பல கோடி பேரின் சொத்து அழியும்.. மாபெரும் சரிவு தொடங்கிவிட்டது! Rich Dad Poor Dad ஆசிரியர் எச்சரிக்கை
வாஷிங்டன்: உலகளவில் இப்போது பல்வேறு மாற்றங்கள் நடந்து வருகிறது. சர்வதேச பொருளாதாரமே மொத்தமாக மாறி வருகிறது. இதற்கிடையே மனிதக் குலமே பார்க்காத மாபெரும் சரிவு தொடங்கிவிட்டதாக ரிச் டாட் பூர் டாட் ஆசிரியர் ராபர்ட் கியோசாகி எச்சரித்துள்ளார். இதை வரலாற்றின் மாபெரும் சரிவு எனக் குறிப்பிடும் அவர், இதனால் பல கோடி பேர் தங்கள் மொத்தச் சொத்தையும் இழப்பார்கள் என எச்சரித்துள்ளார்.
பொதுவாக பைனான்ஸ் சார்ந்த புத்தங்கள் பெரியளவில் விற்பனையாகாது என்ற பேச்சு இருக்கும்.. ஆனால், அதைக் காலி செய்து உலகளவில் அதிகளவில் விற்பனையான புத்தகம் தான் "Rich Dad Poor Dad.." இதை அமெரிக்காவைச் சேர்ந்த ராபர்ட் கியோசாகி என்பவர் எழுதியிருந்தார். இது உலகெங்கும் உள்ள பல்வேறு மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டுள்ளது.

எச்சரிக்கை
இந்தப் புத்தகத்தை எழுதிய கியோசாகி சர்வதேச அளவில் அறியப்படும் ஒரு பொருளாதார வல்லுநராக இருக்கிறார். இவர் கடந்த சில காலமாகவே மிக பெரிய பொருளாதாரச் சரிவு ஏற்பட போவதாகத் தொடர்ந்து எச்சரித்து வந்தார். இதற்கிடையே "வரலாற்றின் மிக மோசமான சரிவு" ஏற்கனவே தொடங்கிவிட்டதாக ராபர்ட் கியோசாகி, தனது ட்விட்டரில் எச்சரித்துள்ளார்.
தொழில்நுட்ப வளர்ச்சியாலும் சர்வதேச அளவில் நிலையற்ற தன்மை இருப்பதாலும் அமெரிக்க பொருளாதாரம் பெரும் அழுத்தத்தில் இருப்பதையே கியோசாகி சுட்டிக்காட்டியுள்ளார். செயற்கை நுண்ணறிவு காரணமாக வேலை இழப்புகள் அதிகரித்துள்ளது. அதேபோல ரியல் எஸ்டேட் சந்தைகளிலும் நெருக்கடி அதிகரித்து வருகிறது. இந்த இரண்டின் காரணமாக நிதிநிலை வேகமாக மாறி வருவதாக கியோசாகி கூறுகிறார். இதை எதிர்கொள்ளத் தயாராக இருப்பவர்கள் மட்டுமே பெரும் இழப்புகளில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள முடியும் என்று அவர் கூறினார்.
மாபெரும் சரிவு
தற்போதைய சூழலில் முதலீட்டாளர்களுக்கு வெள்ளி சிறந்த தேர்வு என்றும் சந்தை ஏற்ற இறக்கங்களின் போது தங்கத்தையும் கூட வாங்கலாம் என அவர் பதிவிட்டுள்ளார். தனது ரிச் டாட் பூர் டாட் புத்தகத்திலும் கூட அவர் இதையே தான் வலியுறுத்தி இருந்தார். அந்தப் புத்தகத்தில் அவர் ஒரு மாபெரும் சந்தை வீழ்ச்சி குறித்து எச்சரித்திருந்தார்.
அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ஆசியா முழுவதும் வேலை இழப்புகளை ஏற்படுத்தும் செயற்கை நுண்ணறிவு தான் இந்த சரிவுக்குக் காரணமாக இருக்கும் என்றும் கியோசாகி கூறுகிறார். இந்த சூழலில் முதலீட்டாளர்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள வெள்ளிதான் "சிறந்த வழி" என்று அவர் மீண்டும் வலியுறுத்துகிறார்.
வரலாற்று சரிவு
இது தொடர்பாக அவர் தனது ட்விட்டரில், "வரலாற்றில் மிக பெரிய சரிவு தொடங்கிவிட்டது. 2013ஆம் ஆண்டிலேயே, வரலாற்றில் மிக பெரிய சரிவு சீக்கிரமே வரப்போகிறது என்று கணித்திருந்தேன். துரதிர்ஷ்டவசமாக அந்தச் சரிவு இப்போது வந்துவிட்டது. அமெரிக்கா மட்டுமல்ல. ஐரோப்பாவும் ஆசியாவும் சரிந்து வருகின்றன. AI வேலைகளை அழித்துவிடும், வேலையிழப்புகள் அதிகரிக்கும்போது ரியல் எஸ்டேட் மார்கெட் கூட சரியும்.
பல கோடி பேர்
தங்கம், வெள்ளி, பிட்காயின் மற்றும் எத்தேரியம் ஆகியவற்றை அதிகமாக வாங்க வேண்டிய நேரம் இது. வெள்ளி சிறந்தது மற்றும் பாதுகாப்பானது. இன்று வெள்ளி $50. வெள்ளி விரைவில் $70 ஐ எட்டும், 2026இல் $200 ஐ எட்டும் என்று நான் கணிக்கிறேன். விஷயம் என்னவென்றால் இந்த மாபெரும் சரிவில் பல லட்சம் பேர் எல்லாவற்றையும் இழப்பார்கள். ஆனால், நீங்கள் சரியான நடவடிக்கை எடுத்து தயாராக இருந்தால்... இந்த மாபெரும் சரிவு கூட உங்களைப் பணக்காரர்களாக்கும்" என்று அவர் பதிவிட்டுள்ளார். அவரது இந்த போஸ்ட் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.
இது சாதாரணச் செய்தி மட்டுமே.. இதை முதலீட்டு ஆலோசனையாக நிச்சயம் கருதக்கூடாது. முதலீடு சார்ந்த முடிவுகளை எடுப்பதற்கு முன்பு முதலீட்டு ஆலோசகரிடம் உரிய ஆலோசனை பெறவும்.












Click it and Unblock the Notifications