டிகே சிவக்குமார் ஆதரவு எம்எல்ஏக்களும் சித்தராமையாவிற்கு சப்போர்ட்? தாமதமாகும் முடிவு.. பரபர தகவல்
பெங்களூர்: முதல்வர் பதவியை கேட்டு இருவரும் அடம் பிடிப்பதால், புதிய முதல்வராக யாரை அறிவிக்கலாம் என்ற விவகாரத்தில் காங்கிரஸ் தலைமை இன்னும் கொஞ்சம் கூடுதல் அவகாசம் எடுத்துக்கொள்ளும் என்று கூறப்படுகிறது. டிகே சிவக்குமார் முகாமில் உள்ள சில எம்.எல்.ஏக்களே சித்தராமையாவிற்கு ஆதரவு தெரிவிப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

கர்நாடக மாநிலத்தில் கடந்த 10 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. மொத்தம் உள்ள 224 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் கடந்த 13 ஆம் தேதி எண்ணப்பட்டன. இதில், காங்கிரஸ் கட்சி 135 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்தது. ஆளும் கட்சியாக இருந்த பாஜக 66 இடங்களில் மட்டுமே வென்று ஆட்சியை இழந்தது.
கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றதையடுத்து அக்கட்சி தொண்டர்கள் உற்சாகம் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். தேர்தல் முடிவு வெளியான அடுத்த சில மணி நேரங்களில் காங்கிரஸ் கட்சியின் தலைமைக்கு புதிய தலைவலி உருவானது. அதாவது, கர்நாடகாவில் காங்கிரஸ் தலைவராக இருக்கும் டிகே சிவக்குமாருக்கும் முன்னாள் முதல்வர் சித்தராமையாவிற்கும் முதல்வர் பதவியை கைப்பற்றுவதில் கடும் போட்டி நிலவியது.
நெருக்கடியான காலங்களில் காங்கிரஸ் கட்சிக்கு பக்க பலமாகவும் மேலிடம் கொடுக்கும் உத்தரவுகளை அச்சு பிசிராமல் நிறைவேற்றி காந்தி குடும்பத்தினரின் நம்பிக்கையை பெற்றுள்ள டிகே சிவக்குமாருக்கு கொடுப்பதா, அல்லது எம்.எல்.ஏக்கள் மத்தியில் அதிக ஆதரவு கொண்ட சித்தராமையாவிற்கு கொடுப்பதா? என காங்கிரஸ் மேலிடம் முடிவை எடுக்க முடியாமல் தடுமாறியது.
இதையடுத்து, கர்நாடக முதல்வராக யாரை அறிவிப்பது என்பது தொடர்பாக முடிவை எடுக்க கட்சி எம்.எல்.ஏக்களின் கருத்தை கேட்டறிய தலைமை முடிவு செய்தது. இதன்படி, பெங்களூருவில் உள்ள நட்சத்திர ஓட்டலில் 2 நாட்களுக்கு முன் எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், புதிதாக வெற்றி பெற்ற 135 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களும் கலந்துகொண்டனர்.
முதல்வரை தேர்ந்தெடுக்கும் அதிகாரம் கட்சி மேலிடத்திற்கு வழங்கப்படுவதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. எம்.எல்.ஏக்களின் கருத்தை பெற்ற மேலிட குழு தலைவர்கள் அதை அறிக்கையாக காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன் கார்கேவிடம் சமர்பித்து இருந்தது. இதையடுத்து சித்தராமையா, டிகே சிவக்குமார் இருவரையும் மேலிடம் டெல்லிக்கு அழைத்தது.
ஆனால், இந்த அழைப்பை ஏற்று சித்தராமையா நேற்று முன் தினமே டெல்லியில் முகாமிட்டார். டிகே சிவக்குமார் நேற்று முன் தினம் டெல்லி செல்ல மறுத்த நிலையில் நேற்று காலை புறப்பட்டு சென்றார். இருவரும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கேவை சந்தித்து உள்ளனர். முதல்வர் பதவியை இரண்டு பேருக்கும் 2.5 ஆண்டுகள் பிரித்து கொடுக்கும் யோசனையை இருவருமே நிராகரித்து விட்டதாகவும் சொல்லப்படுகிறது.
இதனால் முடிவை எடுப்பதில் தொடர்ந்து காங்கிரஸ் கட்சிக்கு நெருக்கடி நிலவுகிறது. இதனிடையே, முதல்வர் யார் என்ற முடிவு இன்று வெளியாக வாய்ப்பு இல்லை என்று காங்கிரஸ் கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன. முதல்வர் ரேசில் முந்தும் சித்தராமையா நிதி அமைச்சக பொறுப்பை விட்டு கொடுக்க மறுப்பதாகவும் கூறப்படுகிறது.
அதுபோக டிகே சிவக்குமார் முகாமில் உள்ள சில எம்.எல்.ஏக்களே சித்தராமையாவிற்கு ஆதரவு தெரிவிப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன. சித்தராமையா தங்களுக்காக தேர்தலின் போது பிரசாரம் செய்ததாக கூறி நடுநிலையான நிலைப்பாட்டை டிகே சிவக்குமார் ஆதரவு எம்.எல்.ஏக்கள் எடுத்ததாக கூறப்படுகிறது.
முதல்வர் பதவியை கேட்டு இருவரும் அடம் பிடிப்பதால், புதிய முதல்வராக யாரை அறிவிக்கலாம் என்ற விவகாரத்தில் காங்கிரஸ் தலைமை இன்னும் கொஞ்சம் கூடுதல் அவகாசம் எடுத்துக்கொள்ளும் என்று கூறப்படுகிறது. அதாவது காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே, கர்நாடகா பயணம் மேற்கொண்டு மாநில கட்சி நிர்வாகிகளையும் எம்.எல்.ஏக்களின் கருத்தையும் கேட்க முடிவு செய்து இருப்பதாகவும் கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன.












Click it and Unblock the Notifications