பிக்சட் டெபாசிட்டை விட.. அதிக லாபம் அள்ளி தரும் மூன்று அட்டகாசமான முதலீடுகள்! எந்த ரிஸ்கும் இல்லை
சென்னை: சேமிப்பின் முக்கியத்துவத்தை உணர்ந்து நமது நாட்டில் பொதுமக்கள் இப்போது தான் பணத்தைச் சேமிக்கத் தொடங்கியுள்ளனர். அப்படிச் சேமிப்பை ஆரம்பிக்கும் பெரும்பாலானோரின் முதல் சாய்ஸாக வைப்பு நிதி தான் இருக்கிறது. ஆனால், உண்மையில் வைப்பு நிதியைக் காட்டிலும் ஆபத்து இல்லாமல் நல்ல வருமானத்தைத் தரும் வேறு சில முதலீட்டு ஆப்ஷன்களும் இருக்கவே செய்கிறது. அவை குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
நமது நாட்டில் சேமிப்பின் முக்கியத்துவத்தை உணர்ந்து பொதுமக்கள் பலரும் இப்போது முதலீடு செய்யத் தொடங்கிவிட்டனர். இந்த காலத்தில் விலைவாசி மற்றும் பணவீக்கத்தைச் சமாளிக்க வேண்டும் என்றால் சேமிப்பும் முதலீடும் கட்டாயமாகிறது. இதுபோல சேமிப்பைத் தொடங்கும் பெரும்பாலான மக்களுக்கு வங்கிகளில் உள்ள FDs எனப்படும் வைப்புத்தொகைகளே முதல் சாய்ஸாக இருக்கிறது.

சேமிப்பு
ஆனால், தற்போதுள்ள பெரும்பாலான வங்கிகளில் வைப்புத் தொகைகள் மூலம் நமக்குக் கிடைக்கும் வட்டி என்பது பணவீக்கத்தை விடக் குறைவாகவே இருக்கிறது. இதனால் நமக்குப் பெரியளவில் லாபம் இருப்பதில்லை. சமீபத்தில் கூட ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதக் குறைப்பை அறிவித்துள்ளதால், வைப்புத் தொகை வட்டி இன்னுமே கூட குறையலாம். இது முதலீட்டாளர்களுக்கு நஷ்டத்தையே தரும். இதனால் ரிஸ்க் குறைவாக உள்ள சிறந்த மாற்று வழிகளை மக்கள் தேடுகின்றனர். அப்படி ரிஸ்க் குறைவாக உள்ள 3 வேறு ஆப்ஷன்கள் குறித்து நாம் பார்க்கலாம்.
தபால் நிலைய சேமிப்பு திட்டங்கள்
முதலில் போஸ்ட் ஆபீஸ்களில் வரும் சேமிப்பு திட்டங்களை நாம் பயன்படுத்தலாம்.. முதலீட்டின் பாதுகாப்பை எதிர்பார்க்கும் ஒருவர், தபால் நிலையத்தில் உள்ள தேசிய சேமிப்புச் சான்றிதழ் (NSC) மற்றும் பொது வருங்கால வைப்பு நிதி (PPF) அறிய திட்டங்களைத் தேர்வு செய்யலாம். இவை மத்திய அரசின் திட்டங்கள் என்பதால் நம்பி பணத்தைப் போடலாம். மேலும், பிரிவு 80Cஇன் கீழ் இதற்கு நமக்கு வரிச் சலுகையும் கிடைக்கும். நீண்ட கால முதலீடு செய்யும் போது காம்பவுண்டிங் நன்மையும் நமக்குக் கிடைக்கும்.
கடன் பத்திரங்கள்
அடுத்தது கடன் பத்திரங்கள். நிலையான வைப்பு நிதிகளை விட அதிக வட்டி எதிர்பார்ப்போர் அரசு மற்றும் ரிசர்வ் வங்கியின் கடன் பத்திரங்களைத் தேர்வுசெய்யலாம். கடன் பத்திரமா அப்படினா என்ன? அது எப்படி வேலை செய்யும்? என்ற சந்தேகம் வரலாம்.. எளிமையாகச் சொல்ல வேண்டும் என்றால் நீங்கள் பொதுவாக ஒருவருக்குக் கடன் தருகிறீர்கள் என வைத்துக் கொள்வோம். அவர் மாதாமாதம் வட்டி கொடுப்பார். குறிப்பிட்ட மாதத்திற்குப் பிறகு அசலையும் திரும்பத் தந்துவிடுவார் அல்லவா.. அதேபோல அரசு அல்லது பெரு நிறுவனங்களுக்கு நாம் கடன் கொடுப்பதே கடன் பத்திரங்கள் ஆகும்.
தனியார் கார்ப்பரேட் நிறுவனங்களும் கூட கடன் பத்திரங்களை வெளியிடுகின்றன என்ற போதிலும் ரிஸ்க் எடுக்க விரும்பாதவர்கள் அரசு மற்றும் ரிசர்வ் வங்கியின் கடன் பத்திரங்களை வாங்கலாம். இதில் வைப்புத் தொகையைக் காட்டிலும் நமக்கு நல்ல வட்டி கிடைக்கும். குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு கடன் பத்திரங்களைக் கொடுத்தால் நாம் போட்ட பணமும் வந்துவிடும். இதில் சில குறிப்பிட்ட கடன் பத்திரங்களுக்கு சில வரிச் சலுகைகளும் கிடைக்கும் என்பது கூடுதல் போனஸ்.
தங்கமான தங்கம்
அதேபோல தங்கமும் இதில் முக்கியமானது. தங்கம் எப்போதும் நம்பகமான முதலீடாக இருந்து வருகிறது. பணவீக்கத்திற்கு எதிராக உங்கள் முதலீட்டைத் தங்கம் மிகச் சிறப்பாகப் பாதுகாக்கும். கடந்த சில ஆண்டுகளில் தங்கம் விலை எந்தளவுக்கு அதிகரித்துள்ளது என்பதைத் தனியாகச் சொல்லத் தேவையில்லை. தங்கத்தில் மற்றொரு சிறப்பு இருக்கிறது. அதாவது நீங்கள் விரும்பிய நேரத்தில் தங்கத்தை உலகின் எந்த பகுதியில் வேண்டுமானாலும் வாங்கவும் விற்கவும் முடியும். கஷ்ட காலத்தில் விற்க மனசு வரவில்லை என்றால் தங்கத்தை அடகு வைத்தும் பணத்தைத் திரட்டலாம்.
இப்போது தங்கத்தை நாம் பல வழிகளில் வாங்கலாம்.. கடைகளுக்கு நேரில் சென்று காயின் அல்லது நகைகளாக வாங்கலாம்.. ETFகள் மூலம் கூட தங்கத்தை வாங்கலாம்.. இதில் எந்த முறை உங்களுக்குச் சவுகரியமாக இருக்கிறதோ.. அந்த முறையில் தங்கத்தை வாங்கி வைத்தால்.. அதுவும் நீண்ட கால நோக்கில் நல்ல பலனையே தரும்.
இது ஒரு செய்தி மட்டுமே. இதை நிச்சயமாக முதலீட்டு ஆலோசனையாக எடுத்துக் கொள்ளக் கூடாது. முதலீடு சார்ந்த முடிவுகளை எடுக்கும் முன்பு உங்கள் பொருளாதார ஆலோசகரிடம் உரிய ஆலோசனை கேட்ட பிறகு, உங்களுக்கு ஏற்ற முடிவை எடுக்க வேண்டும்.












Click it and Unblock the Notifications