சினிமாவை மிஞ்சும் ட்விஸ்ட்.. ரசிகரை கொன்ற வழக்கில் கன்னட நடிகர் தர்ஷன் சிக்கியது எப்படி! பகீர் தகவல்
பெங்களூர்: கர்நாடகாவைச் சேர்ந்த ரேணுகாசாமி கொலை வழக்கில் நடிகர் தர்ஷன் உட்பட பலரும் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இதில் சினிமாவை மிஞ்சும் அளவுக்குப் பல ட்விஸ்ட்கள் அரங்கேறியுள்ளது.
கர்நாடகாவைச் சேர்ந்த 33 வயதான ரேணுகாசாமியின் கொடூர கொலை இப்போது அந்த மாநிலத்தைத் தாண்டிய தேசியளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இவரைக் கொலை செய்ததாகக் கன்னட நடிகர் தர்ஷன் கைது செய்யப்பட்டுள்ளார். தர்ஷனின் நெருங்கிய தோழியான கன்னட நடிகை பவித்ரா கவுடா குறித்து சமூக வலைத்தளங்களில் தரக்குறைவான கருத்துகளை வெளியிட்டதற்காக ரேணுகாசாமி கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.
கொலை வழக்கு: இந்த கொலை தொடர்பாக இதுவரை 15க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்துள்ளனர். Challenging Star என்று ரசிகர்களால் அன்புடன் அழைக்கும் தர்ஷனும் இதில் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், அவரது நெருங்கிய தோழியான பவித்ரா கவுடாவையும் போலீசார் கைது செய்துள்ளனர். போலீஸ் விசாரணையில் பல அதிர்ச்சி தகவல்கள் தெரிய வந்துள்ளது. தர்ஷனின் ரசிகர் மன்றத்தைச் சேர்ந்த பல முக்கிய நிர்வாகிகளுக்கும் இதில் தொடர்பு இருப்பதும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
கொலை செய்யப்பட்டவர் யார்: கர்நாடக மாநிலம் சித்ரதுர்காவில் உள்ள லட்சுமி வெங்கடேஸ்வரா லேஅவுட்டில் வசித்து வந்தவர் ரேணுகாசாமி.. நடிகர் தர்ஷனின் தீவிர ரசிகரான இவர், அங்குள்ள மருந்துக் கடையில் வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்குச் சமீபத்தில் தான் திருமணமான நிலையில், இவரது மனைவி தற்போது மூன்று மாத கர்ப்பிணியாக உள்ளார்.
நடிகர் தர்ஷனுக்கும் அவரது மனைவி விஜயலட்சுமிக்கும் இடையே விரிசல் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அவர்கள் இருவருக்கும் இடையே ஏற்பட்ட இந்த விரிசலுக்கு பவித்ரா கவுடா தான் காரணம் என்று ரேணுகாசாமி கருதி இருக்கிறார். இதனால் பவித்ரா குறித்து அவர் ஆபாசமான செய்திகளை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார். மேலும், தனது ஆபாச போட்டோகளையும் பவித்ராவுக்கு ரேணுகாசாமி அனுப்பியதாகக் கூறப்படுகிறது.
பவித்ரா: ரேணுகாசாமியின் இந்த செயலால் ஆத்திரமடைந்த பவித்ரா, அவருக்கு ஒரு பாடம் கற்பிக்க வேண்டும் என நினைத்துள்ளார். இதற்காக அவர் சித்ரதுர்காவில் உள்ள தர்ஷன் ரசிகர்கள் மன்ற தலைவர் ராகவேந்திராவை தொடர்பு கொண்டுள்ளார். ரேணுகாசாமியை கண்டுபிடிக்க அவர் உதவியதாகக் கூறப்படுகிறது.
கடந்த ஜூன் 8ஆம் தேதி பவித்ராவுக்கு ஆபாச போட்டோக்களை அனுப்பிய ரேணுகாசாமியை கண்டுபிடித்துள்ளனர். தர்ஷனை சந்திக்கலாம் என்று கூறியே ரேணுகாசாமியை சித்ரதுர்காவிலிருந்து பெங்களூருக்கு அழைத்து வந்துள்ளனர். இதையடுத்து நடிகர் தர்ஷனின் நெருங்கிய நண்பராக அறியப்படும் வினய் என்பவருக்குச் சொந்தமான இடத்திற்கு ரேணுகாசாமி கொண்டு செல்லப்பட்டார்.
சிசிடிவி கேமரா: அன்றைய தினம் இரவு 7 மணியளவில் அந்த இடத்திற்கு நடிகர் தர்ஷன் வருவதும்.. பிறகு விடியற்காலை 3 மணிக்கு அங்கிருந்து வெளியேறுவதும் அருகே இருந்த சிசிடிவி காட்சிகளில் பதிவாகியுள்ளது.. அங்கு தர்ஷன் மற்றும் பவித்ரா ஆகியோர் இணைந்து ரேணுகாசாமியை கொடூரமாகத் தாக்கியதாகக் கூறப்படுகிறது.
பவித்ரா அவரை செருப்பால் அடித்ததாகவும் மறுபுறம் தர்ஷன் பெல்ட்டை வைத்து கொடூரமாகத் தாக்கியதாகவும் கூறப்படுகிறது. உடன் இருந்தவர்கள் இரும்பு ராட், தடி, மரக் கட்டைகளைக் கொண்டு ரேணுகாசாமியை தாக்கியுள்ளனர். இறுதியில் அவரை தூக்கி சுவரில் எரிந்துள்ளனர். தலை பலமாக சுவரில் மோதிய நிலையில், ரேணுகாசாமி அங்கேயே உயிரிழந்தார்.
மறைக்க முயற்சி: ரேணுகாசாமி உயிரிழந்ததைத் தொடர்ந்து அங்கு வீட்டில் வேலை செய்து வந்த பவன் என்பவர் இது குறித்து தர்ஷனுக்கு தகவல் அளித்துள்ளார். மேலும், நிலைமையைச் சமாளிப்பதற்கு ரூ.30 லட்சம் வேண்டும் எனக் கேட்டு வாங்கியுள்ளார். இதையடுத்து போலீசாரை தொடர்பு கொண்ட பவன், பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சினையில் கொலை நடந்ததாகப் பொய்யான புகாரை அளித்துள்ளார்.
முதலில் இந்த கொலைப் பழியை ஏற்று கிரிநகரைச் சேர்ந்த கார்த்திக் சரணடைய முன்வந்துள்ளார். இதற்காக அவர்களுக்கு முதலில் 5 லட்சம் கொடுக்கப்பட்டுள்ளது. சில காலம் கழித்து மேலும் 25 லட்சம் தருவதாக வாக்குறுதியும் அளித்துள்ளனர். இருப்பினும், போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் இந்த கொலையில் தர்ஷனுக்கு தொடர்பு இருக்கும் உண்மை தெரிய வந்துள்ளது.












Click it and Unblock the Notifications