ரூ.2 லட்சத்துக்கு மேற்பட்ட பண பரிவர்த்தனைக்கு பான் கார்டு கட்டாயமாக்கப்படும்: ஜெட்லி
டெல்லி: ரூ.2 லட்சத்துக்கு அதிகமான பண பரிமாற்றங்களின்போது பான் கார்டு கட்டாயமாக்கப்படும் வகையில், அறிவிக்கை வெளியிடப்படும் என்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்தார்.
இதுகுறித்து அருண் ஜேட்லி இன்று கூறியதாவது: நிதி பற்றாக்குறை இலக்கான 3.9 சதவீதத்தை, செலவீனங்களை கட்டுப்படுத்தாமலேயே, எட்ட முடியும் என்ற நம்பிக்கையுள்ளது. ஜிஎஸ்டி சட்ட மசோதாவை நிறைவேற்ற வேண்டும் என்பதில் பாஜக ஆர்வமாக உள்ளது. நாடாளுமன்றத்தை முடக்குவதன் மூலம், எந்த மாதிரியான முன் உதாரணத்தை நாட்டுக்கு விட்டுச்செல்கிறோம் என்பதை காங்கிரஸ் கட்சிதான் முடிவு செய்ய வேண்டும்.

சீர்திருத்தங்களுக்கு முட்டுக்கட்டை போடப்படுவதாக நாடாளுமன்றத்தில் இருந்து மக்களுக்கு ஒரு செய்தி போய் சேர்ந்துவிட கூடாது. ரூ.2 லட்சத்துக்கு மேற்பட்ட பண பரிவர்த்தனைகளுக்கு பான்கார்டு கட்டாயம் என்ற அறிவிப்பை மத்திய அரசு வெளியிட உள்ளது. மேலும், நவம்பர் மாதத்தில், ஏற்றுமதி 24.43 சதவீதம் அளவுக்கும், இறக்குமதி 30.26 சதவீதம் அளவுக்கும் குறைந்துள்ளது. இவ்வாறு ஜேட்லி தெரிவித்தார்.
தற்போது, ரூ.50 ஆயிரத்துக்கு மேல் டெபாசிட் செய்யப்படும் தொகைக்கும், ரூ.1 லட்சத்துக்கு மேல் செலவிடப்படும் தொகைக்கும், பான் எண் கட்டாயம் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications