்நாடாவின் உயர்நீதிமன்றத்திற்கு செல்லட்டும். நாங்கள் சட்டத்திற்கு எதிராக எதுவும் செய்யவில்லை. இங்கே, எங்கள் திரையரங்குகள் எதுவும் 'தக் லைஃப்' படத்தை திரையிடாது.
துபாயில் படத்தை விளம்பரப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ள கமல்ஹாசனிடம் பேசிய பிறகு செவ்வாய்க்கிழமை ஒரு முடிவுக்கு வருவோம் என்று கர்நாடகாவில் படத்தை வாங்கிய விநியோகஸ்தர்கள் எனக்கு தெரிவித்தனர். எனவே, கமலுடன் பேசிய பிறகு, அவர்கள் தங்கள் முடிவை எங்களிடம் தெரிவிப்பார்கள். நீதிமன்ற பாதுகாப்பு நடவடிக்கை குறித்தும் நாங்கள் விவாதித்து ஒரு முடிவை எடுப்போம். தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை கூட கமல் ஹாசனை இந்த விவகாரம் தொடர்பாக தொடர்பு கொள்ள முயற்சித்தது" இவ்வாறு கூறினார். எனினும் மன்னிப்பு கேட்க முடியாது என்றும் தான் தவறு எதுவும் செய்யாத போது, ஏன் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் கமல்ஹாசன் கேள்வி எழுப்பினார்.












Click it and Unblock the Notifications