தங்கம் விலை உயர்வு என்ற பேச்சுக்கே இடமில்லை.. கப்சிப்பான முதலீட்டாளர்கள்.. பாடாய் படுத்தும் ஈரான் போர்!
தங்கம் விலை நிர்ணயம் செய்வதில் உலகளாவிய சப்ளை டிமாண்ட் தாண்டி தற்போது போர் முக்கிய காரணியாக மாறியுள்ளது. அமெரிக்கா - ஈரான் இடையேயான பேச்சுவார்த்தையின் முடிவை முதலீட்டாளர்கள் எதிர்பார்த்து காத்திருக்கும் நிலையில், தங்கத்தின் விலை தொடர்ந்து கீழே தள்ளி வருகிறது.
இது புதிதாக தங்கம் வாங்குவோருக்கு நல்ல விஷயமாக இருந்தாலும், பொருளாதாரத்திற்கும், வங்கி நிதி நிலைமைக்கும் இது நல்லது இல்லை என்பதே உண்மை. நாளை பாகிஸ்தானில் ஈரான் - அமெரிக்கா மத்தியிலான பேச்சுவார்த்தை நடத்த அனைத்து ஏற்பாடுகளும் நடந்து வரும் நிலையில் ஒட்டுமொத்த முதலீட்டு சந்தையும் தங்கம் மற்றும் வெள்ளியை ஒதுக்கிவைத்துள்ளது.

தங்கம் வெள்ளி விலை
சர்வதேச ஸ்பாட் சந்தையில் தங்கம் ஒரு அவுன்ஸுக்கு 0.75 சதவீதம் குறைந்து 4,785.51 டாலராக வர்த்தகமாகி வருகிறது. ஏப்ரல் 13-க்குப் பிறகு குறைந்த அளவை தொட்டுள்ளது. ஜூன் மாத டெலிவரிக்கான அமெரிக்க தங்க ஃபியூச்சர்ஸ் 0.3 சதவீதம் இறங்கி 4,814 டாலராக உள்ளது.
இந்திய உலோக வர்த்தக சந்தையான எம்சிஎக்ஸ் சந்தையில் (மல்டி கமாடிட்டி எக்ஸ்சேஞ்ச்) ஜூன் மாதம் முடியும் 10 கிராம் 24 கேரட் தங்கம் விலை 0.20 சதவீதம் குறைந்து 1,53,630 ரூபாய் அளவில் உள்ளது, இதேபோல் மே 5ஆம் தேதி முடியும் வெள்ளி விலை 0.53 சதவீதம் குறைந்து 2,51,200 ரூபாயாக உள்ளது.
சென்னை ரீடைல் சந்தையில் எவ்விதமான விலை மாற்றமும் இல்லாமல் 24 கேரட் 10 கிராம் தங்கம் விலை 1,56,000 ரூபாயாகவும், 22 கேரட் ஒரு பவுன் தங்கம் 1,14,400 ரூபாயாகவும் உள்ளது. இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் பொதுவாக ரீடைல் சந்தை விலைக்கும் பியூச்சர்ஸ் விலைக்கு மத்தியில் பெரிய வித்தியாசம் இருக்கும், தங்கம் விலை எதிர்காலத்தில் உயரும் என. ஆனால் போர் அச்சம் காரணமாக இரண்டுக்கும் மத்தியிலான வித்தியாசம் வெறும் 2,370 ரூபாய் வித்தியாசத்தில் உள்ளது.
ஈரான் - அமெரிக்க பேச்சுவார்த்தை
அமெரிக்கா - ஈரான் இடையேயான பேச்சுவார்த்தை தொடர்பான நிச்சயமற்ற தன்மை தங்கத்தின் விலையை தொடர்ந்து குறைத்து வருகிறது. ஹார்முஸ் நீரிணையில் அமெரிக்கா ஈரான் கொடி பறக்கும் கப்பலை பிடித்துள்ளது. இதற்கு பதிலடியாக ஈரான் மொத்த நீர்வழி பாதையையும் மூடியுள்ளது. இது கச்சா எண்ணெய் விலையை உயர்த்தி, பணவீக்க அச்சத்தை அதிகரித்து, டாலருக்கு ஆதரவாக செயல்படுகிறது. இந்த காரணங்களால் தங்கம் போன்ற பாதுகாப்பு முதலீடுகள் தனது முக்கியத்துவத்தை இழக்கின்றன.
போருக்கு பின் 8 சதவீதம் சரிவு
அமெரிக்கா - இஸ்ரேல் - ஈரான் போர் தொடங்கியதிலிருந்து தங்கம் விலை சுமார் 8 சதவீதம் குறைந்துள்ளது. முதலீட்டாளர்கள் போர் நிறுத்தம் தொடர்பான சூழ்நிலையை எதிர்பார்த்து காத்திருக்கும் நிலையில், தங்கத்தின் பாதுகாப்பு தன்மையை மெல்ல மெல்ல இழந்து வருகிறது.
இருப்பினும், அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வட்டி விகிதத்தை இறுதியில் குறைக்கும் வாய்ப்பு 45-50 சதவீதமாக உள்ளது. அடுத்த வாரம் பெட் கூட்டம் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் வட்டி விகிதம் குறைக்கப்பட்டால் டாலர் மதிப்பு குறைந்து தங்கம் விலை உயரும். இல்லையெனில் மொத்தமும் தலைகீழாக மாறும்.
உஷாரான முதலீட்டாளர்கள்
நாளை பாகிஸ்தானில் பேச்சுவார்த்தை நடைபெறுமா என்பதில் இன்னும் நிச்சயமின்மை நிலவுவதால், முதலீட்டாளர்கள் பெரிய அளவிலான முதலீட்டு முடிவுகளை எடுக்க தயங்குகின்றனர். ஹார்முஸ் நீரிணை தொடர்பான பதற்றம் தொடர்ந்தால், எண்ணெய் விலை உயர்வு மற்றும் பணவீக்க அச்சம் அதிகரிக்கும். இதேவேளையில் டாலர் மதிப்பும் உயரும் என்பதால் தங்கம் விலை தொடர்ந்து மந்த நிலைக்குள் இருக்கும்.
இதனால் தங்கம் விலை இனி வரும் நாட்களில் 2 முக்கியமான காரணிகள் அடிப்படையில் நிர்ணயம் செய்யப்படும். ஈரான் போர் நிறுத்தம் தொடர்பான முடிவுகளும், அமெரிக்க பெடரல் ரிசர்வ் எடுக்கும் முடிவுகளும் தான் தங்கம் விலையை தீர்மானிக்கும். இதனால் இந்த 2 விஷயத்தை பாலோ பண்ணாலே போதும். தங்கத்தை வாங்கலாமா..? வேண்டாமா..? என்பதை முடிவு செய்துக்கொள்ள முடியும்.












Click it and Unblock the Notifications