ஜொமாட்டோவை தொடர்ந்து இந்தி சர்ச்சையில் சிக்கிய கேஎஃப்சி!.. வைரலாகும் வீடியோ! #RejectKFC
பெங்களூர்: கர்நாடகா மாநிலத்தில் உள்ள கேஎஃப்சி விற்பனை மையத்தில் பணியாற்றும் ஊழியர் ஒருவர் இந்தியாவின் தேசிய மொழி இந்தி என கூறியதற்கு கண்டனங்கள் குவிந்துள்ளன. ஜொமாட்டோ உணவு டெலிவரி நிறுவனமும் இதே போல் இந்தி மொழிதான் முக்கியம் என்று பேசி பலரது கண்டனங்களுக்கு ஆளானது.
தென்னிந்தியாவில் மாநில மொழிகளுடன் ஆங்கிலமும் பேசப்பட்டு வருகிறது. தென்னிந்தியாவில் பணி நிமித்தமாக வடஇந்தியர்கள் இருப்பதால் அவ்வப்போது இந்தியும் ஒரு சில இடங்களில் பேசப்பட்டு வருகிறது.
மத்திய அரசின் மும்மொழி கொள்கைக்கு தென்னிந்தியாவில் கடும் எதிர்ப்பு நிலவி வருகிறது. இந்தியோ அல்லது வேறு எந்த மொழியாக இருந்தாலும் அதை விருப்பப்பட்டு படிக்கலாமே தவிர, அதை திணிக்கக் கூடாது என்பதுதான் தென்னிந்தியர்களின் வாதமாக உள்ளது.

கிளைகள்
இந்த நிலையில் இந்தியா முழுவதும் கிளைகள் உள்ள பல நிறுவனங்களும் இந்தியை ஆதரித்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதிலும் தங்களது வாடிக்கையாளர்களிடம் இந்தியை திணிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில் உணவு டெலிவரி நிறுவனமான ஜொமாட்டோ கடந்த வாரம் சர்ச்சையில் சிக்கியது.

ஆர்டர் செய்த உணவு
தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் தான் ஆர்டர் செய்த உணவில் ஒரு பொருள் விடுபட்டுள்ளது குறித்து ஜொமாட்டோ கஸ்டமர் கேரில் புகார் அளித்துள்ளார். அப்போது அவர் தமிழில் பேசியுள்ளார், விடுபட்ட உணவு பொருளுக்கான பணத்தை தனக்கு திருப்பி தந்துவிடுமாறு கூறினார். அதற்கு கஸ்டமர் கேரில் இருந்து பேசிய நபர் தனக்கு தமிழ் தெரியாது என கூறினார்.

இந்தியாவின் தேசிய மொழி
அத்துடன் நிற்காமல் ஒரு இந்தியராக இருந்து கொண்டு இந்தியாவின் தேசிய மொழியான இந்தி தெரியாமல் எப்படி இருக்கிறீர்கள் என்றும் அவர் கேட்டுள்ளார். இதையடுத்து அந்த கஸ்டமர் உடனடியாக அந்த சாட்டுகளை ஸ்கிரீன்ஷாட் எடுத்து சமூகவலைதளங்களில் பதிவிட்டுள்ளார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து ஜொமாட்டோ நிறுவனம் மன்னிப்பும் கேட்டது. இதன் பங்குகளும் சரிந்தன.

ஜொமாட்டோ செயலி
பலர் ஜொமாட்டோ செயலியை அன்இன்ஸ்டால் செய்துவிட்டு அதற்கு மாற்றான உணவு டெலிவரி செயலியை நாடி வருகிறார்கள். இந்த பரபரப்புக்கு அடங்குவதற்கு கர்நாடகாவில் இதே போன்று ஒரு மொழி பிரச்சினையை கேஎஃப்சி கையிலெடுத்துள்ளது. பெங்களூருவில் உள்ள கேஎஃப்சி விற்பனை மையத்தில் இந்தி பாடல் ஒலிக்கப்பட்டது.
Recommended Video

கன்னட பாடல்
அப்போது அங்கு உணவு அருந்திக் கொண்டிருந்த ஒரு பெண் கன்னட பாடலை ஒலிபரப்புமாறு கேட்டுள்ளதாக தெரிகிறது. அதனை ஏற்க மறுத்த அந்த உணவகத்தின் ஊழியர் ஒருவர் இந்தியாவின் தேசிய மொழி இந்தி என்று அந்த பெண்ணிடம் பதிலளித்துள்ளார். அப்போது இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இது தொடர்பான வீடியோ வெளியாகியுள்ளது. இதையடுத்து #boycottKFC, #RejectKFC என்ற ஹேஷ்டேக்குகள் டிரென்ட் ஆகி வருகின்றன. இதையடுத்து கேஎஃப்சி சமூகவலைதளங்களில் பரப்பப்பட்டு வருவது பழைய காணொலி என்றும் அனைத்து கலாச்சாரத்தின் மீது உரிய மரியாதை கொண்டுள்ளதாகவும் விளக்கமளித்துள்ளது.