அடுத்து நந்தி மலையில் ஜக்கி வாசுதேவ்.. ஆதியோகி சிலைக்கு கர்நாடக ஐகோர்ட் அனுமதி! ஆனாலும் ஒரு கண்டிஷன்
பெங்களூர்: தமிழ்நாட்டைப் போலவே கர்நாடகாவிலும் நந்தி மலை அடிவாரத்தில் ஆதியோகி சிலை கட்டப்பட்டு வருகிறது. இருப்பினும், இதற்குத் தடை கோரி சிலர் வழக்கு தொடர்ந்த நிலையில். நிகழ்ச்சியைத் திட்டமிட்டபடி நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் புதிய கட்டுமானங்களை மேற்கொள்ளத் தடை விதிக்கப்பட்டதாகவும் தெரிவித்தது.
தமிழ்நாட்டில் கோவை மாவட்டத்தின் வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் ஈஷா யோகா மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு இருக்கும் ஆதியோகி சிவன் சிலை புகழ்பெற்றது. இதைப் பார்க்கவே மக்கள் இங்கு வருவார்கள்.
இதனிடையே கர்நாடகாவில் பெங்களூருவை அடுத்துள்ள சிக்கபள்ளாபூர் மாவட்டத்தில் இருக்கும் நந்தி மலை அடிவாரத்தில் ஜக்கி வாசுதேவின் ஈஷா யோகா மையம் கட்டப்பட்டு வருகிறது.

கர்நாடகா ஆதியோகி சிலை
தமிழ்நாட்டில் இருப்பதைப் போலவே அங்கேயும் 112 அடி உயரப் பெரிய ஆதியோகி சிவன் சிலை அமைக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவில் அமையும் இந்த ஈஷா யோகா மையத்தையும், ஆதியோகி சிலையையும் வரும் ஜனவரி 15ஆம் தேதி திறக்கப்பட உள்ளது. இதில் இந்தியக் குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் தொடங்கிப் பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்ள உள்ளதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.

பொதுநல வழக்கு
இதற்கிடையே அங்கு ஈஷா யோகா மையத்தைத் திறக்க எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் சமீபத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது.. அதில் ஈஷா யோகா மையத்துக்குக் கர்நாடக அரசு சட்டவிரோதமாக நிலத்தை ஒதுக்கீடு செய்து கொடுத்ததாகவும், இந்த மையத்தால் இதனால் நந்தி மலை அடிவாரத்தில் சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பு ஏற்படும் என்றும் கூறப்பட்டு இருந்தது. அதேபோல கியாத்தப்பா மற்றும் சிக்கபள்ளாபூரில் உள்ள கிராம மக்களும் உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர். இந்த வழக்கில் மத்திய சுற்றுச்சூழல் துறை, வனத்துறை, கர்நாடகா அரசு, ஈஷா யோகா மையம் என 16 பேர் இணைக்கப்பட்டனர்.

இடைக்காலத் தடை
கடந்த சில நாட்களுக்கு முன்பு இது குறித்து நடந்த விசாரணையில் ஈஷா யோகா மையத்தால் நந்தி மலையின் சூழலே அழிந்துவிடும் என்று வாதிட்டனர்.. வடக்கு பென்னாறு மற்றும் தெற்கு பென்னாறு நந்தி மலையில் இருந்துதான் உருவாகும் நிலையில், அதுவும் பெரியளவில் பாதிக்கப்படும் என்றார்கள். இதையடுத்து ஈஷா யோகா மையத்தில் புதிய கட்டுமான பணிகளுக்கும் ஈஷா யோகா மையத்தைத் திறக்கவும் கர்நாடக ஐகோர்ட் இடைக்காலத் தடை விதித்தது. இது தொடர்பாக விளக்கமளிக்க அரசுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இந்தச் சூழலில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.

நீதிமன்றம் உத்தரவு
இந்த வழக்கை விசாரித்த கர்நாடக உயர்நீதிமன்றம், நந்தி மலைக்கு அருகில் 112 அடி உயரமுள்ள ஆதியோகி சிவன் சிலையை வரும் ஜனவரி 15ஆம் தேதி திறக்க அனுமதி வழங்கியது.. அதேநேரம் அங்குக் கட்டுமானத்தை நிறுத்திவைக்கப் பிறப்பித்த உத்தரவு தொடரும் என்று தலைமை நீதிபதி பிபி வரலே மற்றும் நீதிபதி அசோக் எஸ் கினகி அமர்வு உத்தரவிட்டது. தலைமை நீதிபதி பிபி வரலே மற்றும் நீதிபதி அசோக் எஸ் கினகி ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச், ஜனவரி 11-ம் தேதி உத்தரவிடப்பட்டபடி, அடித்தளம் மேற்கொண்டு வரும் கட்டுமானம் தொடர்பாக தற்போதுள்ள நிலையில் இருக்குமாறு உத்தரவிட்டது.

வாதம்
இதில் ஈஷா தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் உதய ஹொல்லா, "இந்த விழாவில் துணைத் தலைவர் ஜகதீப் தங்கர் உட்பட பல முக்கிய பிரமுகர்கள் கலந்துகொள்கிறார்கள்.. அவர்களின் வசதிக்கேற்ப இந்த நாள் குறிக்கப்பட்டது. இந்த வழக்கை அவர்கள் தாக்கல் செய்யும் முன்னரே விழாவை இந்த நேரத்தில் நடத்த அனுமதி அளிக்க வேண்டும்" என்று வாதிட்டார். மறுபுறம், தடை கோரிய அமைப்புகள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன், "இந்த நிகழ்ச்சி நடத்த ஆட்சேபனை இல்லை என்றாலும்.. கட்டுமானங்களையும் காடுகளை அழிப்பதையும் ஏற்றுக் கொள்ள முடியாது" என்று வாதிட்டார்.

அனுமதி
இதையடுத்து ஜனவரி 15ஆம் தேதி விழாவுக்குத் தேவையான ஏற்பாடுகளைத் தவிர, கட்டுமான நடவடிக்கைகள் எதுவும் மேற்கொள்ளப்பட மாட்டாது என்று ஈஷா தரப்பினர் நீதிமன்றத்தில் உறுதியளித்தனர். இந்த அவசரம் மற்றும் உறுதிமொழியைக் கணக்கில் எடுத்துக்கொண்ட நீதிமன்றம், நிகழ்ச்சியை திட்டமிட்டபடி நடத்த அனுமதி அளித்தது. அதேநேரம் கட்டுமானம் அல்லது காட்டுகளை அழிக்கும் எந்தவொரு செயலையும் செய்யக் கூடாது என்றும் புதிய கட்டுமானங்களை மேற்கொள்ளப் பிறப்பித்த தடை உத்தரவு தொடரும் என்று உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications