தவிக்க வைக்குது தங்கம்.. திரிஷா இல்லைனா திவ்யா! வெள்ளியில் முதலீடு செய்யலாமா? நிபுணர்கள் சொல்வதென்ன?
சென்னை: அமெரிக்காவின் பரஸ்பர வரி விதிப்பு போர் பதற்றம் உள்ளிட்ட பல்வேறு காரணங்கள் காரணமாக தங்கத்தின் விலை தொடர்ந்து தாறுமாறாக உயர்ந்து வருகிறது. சர்வதேச சந்தையின் ஒரு அவுன்ஸ் சங்கத்தின் விலை 3000 டாலரை தாண்டி இருக்கிறது. இந்தியாவிலும் விரைவில் ஒரு லட்சம் ரூபாய் என்ற விலையை தங்கம் தொட்டால் கூட பெரிய விஷயம் இல்லை என்கின்றனர் பொருளாதார நிபுணர்கள். இந்த நிலையில் பாதுகாப்பாக இருக்க வேண்டும், சிறு முதலீடாகவும் இருக்க வேண்டும் என விரும்புபவர்கள் வெள்ளியில் முதலீடு செய்யலாமா? என யோசித்து வருகின்றனர். அந்த வகையில் வெள்ளி விலையின் போக்கு, அது பாதுகாப்பான முதலீடா என்பது குறித்து பார்க்கலாம்..
தங்கத்தின் விலை உயர்ந்து வரும் இந்த நேரத்தில் வெள்ளியில் முதலீடு செய்வது குறித்து பலரும் சிந்தித்து வருகின்றனர். தற்போதைய சூழலில் சர்வதேச சந்தையில் வெள்ளி விலை 2024ஆண்டிலிருந்து 35% உயர்ந்து, சென்னையில் ஒரு கிலோ 1,01,000 ரூபாயை தாண்டியுள்ளது. 2025 ஆண்டின் இறுதியில் இதன் விலை 1,10,000 ரூபாயை தொடலாம் என நிபுணர்கள் கணிக்கின்றனர்.

தொழிற்துறை தேவை (சோலார் பேனல்கள், மின்னணு பொருட்கள்) மற்றும் அமெரிக்க வட்டி விகித குறைப்பு போன்றவை வெள்ளி விலையை உயர்த்தலாம் எனும் நிலையில், தங்கத்தைப் போலவே, வெள்ளியும் பாதுகாப்பான முதலீடாக பார்க்கப்படுகிறது.
தங்கத்தின் விலையை ஒப்பிடுகையில் வெள்ளியின் விலை குறைவாகவே இருக்கிறது. தற்போது ஒரு சவரன் தங்கமே 70 ஆயிரம் ரூபாய் வரை விற்கப்படும் நிலையில் அதில் நீங்கள் கிட்டத்தட்ட 750 கிராம் அதாவது முக்கால் கிலோ வெள்ளியை வாங்கிவிடலாம். இதனால் இது சிறு முதலீட்டாளர்களுக்கு ஏற்றது என்கின்றனர் பொருளாதார நிபுணர்கள். தொழில்துறை பயன்பாடு, முதலீட்டு ஆர்வம் ஆகியவை அதிகரித்து வருவதால் வெள்ளியின் விலை உயரவும் தொடர்ந்து வாய்ப்பு இருக்கிறது.
அதே நேரத்தில் வெள்ளி விலையில் சர்வதேச பொருளாதாரம், டாலரின் மதிப்பு, தொழில் துறை தேவையைப் பொறுத்து ஏற்ற இறக்கமாகவே இருக்கும். தங்கத்தைப் போல வெள்ளி நகைகளை மறுவிற்பனை செய்வது அவ்வளவு எளிதும் கிடையாது. சில கடைகள் வெள்ளியை ஏற்காமல் கூட போக வாய்ப்பு இருக்கிறது. மேலும் தங்கத்தை போல வெள்ளியை அடகு வைக்கவோ அல்லது உடனடியாக விற்பனை செய்யவும் முடியாது. எனவே தங்கத்தின் மீதான ஆர்வம் வெள்ளி மீது அதிகம் இல்லை என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும்.
அதே நேரத்தில் அடுத்த மூன்று ஆண்டுகளில் பங்குச் சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளியை விட பிற முதலீடுகள் ஆதிக்கம் செலுத்தும் எனக் கூறப்படுகிறது. எனவே என்ன ஆனாலும் பரவாயில்லை வெள்ளி தான் வாங்குவேன் என்பவர்கள் வெள்ளி நகைகள், சிலைகள், பாத்திரங்கள், காயின்கள், பார்களை வாங்கலாம்.
அதே நேரத்தில் சேமிப்பு மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றை நீங்கள் கருத்தில் கொள்ள வேண்டியது அவசியம். வெள்ளி வாங்குவதைவிட வெள்ளி ஈடிஎஃப்களில் முதலீடு செய்வதும் நல்லது. இவை சந்தை மூலதனம் அதிகப்படுத்தும் என்பதை கவனிக்க வேண்டும். மேலும் செலவு விகிதமும் குறைவாக இருக்கும். அதே போல வெள்ளி சார்ந்த மியூச்சுவல் ஃபண்டுகளிலும் முதலீடு செய்யலாம். அடுத்தடுத்த ஆண்டுகளில் வெள்ளி விலை உயரும் என எதிர்பார்க்கப்படுவதால் ஐந்து முதல் பத்து வரையிலான நீண்டகால முதலீட்டுக்கு தற்போது வெள்ளியில் முதலீடு செய்வதும் நன்மை பயக்கும்.
என்னதான் வெள்ளியில் முதலீடு செய்தாலும் தங்கமே பாதுகாப்பான முதலீடு. விலை உயர்ந்தாலும் தங்கத்தில் முதலீடு செய்வது எப்போதுமே பாதுகாப்பு தான். தங்க இடிஎஃப்கள் அல்லது தங்க பத்திரங்களை கூட வாங்கலாம். அதே நேரத்தில் வெளியில் முதலீடு செய்வதற்கு பதிலாக நீண்ட கால லாபத்திற்கு மியூச்சுவல் ஃபண்டுகளில் கூட முதலீடு செய்யலாம். காரணம் வெள்ளியை விட மியூச்சுவல் ஃபண்டுகளும் அல்லது பிக்சட் டெபாசிட், தபால் அலுவலக மாதாந்திர வருமான திட்டம் ஆகியவற்றில் கூட முதலீடு செய்யலாம்.
2025 ஆம் ஆண்டு வெள்ளியில் முதலீடு செய்வது நல்ல வாய்ப்பாக இருந்தாலும். அதில் பெரிய அளவு லாபம் கிடைக்காது. எனவே சிறிய முதலீடாக இருந்தாலும் தங்கத்தில் முதலீடு செய்வது நல்லது அல்லது பிக்சட் டெபாசிட் செய்தால் கூட வட்டி கிடைக்கும் என்கின்றனர் பொருளாதார நிபுணர்கள்.












Click it and Unblock the Notifications