கர்நாடகாவில் ரெடியாகும் ரிசார்ட்கள்? காங். வென்றால் அடுத்து இதுதான்? டிகே சிவக்குமார் பரபர பதில்
பெங்களூர்: நாளை சட்டசபைத் தேர்தல் முடிவுகள் வெளியாகும் நிலையில், ரிசார்ட் அரசியல் குறித்த பேச்சுகள் அதிகரித்துள்ளது. இதற்கிடையே கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் இது குறித்து சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
மத்தியப் பிரதேசம், தெலுங்கானா உள்ளிட்ட 5 மாநிலங்களில் தேர்தல் நடந்து முடிந்துள்ளது. மிசோரம் தவிர மற்ற 4 மாநிலங்களில் நாளைய தினம் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.

இதில் மத்தியப் பிரதேசத்தில் கடும் போட்டி இருக்கும் என்றே சொல்லப்படுகிறது. பெரும்பான்மைக்குத் தேவையான இடங்கள் எந்தெந்த கட்சிக்கும் கிடைக்கவில்லை என்றால் மபி காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கர்நாடகாவில் உள்ள ரிசார்ட்களுக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள் எனத் தகவல் வெளியானது.
டிகே சிவக்குமார்: இதற்கிடையே கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் ஆங்கில செய்தி சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் இது தொடர்பாக சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார். எந்த ஒரு காங்கிரஸ் தலைவரையும் வேட்டையாட முடியாது என்றும் டி.கே.சிவக்குமார் தெரிவித்தார்.
எக்ஸிட் போல் முடிவுகளைப் பொறுத்தவரை மத்தியப் பிரதேசத்தில் கடும் போட்டி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 6 முக்கியமான எக்ஸிட் போல் முடிவுகளில் கடும் போட்டி இருக்கும் என்றே கூறப்பட்டுள்ளது. காங்கிரஸ் பாஜக இடையே சில இடங்கள் மட்டுமே வித்தியாசம் இருக்கும் என கூறப்பட்டுள்ளது. இதனால் எங்கு எம்.எல்.ஏக்களை சொகுசு ரிசார்ட்டுகள் அல்லது ஹோட்டல்களில் வைத்துக் கண்காணிக்கும் "ரிசார்ட் அரசியல்" நடக்கும் என்று தகவல்கள் வெளியானது.
ரிசார்ட் அரசியல்: அதிலும் குறிப்பாக மத்தியப் பிரதேசத்தில் தேர்தல் முடிவுகள் வெளியான உடன், அங்கு வென்றவர்கள் கர்நாடகாவுக்கு அழைத்துச் செல்லப்பட உள்ளதாகவும் இதற்காகக் கர்நாடகாவில் ரிசார்ட்டுகள் தயாராகி வருவதாகவும் கூறப்பட்டது. மத்தியப் பிரதேசத்தில் கடந்த 20 ஆண்டுகளாக பாஜக ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில், இந்த முறை யாருக்குப் பெரும்பான்மை என்பதில் சஸ்பென்ஸ் தான் இருக்கிறது.
இது தொடர்பாக டிகே சிவக்குமார் ஆங்கில செய்தி சேனலுக்கு அளித்த பேட்டியில், "எங்கள் தேசிய மற்றும் மாநில தலைவர்கள் நம்பிக்கையுடன் உள்ளனர். எந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ-வையும் விலைக்கு வாங்கவோ அல்லது வேட்டையாடவோ முடியாது.. ரிசார்ட் அரசியல் எல்லாம் இல்லை. இது ஒரு வதந்தி. எங்கள் எம்எல்ஏக்கள் அனைவரும் விசுவாசமானவர்கள் 'ஆபரேஷன் லோட்டஸ்' இந்த முறை வெற்றிபெறாது.
வாய்ப்பே இல்லை: மேலும், தெலங்கானாவைப் பொறுத்தவரை அம்மாநில முதல்வர் கே.சி.ஆர் ஏற்கனவே பல காங்கிரஸ் தலைவர்களை அணுகியதாக எனக்குத் தகவல் வந்துள்ளது. அவர் என்ன செய்தாலும் இந்த முறை அவர் நினைத்தது நடக்காது. நான் தனிப்பட்ட முறையில் கருத்துக்கணிப்புகளை நம்புவதில்லை. இருப்பினும், நாங்கள் நடத்திய சர்வேயில் தெலுங்கானாவில் ஆட்சி மாற்றம் இருக்கும் என்றே தெரிகிறது.
தெலுங்கானாவில் காங்கிரஸ் அலை வீசுகிறது. மக்கள் அங்கே மாற்றத்தை விரும்புகிறார்கள். மத்தியப் பிரதேசம் தெலுங்கானா என இரு மாநிலங்களிலும் ஆட்சி மாற்றம் நிச்சயம் நடந்தே தீரும். தெலுங்கானாவில் பெரிய வெற்றி கிடைக்கும் என்று நம்புகிறேன். மத்தியப் பிரதேச அரசு ஊழலில் திளைத்துக் கொண்டிருக்கிறது. தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு அங்கேயும் ஆட்சி மாற்றம் நடந்தே தீரும்" என்றார்.
தெலுங்கானா: இந்தியாவிலேயே இளைய மாநிலமாகத் தெலுங்கானா மாநிலம் இருக்கிறது. தெலுங்கானா உருவாக்கப்பட்டது முதலே அங்கே பிஆர்எஸ் கட்சி தான் ஆட்சியில் இருந்துள்ளது. ஆனால், இந்த முறை தெலுங்கானாவில் ஆட்சி மாற்றம் இருக்கும் என்று கூறப்படுகிறது. தற்போது வரை வெளியான சர்வேக்களில் 119 உறுப்பினர்களைக் கொண்ட தெலுங்கானா சட்டசபையில் குறைந்தபட்சம் காங்கிரஸ் 62 இடங்களையும், பிஆர்எஸ் 44 இடங்களையும் பெறும் என்று கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications