கடைசில ராம் - ஜானு கதையாகிடுச்சே.. வரலாற்று காணாத சரிவில் ரூபாய் மதிப்பு.. இதுக்குமேல தாங்காது சாமி!
சென்னை: இந்திய ரூபாய் மதிப்பு மீண்டும் கடுமையான நெருக்கடியை இன்று சந்தித்துள்ளது. அமெரிக்க டாலருக்கு எதிராக ரூபாய் மதிப்பு வெள்ளிக்கிழமை வர்த்தகத்தில் முக்கியமான 96 என்ற அளவைக் கடந்து சரிந்தது. ஆர்பிஐ - மத்திய வங்கி சேர்ந்து பல வகையில் டாலர் வெளியேற்றத்தை தடுத்தாலும் ரூபாய் மதிப்பு சரிவதை யாராலும் தடுக்க முடியவில்லை. இது மோடி அரசின் தோல்வியாகவே பார்க்கப்படுகிறது.
கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்து வருவது, அமெரிக்க டாலர் வலுப்பெறுவது மற்றும் அமெரிக்க மத்திய வங்கியான பெடரல் ரிசர்வ் அதிகாரிகளின் கடுமையான கருத்துகள் ஆகியவை இந்திய நாணய சந்தையில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளன.

வெள்ளிக்கிழமை வர்த்தகத்தில் இந்திய ரூபாய் 96.14 என்ற வரலாற்று குறைவான விலையை எட்டியது. வியாழக்கிழமை வர்த்தக முடிவுடன் ஒப்பிடும்போது இது சுமார் 50 காசுகள் சரிந்து மோசமான நிலையை எட்டியுள்ளது. இதேவேளையில் வெள்ளிக்கிழமை மாலையில் 95.96 என்ற அளவில் முடிவடைந்தது குறிப்பிடத்தக்கது.
ஏன் ரூபாய் மதிப்பு சரிகிறது?
அன்னிய செலாவணி சந்தை வட்டாரங்களின் தகவலின்படி, இந்தியாவிலிருந்து வெளிநாட்டு முதலீட்டு பணம் தொடர்ந்து வெளியேறி வருகிறது. அதே நேரத்தில் இந்தியாவிற்கு வரும் நேரடி வெளிநாட்டு முதலீடுகள் (FDI) எதிர்பார்த்த அளவில் இல்லை.
இதனால் நாட்டின் Balance of Payments எனப்படும் வெளிநாட்டு வரவு-செலவு சமநிலைக்கு பாதிப்பு அதிகரித்துள்ளது. உலகளாவிய பொருளாதார நிச்சயமின்மை, இந்திய பங்குச்சந்தையின் அதிக மதிப்பீடு மற்றும் AI சார்ந்த முதலீட்டு வாய்ப்புகள் இந்தியாவில் குறைவாக இருப்பதும் வெளிநாட்டு முதலீட்டாளர்களை எச்சரிக்கையாக மாற்றியுள்ளது.
கச்சா எண்ணெய் விலை அதிரடி உயர்வு
இந்திய ரூபாயின் சரிவுக்கு மிகப்பெரிய காரணமாக கச்சா எண்ணெய் விலை உயர்வு பார்க்கப்படுகிறது. உலகளாவிய அளவில் முக்கியமான பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை 3.20 சதவீதம் உயர்ந்து பேரலுக்கு 109.20 அமெரிக்க டாலராக உயர்ந்துள்ளது.
இந்தியா தனது எண்ணெய் தேவையின் பெரும்பகுதியை இறக்குமதி செய்வதால் எண்ணெய் விலை உயரும்போது, அதிக டாலர் செலவாகும். இதனால் டாலருக்கான தேவை இந்தியாவில் அதிகரித்து, ரூபாய் மதிப்பு மேலும் பலவீனமடைகிறது.
அமெரிக்க டாலர் வலிமை
அமெரிக்க டாலரின் உலகளாவிய மதிப்பை காட்டும் Dollar Index தற்போது 99.28 என்ற அளவுக்கு உயர்ந்துள்ளது. அமெரிக்க மத்திய வங்கி அதிகாரிகள் வட்டி விகிதங்களை குறைப்பதில் அவசரம் காட்டாதது மற்றும் பணவீக்கத்தை கட்டுப்படுத்த கடுமையான நிலைப்பாட்டை எடுத்திருப்பது டாலரை மேலும் வலுப்படுத்தியுள்ளது.
இதன் விளைவாக வளர்ந்து வரும் நாடுகளின் நாணயங்கள் அனைத்தும் அழுத்தத்தை சந்தித்து வருகின்றன. இந்திய ரூபாயும் அதில் முக்கியமாக பாதிக்கப்பட்டுள்ளது.
ரூபாய் மதிப்பு சரிவும், வெளிநாட்டு முதலீட்டாளர்களின் விற்பனையும் இந்திய பங்குச்சந்தையிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
ரூபாய் மதிப்பு சரிவு மூலம் சமானிய மக்களுக்கு நேரடியாக பாதிப்பு ஏற்படும். குறிப்பாக பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு, மின்னணு சாதனங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் விலை உயர வாய்ப்பு உள்ளது. அதேபோல் வெளிநாட்டில் கல்வி பயிலும் மாணவர்கள் மற்றும் வெளிநாட்டு பயணம் திட்டமிடுபவர்களுக்கும் செலவு அதிகரிக்கும்.












Click it and Unblock the Notifications