பெங்களூர் மாநகரம் விரைவில் உலகின் இரண்டாவது தண்ணீர் இல்லாத நகரமாக மாறுமா? நெட்டிசன்கள் அச்சம்
பெங்களூர்: கடும் தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில், பெங்களூர் மாநகரம் விரைவில் உலகின் இரண்டாவது தண்ணீர் இல்லாத நகரமாக மாறுமோ என்று அச்சம் தெரிவிக்கிறார்கள். உலகம் முதல் தண்ணீர் இல்லாத நகரம் ( water zero City) ஆக ஆனது தென்னாப்பிரிக்காவின் கேப் டவுன் தான். அது கூட 400 ஆண்டுகளுக்கு ஒரு முறை தாக்கும் கடும் வறட்சியால் நேர்ந்தது.
பெங்களுர் நகரம் வரலாறு காணாத தண்ணீர் பஞ்சத்தில் சிக்கி தவிக்கிறது. பெங்களூர் நகரம் இந்தியாவின் மிகப்பெரிய ஐந்து நகரங்களில் ஒன்று.. இந்தியாவின் நிர்வாக தலைநகரம் டெல்லி என்றால், வர்த்த தலைநகரம் மும்பை.. ஆனால் ஐடி தலைநகரம் என்றால் சந்தேகமே இல்லை.. அது பெங்களூர் தான்.

1990களில் நடுத்தர நகரங்களில் ஒன்றாக இருந்த பெங்களூர்... ஐடி துறையில் ஏற்பட்ட அசுர வளர்ச்சியால் இந்தியாவின் ஐடி தலைநகரமாக உருவெடுத்தது. இந்தியாவில் அதிகப்படியான ஐடி நிறுவனங்கள் உள்ள நகரம் என்றால் அது பெங்களூர் தான். பெங்களூர் நகரம் வெறும் ஐடி துறை மட்டுமே உள்ள நகரமா என்றால்.. நிச்சயம் இல்லை.. பெங்களூர் நகரம் எல்லா தொழில்களும் நன்கு வளர்ந்த நகரமாகும்..
பெங்களூர் நகரம் எப்போதுமே குளுகுளுவென இருக்கும். சுற்றிலும் மரங்கள்..பசுமை போர்த்திய உடை அணிந்த மிகவும் அற்புதமான இடம். எனவே தான் வெளிநாட்டு ஐடி நிறுவனங்கள் ஓடி வந்து முதல் வரிசையில் நின்று ஐடி கம்பெனிகளை அங்கு ஆரம்பித்தன. அதன் விளைவாக பெங்களூர் நகரின் மக்கள் தொகை இப்போது எவ்வளவு தெரியுமா? 1 கோடியே 40 லட்சம்.. இவ்வளவு பெரிய மக்கள் தொகை கொண்ட பெங்களூர் நகருக்கு காவிரி ஆற்றில் இருந்து வரும் தண்ணீர் தான் ஒரே நீர் ஆதாரம்.. சென்னை போல் நிறைய தண்ணீர் ஆதாரம் உள்ள நகரம் இல்லை.. சென்னைக்கு தண்ணீர் சுத்தமாக இல்லாவிட்டாலும் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் உள்ளதால் ஓரளவு தப்பித்துவிடும். இந்நிலையில் பெங்களுர் நகருக்கு ஆண்டுக்கு சுமார் 30 டி.எம்.சி. தண்ணீர் தேவைப்படுகிறது. அதாவது 3000 கோடி கனஅடி நீர் தேவைப்படுகிறது.
இந்த நிலையில் பெங்களூர் நகரில் கடந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை சரியாக பெய்யவில்லை. இதனால் பெங்களூருவில் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்து, 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆழ்குழாய் கிணறுகள் தண்ணீர் இல்லாமல் வற்றிவிட்டன. மேலும் காவிர் நீர் வினியோகமும் கடுமையாக குறைந்துள்ளது. இதனால் பெங்களூர் முழுக்கவே கடுமையான குடிநீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. இதனால் பெங்களூர் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் பெங்களுர் நகரில் ஏற்பட்டுள்ள தண்ணீர் தட்டுப்பாடு குறித்து பலரும் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில் திமுக நிர்வாகி எஸ்கேபி கருணா ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.. அவர் வெளிட்ட பதிவில், கடும் தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வரும் பெங்களூர் மாநகரம் விரைவில் உலகின் இரண்டாவது தண்ணீர் இல்லாத நகரமாக மாறக்கூடும் என்கிறார்கள். உலகம் முதல் தண்ணீர் இல்லாத நகரம் ( water zero City) ஆக ஆனது தென்னாப்பிரிக்காவின் கேப் டவுன் தான். அது கூட 400 ஆண்டுகளுக்கு ஒரு முறை தாக்கும் கடும் வறட்சியால் நேர்ந்தது.
பெங்களூரில் கடந்த டிசம்பர் , ஜனவரியில் கூட சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. எங்கே போனது அத்தனை தண்ணீரும் என குழு அமைத்து தேடிக் கொண்டிருக்கின்றனர். கடல் மட்டத்தில் இருந்து ஏறத்தாழ 1 கிமீ உயரத்தில் இருக்கும் தக்காணபீட பூமி நகரம் பெங்களூர். எனவே நீர்மட்டத்தை பூமி மட்டத்திலேயே சேகரித்து வைத்தால்தான் உண்டு. அதற்கென இருந்த ஏரிகளை எல்லாம் தொலைத்து விட்டனர்.

நான் காலேஜ் படித்த காலத்தில் பெரிய பெரிய மரங்களுக்கு இடையே நகரையே ஒளித்து வைத்தாற் போல இருக்கும்! அதிகாலையில் மெஜஸ்டிக்லே இறங்கி மல்லேஸ்வரம் வரை நடந்து போனால், சாலையெங்கும் பூக்கள் மீதுதான் நடக்க வேண்டியிருக்கும்! படிக்க வேணும்னா ரொமாண்டிக்கா இருக்கும். நிஜத்தில் சிரிப்பா வரும். கார்டன் சிட்டி மொத்தமாக தனது அடையாளங்களைத் தொலைத்து விட்டது.
இப்போது கூட மேகதாது அணை, கூடுதல் காவிரி நீர் என இயற்கைக்கு எதிரான திட்டங்களாகவே அரசு சிந்திக்கிறது. காவிரி உட்பட பல நதிகளின் ஊற்றுக்கண் ஆக உள்ள மேற்குத் தொடர்ச்சி மலைகளையும் வறண்டு போக வைக்கும் முட்டாள்தனம் அது. கடல்மட்டத்தில் இருக்கும் சென்னையை விட பேராபத்தில் உள்ளது பெங்களூர்" இவ்வாறு திமுக நிர்வாகி எஸ்கேபி கருணா கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications