ஓவர் லோடு, அலட்சியம்: ரயில்வேக்கு ரூ. 314 கோடி நஷ்டம்.. குறிப்பாக தெற்கு ரயில்வேவுக்கு!
டெல்லி: கடந்த 2007ம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட 'பார்சல் கார்கோ எக்ஸ்பிரஸ்' திட்டத்தை சரிவர செயல்படுத்தாததால், ரயில்வே துறைக்கு, ரூ. 314 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக இந்திய தலைமை கணக்கு தணிக்கை அதிகாரி (சிஏஜி) குற்றம் சாட்டியுள்ளார். குறிப்பாக தெற்கு ரயில்வே இந்த விஷயத்தில் பெரும் நஷ்டத்துக்கு உள்ளாகியுள்ளது.
மேலும், நாடு முழுவதும், 700 ரயில் நிலையங்களில், சரக்கு எடை போடும் இயந்திரங்கள் இல்லாததால், சரக்கு போக்குவரத்தில் அதிக நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் அவரது அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பார்சல் கார்கோ எக்ஸ்பிரஸ் திட்டத்தின் படி, தனியார் துறையுடன் இணைந்து பார்சல்களை, வீடுகள் மற்றும் நிறுவனங்களின் வாசலிலேயே ஒப்படைக்க திட்டமிடப்பட்டது. ஆனால், அதை செயல்படுத்த, ரயில்வே நிறுவனங்களுக்குள் போதிய ஒருங்கிணைப்பு இல்லை என்று அந்த அறிக்கை குற்றம் சாட்டியுள்ளது.
இதுதொடர்பாக மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட அந்த அறிக்கையில்,
சரக்கு ரயில்களில் சரக்குகளைக் கொண்டு செல்லும்போது, போதிய ஏற்பாடுகளைச் செய்வதற்கு, குறிப்பாக தெற்கு ரயில்வே நிர்வாகம் தவறி விட்டது. அதிலும் குறிப்பாக 4 வழித்தடங்களில் இத்திட்டம் முறையாக செயல்படுத்தப்படாததால், ரூ. 315 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
சரக்குகளைக் கையாள்வதில் உள்ள சிரமங்களுக்குத் தீர்வு காண்பதற்காக, ரயில்வே வாரியத்தை தெற்கு ரயில்வே நிர்வாகம் தொடர்பு கொள்ளவில்லை. மற்ற மண்டல ரயில்வே நிர்வாகத்தின் ஆலோசனைகளைப் பெறுவதற்கும் தெற்கு ரயில்வே தவறிவிட்டது.
நிலக்கரி, இரும்புத் தாது ஆகியவற்றை சரக்கு ரயில்களில் கொண்டு செல்லும்போது, அவை நடுவழியில் குறைகிறதா? அல்லது ரயில்களில் அதிக பளு ஏற்றப்படுகிறதா? என்பதை அறிவதற்கு அவற்றின் எடையை அளவிட வேண்டியது அவசியம். ஆனால், மொத்தமுள்ள 1,176 முனையங்களில், 759 முனையங்களில் எடை மேடை வசதி இல்லை.
இந்த முனையங்களில் நிலக்கரி, இரும்புத் தாது ஆகியவற்றின் எடையை அளப்பதற்கு பெரும்பாலும் தனியாருக்குச் சொந்தமான எடை மேடைகளையே சார்ந்திருக்க வேண்டியுள்ளது. தனியார் நிறுவனங்களின் எடை மேடைகள் போதிய பராமரிப்பின்றி பல குறைபாடுகளுடன் காணப்படுகின்றன என்று சிஏஜி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications