ஒரே நாள்.. 6 லட்சம் கோடி இழப்பு.. குமுறி குமுறி அழும் பங்குச்சந்தை முதலீட்டாளர்கள்.. என்ன நடந்தது?!
பங்குச்சந்தைக்கு போர் தான் வில்லன் என்று கூறப்பட்ட நிலையில், போர் முடிந்து அமைதி பேச்சுவார்த்தைக்கு சென்றது. ஆனால் அடுத்த பிரச்சனையாக ஏஐ வெடித்துள்ளது, இதோடு உலகளாவிய பொருளாதாரச் சூழல் மற்றும் டெக் பங்குகளின் கடுமையான வீழ்ச்சி காரணமாக, இந்தியப் பங்குச்சந்தை இன்று செவ்வாய்க்கிழமை வர்த்தகத்தில் வரலாறு காணாத சரிவைச் சந்தித்துள்ளது.
குறிப்பாக தென் கொரியப் பங்குச்சந்தையில் ஏற்பட்ட பெரும் வீழ்ச்சியும், உலக அளவில் ஐடி மற்றும் டெக் துறையில் பெரும் விற்பனை பதிவானது. இதனால் ஒரே நாளில் முதலீட்டாளர்களுக்குப் பல லட்சம் கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

கரடியின் பிடியில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி
இன்றைய வர்த்தக நேரத்தின் முடிவில், மும்பை பங்குச்சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 893 புள்ளிகள் சரிந்து 76,200 என்ற புள்ளிகளில் நிலைபெற்றது. இதேபோல், தேசிய பங்குச்சந்தையின் நிஃப்டி 50 குறியீடு 279 புள்ளிகளை இழந்து, முக்கிய ஆதரவு நிலையான 23,850 புள்ளிகளுக்கும் கீழே சரிந்து வர்த்தகத்தை நிறைவு செய்தது.
மிட்கேப் மற்றும் ஸ்மால்கேப் நிறுவனங்களின் பங்குகளும் இந்த சரிவிலிருந்து தப்பவில்லை என்பது தான் உண்மை. நிஃப்டி ஸ்மால்கேப் 100 குறியீடு 0.6 சதவீதமும், நிஃப்டி மிட்கேப் 100 குறியீடு 0.75 சதவீதமும் வீழ்ச்சியடைந்தன.
முதலீட்டாளர்களின் பணம் அவுட்!
பங்குச்சந்தையில் ஏற்பட்ட இந்த திடீர் வீழ்ச்சியால், மும்பை பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் மொத்த சந்தை மதிப்பு சுமார் 474 லட்சம் கோடி ரூபாயாகக் குறைந்தது. இதன் விளைவாக, ஒரே நாளில் முதலீட்டாளர்களின் சொத்து மதிப்பில் கிட்டத்தட்ட 5.77 லட்சம் கோடி ரூபாய் குறைந்தது. குறிப்பாக ஐடி மற்றும் உள்கட்டமைப்பு சார்ந்த பங்குகளே இந்த சரிவுக்கு முக்கியக் காரணமாக அமைந்தன.
ஐடி மற்றும் பெருநிறுவனப் பங்குகள் கடும் சரிவு
இன்றைய மதிய வர்த்தகத்தில், நாட்டின் முன்னணி நிறுவனங்களின் பங்குகள் முதலீட்டாளர்களால் பெருமளவில் விற்கப்பட்டன. குறிப்பாக இன்ஃபோசிஸ், டிசிஎஸ், டாடா ஸ்டீல், பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (BEL) மற்றும் அதானி போர்ட்ஸ் போன்ற ஜாம்பவான் நிறுவனங்களின் பங்குகள் 3.5 சதவீதம் வரை சரிவைச் சந்தித்தன.
பார்மா (மருந்துத் துறை) மற்றும் ரியல் எஸ்டேட் ஆகிய இரண்டு துறைகளைத் தவிர, நிஃப்டியின் மற்ற அனைத்து துறை சார்ந்த குறியீடுகளும் நஷ்டத்திலேயே வர்த்தகமாகின.
தென் கொரியாவின் 'சர்க்யூட் பிரேக்கர்'
ஆசிய சந்தைகளில் நிலவிய மோசமான சூழலே இந்த வீழ்ச்சிக்கு முதன்மையான காரணமாக அமைந்தது. குறிப்பாக, தென் கொரியாவின் முதன்மை பங்குச்சந்தையான 'கோஸ்பி' (KOSPI) ஒரே நாளில் 9 சதவீதத்திற்கும் மேலாகச் சரிந்து வரலாறு காணாத வீழ்ச்சியைப் பதிவு செய்தது.
இதனால் சந்தையில் நிலவிய பீதியைக் கட்டுப்படுத்த அங்கு 20 நிமிடங்களுக்கு வர்த்தகம் தற்காலிகமாக நிறுத்தப்படும் 'சர்க்யூட் பிரேக்கர்' நடைமுறை அமல்படுத்தப்பட்டது. இந்தத் உலகளாவிய தொழில்நுட்பப் பங்குகளின் சரிவு இந்தியச் சந்தையிலும் எதிரொலித்தது.
அந்நிய முதலீடுகள் வெளியேற்ற - ரூபாய் மதிப்பு சரிவு
வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் (FIIs) திங்கட்கிழமை மட்டும் சுமார் 635.91 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை விற்று முதலீடுகளைத் திரும்பப் பெற்றது சந்தையின் போக்கைப் பாதித்தது. இதன் தொடர்ச்சியாக, சர்வதேச சந்தையில் அமெரிக்க டாலரின் மதிப்பு 13 மாதங்களில் இல்லாத அளவிற்கு உயர்ந்ததால், இந்திய ரூபாயின் மதிப்பு பலவீனமடைந்தது.
வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணி சந்தையில், அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் 6 பைசா சரிந்து 94.69 ஆக வர்த்தகத்தை நிறைவு செய்தது. காலையில் 94.73 என்ற அளவில் தொடங்கிய ரூபாய், பின்னர் சற்று மீண்ட போதிலும் முந்தைய வர்த்தகத்தை விடக் குறைவாகவே முடிவடைந்தது.












Click it and Unblock the Notifications