வெறும் ரூ.200 முதலீடு செய்துவிட்டு மறந்த நபர்.. இன்று பிள்ளைக்கு 89,900% லாபம்! அது எப்படி தெரியுமா?
சென்னை: சுமார் 33 ஆண்டுகளுக்கு முன்பு வெறும் ரூ.200 கொடுத்து வாங்கப்பட்ட ஒரு பங்கை இன்று 89,900% வளர்ந்து, பிரம்மாண்ட லாபத்தைக் கொடுக்கிறது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா.. வீட்டைச் சுத்தம் செய்யும்போது இந்த நபருக்கு அடித்த அதிர்ஷ்டம் அவருக்கு லாட்டரி அடித்தது போலப் பணத்தை அள்ளி கொடுத்துள்ளது. இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
வீட்டைச் சுத்தம் செய்யும்போது பழைய ஆவணங்களை நாம் கண்டுபிடிக்கலாம். இதுபோல பழைய ஆவணங்கள் கண்டறியப்பட்டால்.. அதுவும் ஒரு பங்கு சான்றிதழ் கண்டுபிடிக்கப்பட்டால் அது நமக்கு ஒரு உண்மையான பொக்கிஷமாக மாறக்கூடும். பல ஆண்டுகளுக்கு முன்பு உங்கள் பெற்றோர் அல்லது தாத்தா- பாட்டி பங்குச்சந்தையில் சிறிய முதலீடு செய்திருந்தாலும் அது மிகப் பெரிய தொகையாக மாறி இருக்கும்.

பழைய பங்குகள்
பழைய பங்கு சான்றிதழ்கள் மூலம் குடும்பத்தின் அதிர்ஷ்டமே மாறிய பல கதைகளை நாம் பார்த்து இருப்போம். அப்படியொரு சம்பவம் தான் இப்போது நடந்துள்ளது. 'தி சார்ட்டியன்ஸ்' என்ற பெயரில் இருக்கும் ட்விட்டர் யூசர் இது தொடர்பாகப் போட்ட போஸ்ட் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. அவரது உறவினர் ஒருவர் 1993ஆம் ஆண்டில் வாங்கப்பட்ட பர்ரோஸ் வெல்கம் இந்தியா லிமிடெட் என்ற நிறுவனத்தின் பழைய பங்கு பேப்பர் ஒன்றைக் கண்டுபிடித்துள்ளார்.. 30 ஆண்டுகளுக்கு முன்னர் வாங்கப்பட்ட இந்தப் பங்குகள் விலை இப்போது ஆச்சரியமளிக்கும் விதமாக ₹1,80,000ஆக உயர்ந்துள்ளது.
30 ஆண்டுகள்
இது தொடர்பாக தி சார்ட்டியன்ஸ் தனது ட்விட்டரில், "1993ஐ சேர்ந்த சிறிய காகிதத்தின் தற்போதைய மதிப்பு ₹1,80,000ஆக இருக்கிறது.. என் உறவினர் பர்ரோஸ் வெல்கம் நிறுவனத்தின் 20 பங்குகளைக் கண்டுபிடித்தார். இந்த பர்ரோஸ் வெல்கம் நிறுவனம் ஜிஎஸ்கே நிறுவனத்தோடு இணைக்கப்பட்டது. பல போனஸ்கள், ஸ்டாக் ஸ்பிளிட் மூலம் 30 ஆண்டுகளாக அது மெதுவாக வளர்ந்து இந்த நிலையை அடைந்துள்ளது" என்று பதிவிட்டுள்ளார்.
89,900% வளர்ச்சி
1993ல் பர்ரோஸ் வெல்கம் இந்தியா என்ற இந்த நிறுவனத்தின் பங்கைத் தலா ரூ.10க்கு வாங்கியுள்ளனர். பங்குச் சான்றிதழில் உள்ள தகவல்படி, இந்தப் பங்குகள் 1993 நவம்பர் 22ம் தேதி டெல்லியில் வாங்கப்பட்டன. தலா ரூ.10 விகிதம் 20 பங்குகள் ரூ.200 கொடுத்து வாங்கியுள்ளனர். இப்போது சுமார் 33 ஆண்டுகளில் 89,900% வளர்ந்து, ₹1.8 லட்சமாக இருக்கிறது.
சார்ட்டியன்ஸ் மேலும் தனது ட்விட்டரில், "இந்தப் பங்கின் அன்றைய மதிப்பு: ₹200 (பேஸ் வேல்யூ). இன்றைய மதிப்பு: ₹1,80,000 (டிவிடெண்ட் எல்லாம் சேர்த்து). இதுபோல ஒரு தொகையைப் போட்டுவிட்டு அதை அப்படியே மறந்து போனால் அதுவே பெரிய லாபத்தைக் கொடுக்கிறது" என்று பதிவிட்டுள்ளார்.
பழைய பங்குகள்
இதுபோல நீங்களும் உங்கள் பழைய ஷேர் சான்றிதழ்களைக் கண்டுபிடித்தால்.. டிமாட் கணக்கு தொடங்கி அதை டிஜிட்டல் பங்குகளாக மாற்றிக் கொள்ளுங்கள். இதன் மூலம் தேவையென்றால் அந்தப் பங்குகளை விற்று பணத்தை எடுத்துக் கொள்ளலாம். உங்களிடம் இருக்கும் நிறுவனத்தின் தற்போதைய நிலையை அறிந்து கொள்ள ஒரு பங்கு புரோகரை தொடர்பு கொள்ளுங்கள். இது கொஞ்சம் சிக்கலான நடைமுறை என்பதால் அவர்கள் என்ன செய்ய வேண்டும் என்பதைத் தெளிவாக விளக்குவார்கள். இதன் மூலம் தலைவலி இல்லாமல் பங்குகளைப் பணமாக மாற்றலாம்.!












Click it and Unblock the Notifications