எடியூரப்பாவிற்கு எந்த எதிர்ப்பும் இல்லை.. 65 எம்எல்ஏக்களின் ஆதரவு கடிதம் உள்ளது.. பாஜக எம்எல்ஏ பளீர்
பெங்களூர்: கர்நாடகாவில் முதல்வர் எடியூரப்பாவிற்கு எதிராக பாஜக நிர்வாகிகள் யாரும் செயல்படவில்லை, அவருக்கு 65 எம்எல்ஏக்களுக்கும் அதிகமான ஆதரவு உள்ளது என்று ஹொன்னஹள்ளி பாஜக எம்எல்ஏ ரேணுகாச்சார்யா தெரிவித்துள்ளார்.
கர்நாடகாவில் எடியூரப்பா தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. ஆனால் அங்கு கட்சிக்கு உள்ளேயே கடுமையான கோஷ்டி மோதல் நிலவி வருகிறது. முக்கியமாக கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை எடியூரப்பா சரியாக எடுக்கவில்லை என்று பாஜக எம்எல்ஏக்கள், அமைச்சர்கள் சிலர் தொடர்ந்து எடியூரப்பா மீது புகார் வைத்து வருகிறார்கள்.
அவரை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று டெல்லி மேலிடத்திற்கு தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறார்கள். கர்நாடகா சுற்றுலாத் துறை அமைச்சர் சி.பி.யோகேஷ்வரா மற்றும் ஹூப்ளி மேற்கு எம்.எல்.ஏ., அரவிந்த் நேராக டெல்லிக்கே சென்று இது பற்றி பாஜக தலைமையிடம் புகார் வைத்தனர்.

புகார்
இது போக கட்சியில் இருக்கும் சில எம்எல்ஏக்கள், எம்பிக்கள் கூட எடியூரப்பாவிற்கு எதிராக பேசி வருகிறார்கள். இது பற்றி வெளிப்படையாக பேசிய எடியூரப்பா, கட்சி என்றால் எதிர்ப்பு இருக்கத்தான் செய்யும். டெல்லி மேலிடம் என்னை நம்பி எனக்கு முதல்வர் பதவியை தந்து உள்ளது. அவர்கள் என்னை பதவி விலக சொன்னால் நான் விலக தயார். அவர்கள் எடுக்கும் முடிவை நான் பின்பற்ற தயார் என்று எடியூரப்பா குறிப்பிட்டு இருந்தார்.

என்ன கருத்து
இந்த நிலையில் எடியூரப்பாவிற்கு எதிராக பாஜக நிர்வாகிகள் யாரும் செயல்படவில்லை, அவருக்கு 65 எம்எல்ஏக்களுக்கும் அதிகமான ஆதரவு உள்ளது என்று ஹொன்னஹள்ளி பாஜக எம்எல்ஏ ரேணுகாச்சார்யா தெரிவித்துள்ளார். இவர்தான் எடியூரப்பாவின் அரசியல் செயலாளர். பாஜகவின் கர்நாடக பொறுப்பாளர் அருண் சிங்கும் எடியூரப்பாவிற்கு ஆதரவாக இருப்பதாக ரேணுகாச்சார்யா கூறியுள்ளார்.

யார்
பார்லிமென்ட் விவகாரத் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி, மாநில பாஜ தலைவர் நலின் குமார் போன்றவர்கள் கூட எடியூரப்பாவிற்கு ஆதரவாகவே இருக்கிறார்கள். எடியூரப்பாவை நீக்க வேண்டும் என்று மேலிடத்தில் எந்த கோரிக்கையும் முறையாக வைக்கப்படவில்லை. கொரோனாவை எதிர்கொள்வது மட்டுமே எங்களின் ஒரே இலக்கு இப்போது.

இலக்கு
அதை மட்டுமே தற்போது நாங்கள் மேற்கொண்டு வருகிறோம். தலைமையை மாற்றும் எண்ணமே இல்லை. அதற்கான விவாதங்களும் நடக்கவில்லை. 65 பாஜக எம்எல்ஏக்கள் எழுத்துபூர்வமாக எடியூரப்பாவிற்கு ஆதரவாக கடிதம் எழுதி உள்ளனர். மே 2023 வரை எடியூரப்பாதான் முதல்வராக இருப்பார் என்று ரேணுகாச்சார்யா குறிப்பிட்டுள்ளார். மாநில பாஜ தலைவர் நலின் குமாரும் எடியூரப்பாவிற்கு ஆதரவாக இதே கருத்தை தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications