மக்களின் தங்கத்தை வாங்க போகும் அரசு? "தங்கம் வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு!" ஆனந்த் சீனிவாசன் பரபர
சென்னை: நமது நாட்டில் தங்கம் தான் பொதுமக்களின் பிரதானச் சேமிப்பாக இருந்து வந்தது. ஆனால், கடந்த சில நாட்களில் தங்கம் தொடர்பாக மத்திய அரசு அடுத்தடுத்து பல அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. இதற்கு என்ன காரணம் என்பது தொடர்பாகப் பிரபலப் பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசன் பல முக்கிய தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் பிரதமர் மோடி தங்கம் வாங்குவதை அடுத்த ஓராண்டுக்கு நிறுத்தி வைக்குமாறு கோரிக்கை விடுத்திருந்தார். இதற்கிடையே நேற்றைய தினம் அதிரடியாகத் தங்கத்தின் இறக்குமதி வரியும் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த அடுத்தடுத்த நடவடிக்கைக்கு என்ன காரணம்.. வரும் காலத்தில் என்ன நடக்கும் என்பது தொடர்பாகப் பிரபலப் பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசன் சில முக்கிய கருத்துகளைக் கூறியுள்ளார்.

ஆனந்த் சீனிவாசன்
இது தொடர்பாக ஆனந்த் சீனிவாசன் தனது யூடிப் பக்கத்தில் கூறுகையில், "தங்கம் கவிழவில்லை.. தங்கம் தொடர்பான பங்குகள் அனைத்தும் கவிழ்ந்துவிட்டது. கல்யாண் ஜூவல்லர்ஸ், டைட்டன் போன்ற பங்குகள் விலை கடுமையாகச் சரிந்துள்ளது. இதற்குக் காரணம் பிரதமர் மோடி தான். அவர் சமீபத்தில் ஹைதராபாத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அவருக்கு ஏதோ (அமெரிக்க மாஜி அதிபர்) ரூஸ்வெல்ட் ஞாபகம் வந்துருச்சு போல! ரூஸ்வெல்ட் 'தங்கமே வைத்துக் கொள்ளக்கூடாது' என்றார். அதுபோல ஒரு அறிவிப்பு வந்திருக்கிறது.
நான் இது வரும்ன்னு முன்னாடியே சொன்னேன்.. முதலில் பிரதமரின் ஆலோசகர் சொன்னார்.. அப்போதே தங்கத்தை உஷாராக வைத்து கொள்ளுங்கள் என்றேன். ஆனால், அப்ப எல்லாரும் என்ன சொன்னீங்க? 'அட்வைசர் தான் பேசினார், மோடி சொல்லல என்றீர்கள் இப்போது அவரே சொல்றாரு. தங்கம் பேட் திங், வாங்காதீர்கள் என்கிறார்கள்.
பிரச்சனை என்ன
நம்மகிட்ட வெளிநாட்டுச் செலாவணி குறைவாக இருக்கிறது. அதனால் தங்கம் இறக்குமதி செய்ய முடியாது. அதனால் ஒரு வருஷத்துக்கு தங்கம் வாங்காதீர்கள் என்று சொல்லியுள்ளார்.. ஆனால் மக்கள் ஏன் தங்கம் வாங்குகிறார்கள்? என்பதை நாம் யோசிக்க வேண்டும். நமது வங்கிகள் மார்கெட் நிலவரத்திற்கு ஏற்ப வட்டியைத் தருவதில்லை. இதன் காரணமாகவே தங்கத்தை வாங்குகிறார்கள். வங்கிகள் சரியான வட்டியைக் கொடுத்தால் யாரும் தங்கம் வாங்க மாட்டார்கள்.
நீங்க வட்டி கொடுக்க மாட்டேன் என்றால் மக்கள் தங்கள் பணத்தைப் பாதுகாக்கத் தங்கம் வாங்குகிறார்கள். முதலீட்டாளர்களும் சேர்ந்து தங்கத்தை வாங்குகிறார்கள்.. அதைப் புரிந்து கொள்ளாமல்.. 'நம்மிடம் பணம் இல்லை, அதனால் தங்கம் வாங்காதே' என்கிறார். ஆனால் மக்கள் தங்கத்தை தான் தொடர்ந்து வாங்குவார்கள். முதலில் தங்கத்தின் மீதான வரியை ஏற்றினார்கள். இப்படி ஏற்றினால் தங்கக் கடத்தல் தான் அதிகரிக்கும். இதுதான் அடுத்த ஸ்டெப்.
தங்கத்தை சரண்டர் செய்ய வேண்டுமா?
இதையும் தாண்டிப் போய்விட்டது என்றால், யாரெல்லாம் தங்கம் வைத்திருக்கிறீர்களோ.. அவர்கள் தங்கத்தைக் கொடுங்கள் எனச் சொல்லக் கூட வாய்ப்பு இருக்கு. அப்படி நிச்சயம் சொல்வார் என நான் சொல்லவில்லை.. சொல்ல வாய்ப்பு இருக்கிறது என்றே சொல்கிறேன். அடுத்து கோல்டு பீஸ் அது மாதிரி டிஜிட்டல் தங்கத்திலும் கூட கை வைக்கலாம். இதன் காரணமாகவே தங்கப் பங்குகள் விலை சரிந்துள்ளது. விலையேற்றத்தால் தங்கம் வாங்க மாட்டார்கள் என முதலீட்டாளர்கள் கருதுவதாலேயே தங்கப் பங்குகள் விலை குறைந்துள்ளது.
டாலர் பற்றாக்குறை
அதேபோல காரை அதிகம் பயன்படுத்த வேண்டாம்.. பெட்ரோல் டீசல் செலவு பண்ணாதீங்க, வொர்க் ஃப்ரம் ஹோம் பண்ணுங்க. அதிகளவில் மின்சார வாகனங்களை யூஸ் பண்ணுங்க என்றெல்லாம் சொல்கிறார். கேஸ் சிலிண்டரை பார்த்து யூஸ் பண்ணுங்க, வெளிநாட்டுக்கு போகாதீர்கள். வெளிநாட்டிற்குப் போய் கல்யாணம் செய்ய வேண்டாம் என்பதை ஸ்ட்ரிக்ட்டா சொல்றாரு. இதெல்லாம் எதைக் காட்டுகிறது என்றால் இந்தியாவில் டாலர் குறைவாக இருக்கிறது. இதை அவரை ஒப்புக்கொள்கிறார்.
ஆனால், கோரிக்கை வைத்தால் எல்லாம் மக்கள் கேட்க மாட்டார்கள். ஏற்றுமதியை அதிகரிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏற்றுமதியை அதிகரித்து, அந்நியச் செலாவணியை அதிகரிக்க வேண்டும். அதற்கு மத்திய அரசு மானியங்களைத் தர வேண்டும். இதைச் செய்யாத வரை இந்தச் சிக்கல் தீராது" என்றார்.












Click it and Unblock the Notifications