சரக்குகளை எடுத்துச் செல்ல பிப்ரவரி முதல் இ-வே பில் கட்டாயம் - ஜிஎஸ்டி ஆணையம்.
புதிய சரக்கு பரிமாற்ற மின்னணு ரசீது (E-Way Bill) முறையானது அனைத்து தொழில் துறையினரும் வர்த்தகர்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையில் அமைக்கப்பட்டுள்ளது என்று ஜிஎஸ்டி ஆணைய தரப்பில் கூறப்பட்டுள்ளது .
டெல்லி: 2018 பிப்ரவரி முதல் மாநிலங்களுக்கிடையே சரக்குகளை எடுத்துச்செல்வதற்கு ஈ-வே பில் எனப்படும் மின்னணு ரசீது கட்டாயம் என ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
ஜிஎஸ்டி என்னும் சரக்கு மற்றும் சேவை வரிவிதிப்பு முறை அமல்படுத்தப்படுவதற்கு முன்னர் இருந்த வாட் வரி விதிப்பு முறையில் வெவ்வேறு மாநிலங்களில் உள்ள நிறுவனங்கள் தங்களின் வெவ்வேறு மாநிலங்களில் உள்ள கிளைகளுக்கு சரக்குகளை அனுப்புவதற்கு ஜே.ஜே என்னும் படிவத்தையும், கூடவே சரக்குகளுக்கான பட்டியலையும் (Stock Transfer Note) அனுப்பும் நடைமுறையை கையாண்டுவந்தனர்.
சில மாநிலங்கள் தங்களின் உள்ளூர் மற்றும் வெளி மாவட்ட கிளைகளுக்கு சரக்குகளை கொண்டு செல்வதற்கு இ-சுகம் (E-Sugam) என்னும் படிவத்தையும் பயன்படுத்தி வந்தனர். இதனால், சரக்கு பரிமாற்ற முறையில் எந்தவிதமான குழப்பமும் இல்லாமல் இருந்து வந்தது.

சரக்கு மற்றும் சேவை வரி
ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறை அமல்படுத்தப்பட்ட பின்பு வெளிமாநில கிளைகளுக்கு சரக்குகளை கொண்டுசெல்வதில் நடைமுறை சிக்கல்கள் எழுந்தன. மின்னணு ரசீது என்னும் ஈ-வே பில் (E-Way Bill) அவசியம் என்று ஜிஎஸ்டி ஆணையம் வலியுறுத்தி வந்தாலும், ஜிஎஸ்டிஎன் இணையதளத்தில் நிலவிய தொழில்நுட்ப பிரச்சினைகளால், வரும் மார்ச் மாதம் வரையிலும் வெவ்வேறு மாநிலங்களுக்கு இடையில் சரக்குகளை கொண்டு செல்வதற்கு எந்தவிதமான கெடுபிடியும் காட்டப்படாது என்று உறுதி அளித்தனர்.

ஜிஎஸ்டி ஆணையம்
சரக்குகளை வெவ்வேறு மாநிலங்களுக்கு இடையில் கொண்டு செல்வதில் தொழில் நிறுவனங்களுக்கு இடையில் குழப்பங்கள் நிலவியதாலும், ஒவ்வொரு மாதமும் நடக்கும் ஜிஎஸ்டி கூட்டத்தில் ஜிஎஸ்டி வரி முறையில் மாற்றங்கள் செய்து வருவதாலும், மத்திய (CGST) மற்றும் மாநிலங்களுக்கு (SGST) வரவேண்டிய வரி வருவாய் குறையத் தொடங்கியது.

ரூ. 95131 கோடி வருமானம்
ஜிஎஸ்டி வரி வருவாயை பொருத்தவரையில் கடந்த அக்டோபர் மாதத்திய வருவாயுடன் ஒப்பிடுகையில் கடந்த நவம்பர் மாதத்திய மத்திய மற்றும் மாநிலங்களுக்கான வரி வருவாய் சுமார் 11,788 கோடி ரூபாய் குறைந்துவிட்டது. நவம்பர் மாதத்தின் ஒட்டுமொத்த ஜிஎஸ்டி வரி வருவாய் சுமார் 83,343 கோடி ரூபாய் ஆகும். ஆனால், அதே சமயம் கடந்த அக்டோபர் மாதத்திய ஒட்டு மொத்த ஜிஎஸ்டி வர வருவாய் சுமார் 95,131 கோடி ரூபாய் ஆகும்,

இ வே பில் முறை
இதனை உணர்ந்தே ஜிஎஸ்டி ஆணையமும் வரும் பிப்ரவரி 1ம் தேதி முதல் மாநிலங்களுக்கு இடையில் நடக்கும் சரக்கு பரிமாற்றத்திற்கு மின்னணு ரசீது (E-Way Bill) கட்டாயம் என்று அறிவித்துள்ளது. கடந்த சனிக்கிழமை அன்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தலைமையில் நடந்த 24வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

ஒரே மாதிரியான பில்
இதுபற்றி கருத்து தெரிவித்த இந்திய போக்குவரத்து ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவரான எஸ்பி. சிங், சரக்கு பரிமாற்ற முறையில் தற்போது ஒரு குழப்பமான நிலைமை இருந்து வருகின்றது. ஜிஎஸ்டி வரி விதிப்பு முறையில், மாநிலங்களுக்கு இடையில் சரக்குகளை கொண்டு செல்வதில் நாடு முழுவதும் ஒரே மாதிரியான சீரான முறை பின்பற்றப்படாததால்தான் இந்த சூழ்நிலை நிலவுகிறது. அனைத்து தரப்பினரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையில் ஒரே மாதிரியான சரக்கு பரிமாற்றமுறை அமல்படுத்தப்படுத்தப்பட்டால் மட்டுமே நிலைமை சீரடையும், என்றார்.

ஜிஎஸ்டிஎன் இணையதளம்
ஜிஎஸ்டி ஆணைய தரப்பில் இதுபற்றி கூறும்போது, இந்த புதிய சரக்கு பரிமாற்ற மின்னணு ரசீது (E-Way Bill) முறையானது அனைத்து தொழில் துறையினரும் வர்த்தகர்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இதுபற்றிய அனைத்து தகவல்களும் ஜிஎஸ்டிஎன் இணையதளத்தில் வரும் ஜனவரி முதல் கிடைக்கும். இதனால் வெவ்வேறு மாநிலங்களுக்கு இடையில் சரக்குகளை கொண்டு செல்வதில் இதுவரையில் இருந்து வந்த குழப்பங்களும் நடைமுறை சிக்கல்களும் இனிமேல் ஏற்படாது என்ற நம்பிக்கை தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications